எதிர்க்கட்சிகள் எதிர்த்தாலும் எரிபொருள் விலை குறையப்போவதில்ல – அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன

உலக சந்தையில் கனிய எண்ணெய் பீப்பாயின் விலை குறைவடைந்துள்ளதென்பதற்காக இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம். யார் என்ன எதிர்ப்புகளை வெளிப்படுத்தினாலும் இலங்கையில் எரிபொருள் விலை குறையாது என்கிறது அரசாங்கம். நாட்டின் வருடாந்த வருமானம் 11 பில்லியனாக உள்ளபோதும் செலவு 22 பில்லியன் ரூபாய்கள் எனவும் கூறுகின்றது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று அரச திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

இறக்குமதியை கட்டுப்படுத்தும் அமைச்சரவை பத்திரம் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித பிரச்சினையும் இல்லாது இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள், அதேபோல் அதிக வரி விதிப்பில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், அதேபோல் 90 நாட்களுக்கு பின்னர் இறக்குமதிக்கான நிதியை வழங்கக்கூடிய பொருட்கள், மற்றும் எந்த சந்தர்ப்பத்திலும் இறக்குமதி செய்ய முடியாத பொருட்கள் என நான்கு முக்கிய கட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பின் கீழ் எதிர்வரும் காலங்களில் நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கையாளப்படும். ஒரு ஆண்டிற்கான ஏற்றுமதியாக 11 பில்லியன் ரூபாய்கள் எமக்கு கிடைக்கிறது, ஆனால் இறக்குமதிக்கான 22 பில்லியன் ரூபாய்கள் செலவாகின்றது. ஆகவே ஒவ்வொரு ஆண்டும் 11 பில்லியன் ரூபாய்கள் நெருக்கடியிலேயே எம்மால் பயணிக்க வேண்டியுள்ளது.

எனினும் கொவிட் -19 நெருக்கடியை அடுத்து மேலும் பல பிரச்சினைகளை நாம் சந்திக்க நேர்ந்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் ஆடை உற்பத்தி குறைந்துள்ளது, சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டுள்ளது. எனவே வெளிநாட்டு நிதி எமக்கு கிடைக்கவில்லை. ஆகவே இந்த நிலைமை நாட்டில் தொடர்ந்தாள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும். எனவே தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். விவசாயம், தேசிய உற்பத்தி என்பவற்றை பலபடுத்துவன் மூலமாக எம்மால் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும். அதற்காகவே ஏற்றுமதி, இறக்குமதியில் மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

அதேபோல் எரிபொருள் விலை குறைக்க வேண்டும் என்ற பலமான கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றனர்.ஆனால் எரிபொருள் விலை நிர்ணயம் குறித்து அரசாங்கத்திடம் வேலைத்திட்டமொன்று உள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் போல் அல்லாது நாம் மாற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை வங்கியில்  எண்ணெய் கணக்கொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் எமக்கு கிடைக்கும் நிவாரண நிதியை சேர்த்து பெற்றோலிய கூட்டுத்தாபன கடனை செலுத்துவதே எமது நோக்கமாகும். இதில் யார் என்ன எதிர்ப்பு தெரிவித்தாலும் எரிபொருள் விலை குறையாது, உலக சந்தையில் கனிய எண்ணெய் பீப்பாயின் விலை குறைவடைந்துள்ளதென்பதற்காக இங்கும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.