சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின்  99 உறுப்பினர்களை இடைநிறுத்த ஐ.தே.கவின் செயற்குழுவில்  தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் பதவியில் இருந்தும் சஜித் நீக்கம்

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களாக செயற்பட்டு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் களமிறங்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் 99 பேரை கட்சியில் இருந்து இடைநிறுத்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் பதவியில் இருந்தும்  சஜித் பிரேமதாச நீக்கப்பட்டார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட வேட்புமனுவில் உள்வாங்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் உற்பட ஐக்கிய தேசிய கட்சியின்  கீழ்மட்ட உறுப்பினர்கள் என 102 பேர் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இந் நிலையில் நேற்றுக் கலை ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஸ்ரீகொத்தாவில் கூடியது. காலை 10 மணிக்கு கூடிய இந்த கூட்டத்திற்கு தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க, செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியாக இன்று செயற்பட்டு வருகின்ற  சிரேஷ்ட உறுப்பினர்கள் சகலரும் கலந்துகொண்டனர்.

கட்சியை விட்டு வெளியேறியவர்களை நீக்குவதே ஆரம்பத்தில் இருந்தே கட்சியின் ஏகமனதான தீர்மானமாக இருந்த போதிலும் மீண்டும் அவர்களுடன் இணைக்கப் பேச்சுவார்த்தை ஒன்றினை ஏற்படுத்துவது குறித்தும், தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தில் ஒன்றாக செயற்பட முடியுமா என்ற விடயங்களை கட்சியின் தலைமைத்துவம் செயற்குழுவில் கேட்டறிந்து கொண்டது. எனினும் கட்சியின் உறுப்பினர்களான இருந்தவர்கள்  வேறு கட்சியுடன் இணைந்து செயற்படும் நிலையில் அவர்களின்  உறுப்புரிமையை நீக்க வேண்டும் என்பதில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உறுதியான நிலைப்பாட்டில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இதனை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள்  என  99 பேரை கட்சியில் இருந்து இடைநிறுத்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் செயற்குழுவில் புதிதாக 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பாலித தெவரப்பெரும, ஆசு மாரசிங்க,சந்தித் சமரசிங்க, சாந்தணி நாகல கொலோன்னே, சாந்தணி கொஹெங்கே, சானக இல்லபெரும, அசிம் தஸ்மி, கஸ்தூரி அனுராதநாயக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கட்சியின் பதவிகளிலும் மாற்றங்களை செய்துள்ளனர். அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த சஜித் பிரேமதாசவின் பதவியை நீட்டிக்க  இம்முறை செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை . அந்த பதவிக்கு எவரும்  நியமிக்கப்படவும் இல்லை. கட்சியின் கணக்காளராக எம்.எஸ்.எம்.மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக ரவி கருணாநாயகவும், செயலாளராக அகிலவிராஜ் காரியவசமும் தொடர்ந்தும் செயற்படுவார்கள்.

கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன  கூறுகையில் :- ஐக்கிய தேசிய கட்சி பழமையான கட்சியாகும். கட்சிக்கென்ற யாப்பு உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுள்ள சகலரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பிற்கு அமைய செயற்பட்டாக வேண்டும். அவ்வாறு இருக்கையில் கட்சியின் யாப்பினை மீறி வேறு கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டு தேர்தல் வேட்புமனுவில் அவர்களின் பெயர்களை இணைத்துள்ள நபர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கட்சியின் தீர்மானமாக இருந்தது.

அந்த தீர்மானம் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டவர்கள் வேறு கட்சிகளில் தம்மை இணைத்துக்கொண்டுள்ள நிலையில் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பொறுப்புகளில் இருப்பார்கள் என்றால் அவர்களை இடைநிறுத்துவதற்கு செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ள வரலாறுகள் பல உள்ளன. ஆகவே  எவரும் மீண்டும் கட்சியுடன் இணைந்துகொள்ள முடியும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.