பாதுகாப்பு படைகளை சகல துறைகளிலும் பயன்படுத்துவதே ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடாகும்

நிறைவேற்று அதிகரத்தின் தீர்மானத்தில் எவரும் தலையிட முடியாது என்கிறது அரசாங்கம்

நாட்டின் தேவைக்காக பாதுகாப்பு படைகளை சகல துறைகளிலும் இணைத்துக்கொள்வதே ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் உறுதியான நிலைப்பாடாகும். எமது கொள்கைத்திட்டம் என்ன என்பதை ஜனாதிபதி போர்வெற்றி தினத்தில் நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் தெளிவாக  தெரிவித்துவிட்டார் என்கிறது அரசாங்கம். ஜனாதிபதியின் தீர்மானங்களில் தலையிடும் அதிகாரம் எவருக்கும் இல்லையெனவும் கூறுகின்றது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியார் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதியின் போர் வெற்றிதின உரை மற்றும் இராணுவ மயமாக்கல் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போதே சந்திப்பில் இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாடு இராணுவ மயமாக்கப்படவில்லை, இராணுவ அதிகாரிகள் நியமனம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துடன் தொடர்புபட்டதாகும். அதில் எவரும் தலையிட முடியாது. ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய ஜனாதிபதி செயலாளர் தீர்மானம் எடுத்துள்ளார். இந்த நாட்டினை பிளவுபடுத்தவிடாது, தமிழ் -சிங்கள- முஸ்லிம் மற்றும் ஏனைய மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இராணுவம் எடுத்த மனிதாபிமான செயற்பாட்டின் கொண்டாட்ட நிகழ்வில் கூட எமது பாதுகாப்பு படைகளின் சேவையினை பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருப்பின் அதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்வதாக அவர் நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் தெளிவான அறிவித்தலை விடுத்தார். இது தான் ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் கொள்கைத்திட்டமாகும். அரசாங்கத்தின் நிலைப்படும் இதுவேயாகும்.

தேர்தல் ஒன்று விரைவில் நடத்தப்பட்டால் இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும். வேலை வாய்ப்புகள், கடன் திட்டங்கள் மற்றும் ஜனநாயக செயற்பாடுகள் முழுமையாக முன்னெடுக்கப்படும். அரசியல் அமைப்பு, நிறைவேற்று அதிகாரம் முழுமையாக செயற்படும் என்றால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க அனைவரதும் ஒத்துழைப்பு வேண்டும். அதேபோல் நிதி கையாளுகை  விடயத்திலும் பிரச்சினைகள் எதுவும் இல்லை. பாராளுமன்றம் இல்லாத நேரத்தில் ஜனாதிபதி அதிகாரத்தை கையாள முடியும். இது சட்டவிரோத செயற்பாடுகள் அல்ல. இந்த நாட்டில் இலட்சக் கணக்கான அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க வேண்டும், ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்க வேண்டும். இதற்கு நிதி வேண்டும். இந்த விடயங்களை கையாள பாராளுமன்றம் இல்லை என்றால் ஜனாதிபதியே அதனை கையில் எடுக்க வேண்டும்.  தேர்தலை நடத்த வேண்டாம் என நாம் கூறவில்லை, தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு எம்மால் எதனையும் கூற முடியாது. எனினும் ஜனநாயக ரீதியில் தீர்வுகள் கையாளப்பட வேண்டும் என தெரிவிக்க விரும்புகின்றோம் என்றார்.

இது குறித்து அமைச்சர் ரொமேஷ் பத்திரன கூறுகையில் :- நாடு இராணுவ மயமாகின்றது என குற்றம் சுமத்தும் எதிர்க்கட்சியினர் மறுபக்கம் தேர்தலை நடத்த வேண்டாம் என கோரி வழக்கு தாக்கலாம் செய்கின்றனர். இது எந்த விதத்தில் ஜனநாயக செயற்பாடாகும் என கேள்வி எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.