“கவாசக்கி” காய்ச்சலின் பரவல் நாட்டில் அதிகரிக்கிறது –  ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை மிகக்கவனமாக பராமரிக்க வேண்டும் என்கிறது சுகாதார அமைச்சு

சீரற்ற காலநிலை காரணமாக “கவாசக்கி” எனும் புதிய வகையிலான காய்ச்சல் பரவுவதாகவும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இந்த காய்ச்சலில் அதிகளவில் பாதிக்கக்கூடும் எனவும் சுகாதார அமைச்சின் சிறுவர் மருத்துவ பிரிவு தெரிவிக்கின்றது. உரிய நேரத்தில் மருத்துவ நடவடிக்கைகளை கையாளாது போனால் நீண்டகால இருதைய நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் இருப்பதாவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகளாவிய ரீதியில் கொவிட் -19 வைரஸ் பரவல் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதன் தாக்கம் நீங்க முன்னர் “கவாசக்கி”  எனும் புதியவகை காய்ச்சல் பரவுவதாகவும் அதன் தாக்கம்  மோசமானதாக இருக்கும் எனவும் சர்வதேச சுகாதார அமைப்புகள் அச்சம் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த “கவாசக்கி” காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது இலங்கையில் எவ்வாறான தாக்கத்தை செலுத்துகின்றது என வைத்திய நிஹால் பெரேரா கூறுகையில்,

இந்த காய்ச்சலானது ஐந்து வயதிற்கு உற்பட்ட குழந்தைகளுக்கே அதிகளவில் தாக்குகின்றது. இந்த காய்ச்சல் குறைந்த பட்சம் ஐந்து நாட்களுக்கு நீடிக்கும். சாதாரண மருந்து வில்லைகளுக்கு இந்த காய்ச்சல் குறையாது. கண்கள் சிவத்தல், நாக்கு கடும் சிவப்பு நிறத்திற்கு மாறுதல், முகம் வாடிய அதேபோல் தோல் நிறங்களில் மாற்றங்கள் ஏற்படுதல், தொண்டை வீக்கம், உடலில் சிவப்பு புள்ளிகள் உருவாதல் போன்ற அறிகுறிகளை இந்த காய்ச்சல் வெளிப்படுத்தும். அதைவிடவும் மோசமான தாக்கம் என்னவெனில் இரத்த நாளங்களில் இது தாக்கும். ஆகவே இந்த காய்ச்சலுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் பெறாது போனால் நீண்டகால இருதய நோயாலராக வாழவேண்டி வரும். ஆகவே குழந்தைகள் இந்த நோய் தாக்கத்திற்கு உள்ளாகாது பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த காய்ச்சல் கொவிட் -19 பரவலை அடுத்து உருவாக்கிய காய்ச்சல் அல்ல. இலங்கையில் இதற்கு முன்னர் வந்துள்ளது. எனினும் மிகவும் குறைந்த அளவிலானவர்களே பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் இப்பொது கொவிட் -19 பரவல் இருக்கின்ற காரணத்தினால் அதுவும் காய்ச்சல் தன்மையை வெளிப்படுத்தி வருவதால் இவ்வாறான நோய்களை உடனடியாக அடையாளம் காண கடினமாக உள்ளது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் காராணமாக இவ்வாறான நோய்கள் உருவாகின்றது. டெங்கு காய்ச்சல் பரவல் போன்று இதுவும் அதிகளவில் பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. சிறுவர்கள் காய்ச்சலில்  அதிகமாக தாக்கப்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளை கையாள வேண்டும் என்பதையே எம்மால் அறிவுறுத்த முடியும் என்றார்

Leave A Reply

Your email address will not be published.