கொழும்பு மாநகராட்சி மன்றத்தில் JVP யின் பிரேரணைக்கு வெற்றி

கொழும்பு மாநகராட்சி மன்றத்தின் மக்கள் விடுதலை முன்னணி (JVP)யின் உறுப்பினர்களினால் எரிபொருள் எண்ணெய் விலை குறைவின் சலுகையை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என இன்று (2020.05.29) முன்வைத்த அவசர பிரேரணை, சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன்  ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

மவிமு உறுப்பினர்கள் ஆறு பேரின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட இப் பிரேரணையை ஆளும் ஐ.தே.க. உட்பட SLPP, SLFP, சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஆமோதித்தனர்.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு ஏற்ப உள்நாட்டில் எரிபொருள் விலையைக் குறைத்து அதன் அனுகூலங்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இப் பிரேரணையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், கடந்த தினம் விசேட வர்த்தமாணியின் மூலம் 20 வகைப் பொருட்களின் வரியை உயர்த்தியதால் மக்கள் தமது கவலைகளை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களிடம்  தெரிவிப்பதாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 2020.05.21 ஆம் திகதி, பாணந்துரை நகர சபையிலும் எரிபொருள் எண்ணெயின் விலையைக் குறைக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் முன்வைத்த பிரேரனை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டமை நினைவுகூறத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.