வைத்திய பீட இறுதியாண்டு  மாணவர்களுக்கான பல்கலைக்கழக செயற்பாடுகள்  ஜூன் 15ல் ஆரம்பம்

மாணவர்கள் இரண்டுவாரம் பல்கலைக்கழக விடுதியில் தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்படுவர்

எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் வைத்திய பீட இறுதியாண்டு மாணவர்களுக்கான  பல்கலைக்கழக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுகின்றது. மாணவர்கள் பல்கலைக்கழக விடுதி அறைகளில் இரண்டுவாரம் தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்ட பின்னரே பரீட்சைகளுக்கு அனுமதிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட அதிகரிகள் கலந்துகொண்டனர். செய்தியார் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முடியாது போயுள்ளது. எனினும் தற்போது சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஜூன் மாதம் 15 ஆம் திகதி மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பரிட்சைகள் நடத்தப்பட வேண்டியுள்ள காரணத்தினால் வைத்திய பீட இறுதியாண்டு மாணவர்களை மாத்திரம் வரவழைத்து பரிட்சைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறுகையில்,

மார்ச் மாதம் நடுப்பகுதியில் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்ட நிலையில் அதில் இருந்து மீண்டும் எப்போது பல்கலைக்கழகங்களை திறப்பது என்பது குறித்து ஆராய்ந்து வந்தோம். சுகாதார பணிப்பாளர், ஜனாதிபதி மற்றும் ஏனைய அதிகாரிகள் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதில் அடுத்த மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் சகல பல்கலைக்கழகங்களினதும் வைத்திய பீட இறுதியாண்டு மாணவர்களை வரவழைத்து பரீட்சைகளை நடத்தி முடிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவருக்கு ஒரு அரை ஏன்டா வகையில் பல்கலைக்கழக விடுதிகள் வழங்கப்படும். இவ்வாறு வரவழைக்கப்படும் மாணவர்களை இரண்டு வாரம் தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்ட பின்னரே பரீட்சைகளுக்கு அனுமதிக்கப்படுவர்.

அதேபோல் பரிட்சைகள் இடம்பெறும் கால அட்டவணையிலும் மாற்றங்கள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் பரீட்சைகள் இடம்பெறும். செயன்முறை பரிட்சைகள் முடிக்காதவர்களுக்கு மேலதிக காலம் வழங்கப்படும். முதலில் வைத்திய பீட மாணவர்களுக்கு இந்த ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் சாத்தியப்பாடுகளை அவதானித்து பின்னர் ஏனைய பீட மாணவர்களை இதே செயன்முறையில் பரீட்சைகளுக்கு அனுமதிப்பது குறித்தும் கவனம் செலுத்த முடியும். இணையம் மூலமாக கல்வி முறைமைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது சாதகமான பெறுபேறுகளை வழங்கியுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் அல்லாது ஏனைய கற்கைகளுக்கும் இதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.