தேசிய அரசாங்கத்தில் ஒருபோதும் அங்கம் வகிக்கப்போவதில்லை – ரணில் விக்கிரமசிங்க

நாடே வைரஸ் தாக்கம் குறித்த அச்சத்தில் இருக்கின்ற நிலையில் தேர்தலை நடத்துவதோ அரசியல் செய்வதோ இப்போதைய தேவையல்ல. மக்களை பாதுகாக்க வேண்டியதே இன்று நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டிய கட்டாய தேவையாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை ஆதரிக்கின்ற காரணத்திற்காக ஒருபோதும் நாம்தேசிய அரசாங்கத்தை அமைக்கப் போவதும் இல்லை. வேறு எந்த வகையிலும் அரசாங்கத்துடன் தொடர்புபடப்போவதுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அவர் இந்த காரணிகளை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் அங்கு மேலும் கூறியதானது,

2015 பொதுத் தேர்தலில் பிரதமர் பதவி,அமைச்சரவை , அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கான பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைத்திருந்தது. ஆனால் 2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்வியின் பின்னர் எமது பாராளுமன்ற குழு அமைச்சரவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்ததுடன் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் மக்கள் ஆணையை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எவ்வாறாயினும் தற்போது எந்த வகையிலும் அரசாங்கத்துடன் நாங்கள் தொடர்புபடப்போவதில்லை. தேசிய அரசாங்கத்தை அமைக்கப் போவதும் இல்லை.
கொரோனா வைரஸ் காரணமாக பொதுத் தேர்தல்  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகமே தற்போது புதிய சவாலுக்கு முகம்கொடுத்துள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டியதே இந்த இடத்தில் நம் அனைவரினதும் பொறுப்பாக இருக்க வேண்டும். அவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுப்படுத்த வேண்டும். இதற்காகவே  நாங்கள் செயற்பட வேண்டும். எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் மக்களின் நலனுக்காக செயற்படுகின்றோம்.

உலகில் சகல நாடுகளும் கெரோனா ஒழிப்புக்காக பங்களிப்பை வழங்கி வருகின்றது. அதன் முதல் பொறுப்பு அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கே வழங்கப்படுகின்றது. இதற்காக சகல நாடுகளிலும் அரசியல் கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றது. பல நாடுகள் இந்த காலத்தில் அரசியல் போராட்டத்தில் ஈடுபடுவதில்லை. நாங்களும்  இந்த நேரத்தில் அரசாங்கத்தின் நல்ல வேலைகளை வரவேற்பதுடன் குறைபாடுகளை சுட்டிக்காட்டி விமர்சிக்க வேண்டிய இடங்களில் விமர்சிக்கவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய இடத்தில் ஒத்துழைப்பையும் வழங்கி நடந்துகொள்கின்றோம். ஆனால் இந்த சூழ்நிலையில் ஜனநாயக சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்கு நாங்கள் யாரும் இடமளிக்க போவதில்லை.

தற்போது நாட்டு மக்களின் பிரதான பிரச்சினையாக அரசியலோ ,தேர்தலோ அல்ல. உயிர் பாதுகாப்பு ,நிலையான சுகாதாரம் மற்றும் பொருளாதாரமுமே ஆகும். இந்நிலையில் 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சகல கட்சிகளும் இணைந்து தேர்தல் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். இதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. அதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதற்கான பொறுப்பை வழங்க வேண்டும். அரசாங்கம் கொரோனா ஒழிப்பு பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஆனால் தற்போது சிலர் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுவது துரதிஸ்டவசமானது. அரசாங்கத்தில் பல அமைச்சர்கள் அந்த இடத்தில் இருப்பது கவலையளிக்கின்றது. அவர்கள் எங்களால் முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகளை கூட ஏற்றுக்கொள்ளாது விமர்சனங்களை முன்வைத்து கீழ்த்தரமான அரசியல் பயணததை மேற்கொள்கின்றனர். நாங்கள் நாட்டில் பொறுப்புவாய்ந்த அரசியல் கட்சியாகும். நாங்கள் அதற்கமைய நடந்துகொள்ள வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி நாட்டை கட்டியெழுப்பிய கட்சியே. டீ.எஸ் சேனாநாயக்க இந்த நாட்டை பாதுகாப்பதற்காகவே இந்த கட்சியை உருவாக்கினார். இதன்படி ஆளும் கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியின் பொறுப்பு நாட்டை பாதுகாப்பதாகவே இருக்க வேண்டும். டட்லி சேனாநாயக்க , ஜோன் கொத்தலாவல , ஜே.ஆர்.ஜயவர்தன , டீ.பி.விஜயதுங்க , ஆர்.பிரேமதாச ஆகியோர் இந்த வழியிலேயே பயணித்தனர். அந்த வழியே எனதும் உங்களினதும் வழியாக இருக்க வேண்டும். எத்தகைய தடைகள் , சவால்கள் இருந்தாலும் நாட்டை ஐக்கிய தேசிய கட்சியினாலேயே கட்டியெழுப்ப முடியும். அந்த யதார்த்தத்தை நாங்கள் நாட்டின் முன் வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.