சீரற்ற காலநிலையினால் 9ஆயிரத்திற்கு       அதிகமான  பொதுமக்கள் பாதிப்பு.

"அம்பன்' சூறாவளியின் தாக்கத்தில் இருந்து இலங்கை விடுபட்டது. ஒரு சில தினங்களில் காலநிலையிலும் மாற்றம்.

“அம்பன் ” சூறாவளியின் தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்பட்ட சீரற்ற காலநிலையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ள போதிலும் கடந்த சில தினங்களாக நாட்டில் காணப்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக பத்தாயிரத்திற்கு அண்மித்த பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றும் நாளையில் நாட்டில் ஆங்காங்கே மலையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் திருகோணமலை பகுதியில் இருந்து 1200 கிலோமீட்டர் தொலைவில் “அம்பன்” சூறாவளி வடகிழக்கு திசை நோக்கி நகர்கின்ற காரணத்தினால் இலங்கைக்கான தாக்கங்கள் மிக குறைவாகவே காணப்படுகின்றது. எனினும் “அம்பன்” சூறாவளியின் மறைமுக தாக்கத்தின் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக காணப்பட்ட சீரற்ற காலநிலை நேற்று தொடக்கம் மாற்றத்திற்கு வந்துள்ளது. எனினும் நேற்றைய தினம் நுவரெலியா மற்றும் பதுளை, பண்டாரவளை பகுதிகளில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில்  170 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது.

நாட்டில் ஒரு சில பகுதிகளில் மழைக்காலைநிலை காணப்பட்டதால் பண்டாரவளை, வெளிமடை பகுதிகளில் ஒருசில தாழ்நிலை பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியிருந்தன, எனினும் நேற்று முன்தினம் வரையில் ரத்தினபுரி, பலாங்கொடை, நாவலப்பிட்டி மற்றும் மலையகத்தின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன காரணமாக மக்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்ட போதிலும் நேற்றைய தினம் அப்பகுதிகளில் மழைக்காலநிலை மாற்றம் பெற்றதன் காரணத்தினால் வெள்ளநீர் வடிந்தோடும் தன்மையே காணப்பட்டது.

அத்துடன் மலையகத்தின் பல பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியத்தை அடுத்து நாட்டின் பிரதான ஆறுகள் அனைத்துமே பெருக்கெடுத்திருந்த காரணத்தினால்  நீர்நிலைகளின் வாங்கதவுகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக களனி கங்கை, களு கங்கை, கின் கங்கை, நில்வலா கங்கை, கிரிந்தி ஓயா, மாதுறு ஓயா, கும்புக்கன் ஓயா, மகாவலி கங்கை, மல்வத்து ஓயா,மஹா ஓயா ஆகியவற்றின் நீர் மட்டமும் கனமழை காரணமாக அதிகரித்திருந்தது. எனினும் நேற்றைய தினம் மழைக்காலநிலை மாற்றம் பெற்றுள்ளதை அடுத்து ஆறுகளின் நீர் மட்டமும் சற்று குறைவடைந்தே காணப்பட்டது.  எனினும் நீர்நிலை பகுதிகளை அண்மித்து வாழும் மக்கள் தொடர்ந்தும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தாழ்நில பிரதேசங்களில் வாழும் மக்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில் மேலும் இரு தினங்களுக்கு பாதுகாப்பான பகுதிகளில் வசிக்க  வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.

எனினும் மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நீடிக்கின்றது. மலையகத்தில் கடந்த சில தினங்கள் கனமழை பெய்ததன் காரணமாக மலைப்பகுதிகளில் தொடர்ந்தும் மண்சரிவுகள் ஏற்பட்ட வண்ணமே உள்ளது. ஆகவே  காலி, மாத்தளை, இரத்தினபுரி  களுத்துறை, கேகாலை, மாத்தளை, கண்டி, குருநாகல், நுவரெலியா மற்றும் கொழும்பு  ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும்  மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எனவே அபாய எச்சரிக்கை காலத்தை மேலும் சில தினங்களுக்கு நீட்டிப்பதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் குறிப்பாக இரத்தினபுரி மாவட்டம் அதி எச்சரிக்கை  பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள் நிலையில் அப்பகுதியில் பாதிப்புகள் ஏற்படும் என எதிபர்க்கப்படும் பகுதிகளில் மக்களை அகற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது. அத்துடன் மலையகத்தில் பல பகுதிகளில் பிரதான வீதிகள் மற்றும் உப வீதிகளில் பாறைகள், மண் மேடுகள் சரிந்து விழுந்துள்ள நிலையில் நேற்றைய தினம் அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

எவ்வாறு இருப்பினும் கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் பெய்த கனமழை காரணமாக மலையகத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ள காரணத்தினால் இதுவரையில்  2ஆயிரத்து 487 குடும்பங்களை சேர்ந்த ஒன்பதாயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வெள்ளம் மற்றும் மண் சரிவுகளில் முற்றுமுழுதாக 8 வீடுகளும் பகுதி அளவில் 586 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது வரையில் மண்சரிவு மற்றும் மரம் முறிந்து வீழ்ந்தமை இருவரும் படகு கவிழ்ந்ததில் ஒருவருமாக மூவர் உயிரிழந்துள்ளனர். இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.