சீரற்ற காலநிலையின் தாக்கத்தினால் 20 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு

அம்பன் சூறாவளி இந்தியா- பங்களாதேஷ் நாடுகளை மோசமாக தாக்கியுள்ளது

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொடர்ச்சியாக மழைக்காலநிலை தொடர்கின்ற நிலையில் காலி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“அம்பன் “சூறாவளி வங்காளவிரிகுடாவிலிருந்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளை மிக மோசமாக தாக்கிவருகின்ற நிலையில் இவ்விரு நாடுகளிலும் அதிகளவான உயிர் சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் சூறாவளியின் தாக்கம் இலங்கைக்கு மறைமுகமான விதத்தில் பாதித்து வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்த சீரற்ற காலநிலையின் காரணமாக இதுவரையில் நாடளாவிய ரீதியில் 5ஆயிரத்து 356 குடும்பங்களை சேர்ந்த  20ஆயிரத்து 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை, அதிக காற்று மற்றும் மண்சரிவு காரணமாக 21 வீடுகள் முற்றுமுழுதாக சேதமாகியுள்ளதுடன்,  2 ஆயிரத்து 150 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் நாட்டில் அதிகாலை மற்றும் நள்ளிரவு வேளைகளில் கனமழை பெய்கின்ற காரணத்தினால் தற்போது எச்சரிக்கை பகுதிகளாக அடையாளபடுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. அத்துடன் காலி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகளவில் பாரிய அளவிலான மண்சரிவுகள் பதிவாகியுள்ள பகுதி என்ற காரணத்தினால் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் கரையோர பிரதேசங்களில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில்  காற்று வீசுவதன் காரணத்தினால் மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்கரை பிரதேசங்களில் கடலோரத்தை அண்டி வாழும் மக்கள் மிகக் கவனமாக இருக்காரும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அத்துடன் தற்போது நாட்டில் நிலவும் மழைக் காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் எனவும் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளின் நாட்டில் பெரும்பாலான  பகுதிகளில் கனமழை பெய்யக்கூடிய அதிக சாத்தியங்கள் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.