பாராளுமன்றத்தில் அமரர் தொண்டமானுக்கு இறுதி அஞ்சலி
ஜனாதிபதி - பிரதமர் -முன்னாள் சபாநாயகர் உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
காலம்சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு நேற்று பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் சபாநாயகர் மற்றும் ஆளும் எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்கள் என சகலரும் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
காலம்சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மரணத்தை அடுத்து நேற்று முன்தினம் பிற்பகல் அவரது பூதவுடல் பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக நேற்று காலை 10.45 மணிக்கு அவரது பூதவுடல் பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அமைச்சராக செயற்பட்ட அவருக்கு பாராளுமன்ற கௌரவிப்பு வழங்கும் முகமாக நேற்று பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டு சுகாதார முறைப்படியான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டிருந்த நிலையில் பிரதான நுழைவாயில் மரியாதை நிகழ்வுகளை முடித்துக்கொண்டு காலை 11 மணிக்கு அன்னாரின் பூதவுடல் பாராளுமன்ற பிரதான கட்டிடத்தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டது.
பிரதமர், சபாநாயகர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பூதவுடலை கொண்டுவந்தனர்
அரச மரியாதையுடன், பொலிசாரின் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்ட அமரர தொண்டமானின் பூதவுடலை பாராளுமன்ற கட்டிட நுழைவாயிலில் இருந்து பூதவுடல் வைக்கும் மண்டபம் வரையில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ, முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற கட்சிகளின் தலைவகள், அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக , அதிகாரிகள் என அனைவரும் இணைந்து எடுத்து வந்தனர். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பாரியார், புதல்வர்கள், உறவிளர்கள் என அனைவருமே நேற்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு வந்திருந்தனர். அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் என பலரும் நேற்று பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
ஜனாதிபதி- பிரதமர் பூதவுடலுக்கு அஞ்சலி
பின்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு வருகைதந்தத்துடன் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். அதனை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் அவரது பாரியாரும் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.அவர்களை தொடர்ந்து முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனை அடுத்து அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
“சௌமிய பவன்” இல் பூதவுடலுக்கு அஞ்சலி
காலை 11 மணி தொடக்கம் காலை 11.45 மணி வரையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைக்கப்பட்டிருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பூதவுடல் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதான காரியாலயமான “சௌமிய பவன்” இல் வைக்கப்பட்டது. “சௌமிய பவன்” இல் வைக்கப்பட்ட அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவும் கட்சி உறுப்பினர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வெவ்வேறு துறைசார் பிரதிநிதிகள் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.