தொண்டாவை விமர்சித்து விரல் நீட்டுவோரிடம் சில வினாக்கள்

ஹிஷாம் ஹுஸைன் புத்தளம்

இலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் முன்னாள் பா.உ. ஆறுமுகன் தொண்டமானின் மரணத்தைத் தொடர்ந்து, ஆறு நாட்களாக நடைபெற்ற இறுதி அஞ்சலி அதில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியைப்  பேணாமை தந்தையின் மரணத்தை தனது அரசியல் பிரச்சாரத்துக்காக ஜீவன் தொண்டமான் பயன்படுத்தியமை இவை அனைத்துக்கும் எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள் ஆகியன குறித்து சில விடயங்களை உங்களுடன் கலந்துரையாட விரும்புகின்றேன்.

தற்போது நிலவும் கொரோனா தொற்று காரணமாக, மரணமொன்று நிகழ்ந்தவுடன் கடைபிடிக்கப்பட வேண்டிய அனைத்து சுகாதார அறிவுருத்தல்களும் பாதுகாப்பு வழிகாட்டல்களும் தொண்டமானின் இறுதி அஞ்சலி நடவடிக்கைகளில் முற்றாக உதாசீனம் செய்யப்பட்டிருந்தது. இவற்றை விமர்சிக்கும் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. இதில் இருவேறு கருத்துக்கள் இல்லை.

இவ்வாறு விமர்சனப் பதிவுகளை எழுதுவோரிடமும் அவற்றுக்கு பின்னூட்டல் வழங்குவோரிடமும் சில வினாக்களை முன்வைக்கின்றேன். உங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சுய விமர்சனமொன்றைச் செய்துவிட்டு மேற்படி மரணம் குறித்த உங்கள் விமர்சனங்களைத் தொடருங்கள்.

>> தோட்டத் தொழிலாளருக்கு அடிப்படைச் சம்பளமாக ஒரு நாளைக்கு ரூ. 700/= கொடுக்கப்படுகின்றது. தமது ஒரு நாள் அடிப்படைச் சமபளத்தை ரூ. 1,000/= ஆகத் தருமாறு கடந்த பல வருடங்களாக நடத்தும் சம்பள உயர்வுப் போராட்டத்துக்கு ஆதரவாக ஒரு வார்த்தையாவது பேசினோமா ?

>> தோட்டப் பகுதிகளில் காணப்படும் வசதிகள் குறைந்த பொருத்தமற்ற குடியிருப்புகள் அந்த மக்கள் அறிவியல் ரீதியாக எழுவதற்குத் தடையாக உள்ளது. குடும்ப சுகாதாரமும் வாழ்க்கைத் தரமும் பேணக் கூடிய அளவுக்காவது வீடொன்றைப் பெற்றுக்கொடுக்குமாறு என்றாவது அழுத்தங்களைக் கொடுத்தோமா?

>> இலங்கையில் வசதிகளும் வளங்களும் மிகவும் குறைவான ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகள் மலையகத்தில் உள்ள தோட்டப்புறப் பாடசாலைகள் எனலாம். இந்தப் பாடசாலைகள் அடிப்படைக் கல்வி வளங்கள் நிறைந்தவைகளாக தரமுய்ர்த்தப்பட வேண்டுமென்று விரலையாவது உயர்த்தியுள்ளோமா?

அதற்குத்தான் மலையக தோட்டத் தலைவர்கள் இருக்கின்றார்கள், அவற்றை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என நீங்கள் எதிர் தர்க்கம் செய்தால், அவர்கள் தம் தலைவரின் மரண ஊர்வலத்தை எப்படி நடத்தினால் உங்களுக்கென்ன? என்ற எனது எதிர் வாதத்தையும் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

ஆறுமுகம் தொண்டமானின் இறுதி அஞ்சலியுடன் தொடர்பான நடவடிக்கைகள் அரசியல் செயற்பாடாக பார்க்கப்படுபவதனால் இன்னும் இரண்டு விடயங்களை நேரடியாகக் கேட்க விரும்புகின்றேன்.

>> மலையக தோட்டத் தொழிலார் மட்டுமல்ல அனைத்து விதமான தொழிலாளர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதும் ; அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதும் JVP / NPP போன்ற பொதுவுடமை (socialist) சமூக அரசியல் இயக்கங்கள் தான். ஆகக் குறைந்தது, அவர்களுக்குரிய சமூக அங்கீகாரத்தையாவது நாம் கொடுத்தோமா?

>> சட்டத்தை தன் சுயநலத்துக்காக வலைத்துப்போடும் மொட்டு யானை (டெலிபோன்) கூட்டணிக்கு வாக்களித்துவிட்டு, சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்தால் சாத்தியமாகுமா ?

இறுதியாக, இலங்கையின் சட்டங்கள்  அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும்; சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமத்துவமாக மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், அவ்வாறான சமதர்ம சமூகமொன்றின் உருவாக்கத்துக்காக எழுதும் ஒவ்வொரு கைகளையும் அன்பு பாராட்டி வரவேற்போம்.

Leave A Reply

Your email address will not be published.