அமரர் தொண்டமானிற்கு அஞ்சலி செலுத்த வேவல்டணில் பெருந்திரளான மக்கள் கூட்டம்
காலம் சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நேற்று அவரது பூர்விக இல்லமான ரம்பொடை வேவல்டண் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பூர்விக இல்லத்தில் வைக்கப்பட்ட அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணதித்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நேற்று கொழும்பில் இருந்து ரம்பொடை வேவல்டண்னில் அமைந்துள்ள அவரது பூர்வீக இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.நேற்று காலை 7 மணியளவில் கொழும்பில் இருந்து உலங்குவானூர்தி மூலமாக கம்பளை பேகுலவத்தை மைதானத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட அன்னாரின் பூதவுடல் கம்பளை மைதானத்தில் இருந்து ரம்பொடை வேவல்டண்னில் அமைந்துள்ள அவரது பூர்வீக இல்லத்தற்கு வாகனப் பேரணியாக கொண்டுசெல்லப்பட்டது.
நேற்று அவரது பூதவுடல் கொண்டுவரப்படுமென அறிவிக்கப்பட்டதில் இருந்து வீதிகளின் இரு மருங்கிலும் மக்கள் கூடியிருந்ததுடன் கம்பளை மைதானத்தில் இருந்து வேவல்டண்னில் அமைந்துள்ள அவரது பூர்வீக இல்லம் வரையில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது. காலை 8 மணியளவில் கம்பளைக்கு உலங்குவானூர்தி மூலமாக கொண்டுவரப்பட்ட அமரர் தொண்டமானின் பூதவுடல் அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்படும் வேளையிலும் வீதி இருமருங்கிலும் மக்கள் பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.
நேற்றைய தினம் ரம்பொடை பிரதேசத்தில் கடைகள் பூட்டப்பட்டு சகல பகுதிகளிலும் வெள்ளை மற்றும் கறுப்புக்கொடிகள் தொங்கவிடப்பட்டிருந்தது. காலை அவரது பூரவுடல் இல்லத்திற்கு எடுத்துசெல்லப்பட்ட வேளையில் பெருந்திரளான மக்கள் வீட்டை சூழ்ந்து அமரார் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த காத்திருந்தனர். நேற்று நாள் முழுவதுமே மக்கள் கூட்டம் கூட்டமாக அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், வியாபார சமூகத்தினர் மற்றும் பலர் அவரது இல்லத்தில் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர். இன்றைய தினம் அவரது பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் நாளை அவரது பூதவுடல் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கிற்கு பிற்பகல் 4 மணிக்கு அரச மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.