ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் சிறுவர் பாத்திரங்களின் வகிபாகம். (புயல், பெ. ஸ்ரீகந்தநேசனின் சிறுகதை படைப்புக்களை மையப்படுத்திய ஓர் ஆய்வு)

சி. ரஞ்சிதா
உதவி விரிவுரையாளர்
மொழியியல் துறை
களனிப் பல்கலைக்கழகம்
இலங்கை

ஆய்வுச்சுருக்கம்

ஈழத்து இலக்கிய பரப்பில் சிறுகதை இலக்கிய வடிவத்திற்கு தனியொரு இடம் உண்டு. இலக்கியம் சமூக உற்பத்தியாகும் போது சமூகத்தின் ஒட்டுமொத்த வாழ்வியலும் அதன் பிரச்சினைகளும் ஒரு படைப்பாளியின் படைப்புக்களில் வெளிப்பட்டுவிடுகின்றது. இதனை தமிழ்ச் சூழலில் இலக்கிய உற்பத்திகள் பல சமூகத்தை படம்பிடித்துக்காட்டியுள்ளன.

பெண்கள், தலித்துக்கள், குழந்தைகள், சிறுவர்கள், குடும்பம் என சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அங்கம் வகிப்பவர்களை அவர்தம் வாழ்வியலுடனும் பிரச்சினைகளுடனும் இரண்டறக் கலந்து சிறுகதைகள் சித்திரித்துள்ளன. ஈழத்தின் பல பாகங்களிலும் கடந்த காலங்களில் வெளிவந்த சிறுகதைகளில் சமூகப் பிரச்சினைகள் சித்திரித்துக் காட்டப்பட்டுள்ளன. அவ்வகையில் ஈழத்து நவீன இலக்கிய பரப்பில் சிறுகதை இலக்கியங்களை படைத்து வரும் வட பகுதியை வாழ்விடமாக கொண்ட புயல் என்னும் புனைபெயரைக் கொண்ட பெ. ஸ்ரீகந்தநேசனின் சிறுகதை படைப்புக்களுக்கும் ஈழத்தில் தனியொரு இடம் உண்டு.

இவருடைய படைப்புக்கள் பெண்கள், வறுமை, காதல், யுத்தம், சமூக சீரழிவு முதலிய விரிந்த கருப்பொருட்களை கொண்டிருப்பினும் சிறுகதைகளில் வலம் வரும் சிறுவர் பாத்திரங்கள் பெறும் வகிபாகம் குறித்து ஆராய்வதாக இவ் ஆய்வுக்கட்டுரை அமைகின்றது. இவருடைய பல்வேறு சிறுகதைகளில் யுத்த காலப்பகுதியில் சிறுவர்கள் தமது உரிமைகள் மறுக்கப்பட்டு எதிர்காலத்தை தொலைத்தமை, குறிப்பிட்ட சில சிறுவர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டமை, சில சிறுவர்கள் தமது உரிமைக்காகப் போராடி வெற்றிக் கண்டமை, சிறுவர்களில் சிலர் தமக்கு கிடைத்த உரிமைகளைப் பொருட்படுத்தாமல் தவறான வழியில் சென்றமை, சமூகத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சிறுவர்கள் எதிர்நோக்கிய இன்னல்கள் என பல்வேறு பிரச்சினைகள் இப்படைப்பாளியின் சிறுகதைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அவ்வகையில் இவ் ஆய்வுக்கட்டுரையானது புயல் என்னும் படைப்பாளியின் படைப்புக்களில் சிறுவர் பாத்திரங்கள் எவ்வாறு சித்திரிக்கப்பட்டுள்ளன என்பதையும் அவற்றிட்கான காரணங்களையும் ஆராய்வதை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ் ஆய்விற்காக விபரணமுறை ஆய்வு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆய்விற்கான முதன்மை மூலங்களாக “காகங்களும் மைனாக்களும்”, “செழிப்பைத் தேடும் பறவைகள்”, “ஆகாயத்தாமரைகள்” ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் யாழ். நாவற்குழி பாடசாலை ஆண்டு மலரில் வெளிவந்த சிறுகதையும் எடுத்துக்கொள்ளப்படுவதுடன், துணைமூலங்களாக சிறுவர் தொடர்பாக வெளிவந்த ஆய்வு நூல்கள், கட்டுரைகள், இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ் ஆய்வானது இனி வரும் காலங்களில் சிறுவர் பிரச்சினைகள் அவர்தம் உரிமைகள் பற்றி அறிய விரும்புவோருக்கும், ஆய்வு செய்வோருக்கும் பயனுடையதாக அமைவதோடு பெற்றோர்களுக்கும், சமூகத்தில் சிறுவர்களை பாதுகாக்கவேண்டியவர்களுக்குமான ஒரு வழிகாட்டியாகவும் அமைந்து பயனளிக்கும் எனவும் எதிர்பார்க்கிறோம்.

 

திறவுச் சொற்கள்: இலக்கியம், சமூகம், சிறுவர், துஷ்பிரயோகம், உரிமைகள் அறிமுகம்

உலகில் வாழும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்கள் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் மீதான வன்முறைகள், துஷ்பிரயோகங்கள், உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுச் செல்கின்றன. சிறுவர்களையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமை பட்டயம் உருவாக்கப்பட்டது. இதனை 1989 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டதுடன் இலங்கை 1991 ஆம் ஆண்டு அங்கீகரித்தது. 54 உறுப்புரைகளை கொண்ட சிறுவர் உரிமை பட்டயத்தில் முதலாவது உறுப்புரை சிறுவர் எனப்படுவோர் யார் என்பதை வரைவிலக்கணப்படுத்தியுள்ளது. அதாவது “18 வயதுக்குட்பட்ட ஒவ்வொருவரும் சிறுவர், சிறுமியராக கணிக்கப்படுவர். அவர் இந்த சமவாயத்தில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா உரிமைகளையும் அனுபவித்தல் வேண்டும்.” (அருணா.து, 2011.06.09) பதினெட்டு வயதிற்கு உட்பட்ட அனைவரும் சிறுவர்கள். சிறுவர்களைப் பாதுகாப்பதும் அவர்களை நற்பிரஜைகளாக உருவாக்குவதும் உலகவாழ் மக்களாகிய எமது ஒவ்வொருவரினதும் கடப்பாடாகும். இன்று இலங்கையில் சிறுவர்களுக்காக இயங்கிவரும் “இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை”, “மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு”, “அரச சார்பற்ற நிறுவனங்கள்”, “சங்கங்கள்”, “சிறுவர் இல்லங்கள்” ஆகியன சிறுவர்களின் உரிமை; பாதுகாப்பிற்காக இயங்கி வருகின்றன. இருப்பினும் சிறுவர்களின் பிரச்சினைகள் தொடர்கதையாக இருந்து வருகின்றதை அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட; நடத்தப்பட்டு வருகின்ற துஷ்பிரயோகங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளமையை ஊடகங்கள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.

நாளைய சமுதாயத்திற்கு வழிகாட்டும் இன்றைய சிறுவர்கள் தொடர்ந்து நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதனால் அது ஒரு நாட்டின் அபிவிருத்திக்கும் பெரும் சவாலாக அமைகின்றது. சிறுவர் பிரச்சினைகள் சிலரை சிந்திக்கவைப்பதுடன் பலரை சிந்திக்க வைக்க மறுக்கின்றன. சிந்தித்த பல ஈழத்து படைப்பாளிகள் தமது படைப்பிலக்கியங்களில் அவற்றை சிறுவர் பாத்திரங்களாக கொண்டுவந்து அவர்தம் பிரச்சினைகளை அடையாளப்படுத்தியுள்ளனர். படைப்பாளிகளின் படைப்பு நோக்கத்திற்கேற்ப ஈழத்து சிறுகதைகளில் சிறுவர் பிரச்சினைகளை கணிசமான அளவு இனங்காணமுடிகின்றது. ஈழத்தின் வடபகுதியை மையப்படுத்தி சிறுகதைகளை படைத்து வரும் புயல் பெ. ஸ்ரீகந்தநேசன் என்னும் படைப்பாளியின் படைப்புக்களிலும் சிறுவர் பாத்திரங்களின் மூலமாக அவர்தம் உரிமைகள் பற்றியும் அவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் பற்றியும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சிறுவர் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட சிறுவர் பாத்திரங்களையும் தமது உரிமைகளை பெற்று வெற்றி பெற்ற சிறுவர் பாத்திரங்களையும் இப்படைப்பாளியின் படைப்புக்கள் சித்திரிக்கத்தவறவில்லை.

இவரால் படைக்கப்பட்ட சிறுவர் பாத்திரங்களில் அனேகமானோர் யுத்த காலங்களில் துஷ்பிரயோகங்களையும் இன்னல்களையும் அனுபவித்தவர்களாவர். எனினும் இக்கட்டுரையில் சிறுவர்கள் என்ற வகைப்பாட்டிற்குள் அவர்களின் பிரச்சினைகள், உரிமைகள் குறித்து மாத்திரமே ஆய்வுசெய்யப்படவுள்ளது. மாறாக யுத்த காலத்தில் சிறுவர்கள் அனுபவித்த இன்னல்கள் என நோக்கப்படவில்லை. இன்றைய காலகட்டங்களில் தொடர்கதையாக அதிகரித்து வரும் சிறுவர் பிரச்சினைகளால் உடலியல், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட;பாதிக்கப்பட்டு வருகின்ற சிறுவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும், சிறுவர்களின் உரிமைகள் குறித்த தெளிவைப் பெறுவதுமாகவே இவ் ஆய்வுக்கட்டுரை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

“காகங்களும் மைனாக்களும்” சிறுகதைத் தொகுப்பில் சிறுவர் பாத்திரங்கள்
இச்சிறுகதைத் தொகுப்பில் படைக்கப்பட்டுள்ள “பயணங்கள் முடிவதில்லை”, “பாதிச்சமணர்” என்னும் இரு சிறுகதைகளிலும் சிறுவர் பாத்திரங்கள் தமது உரிமைகளை இழந்து சமூகத்தில் நடமாடித்திரியும் பரிதாபத்திற்குரியவர்களாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். பயணங்கள் முடிவதில்லை என்னும் சிறுகதையில் வரும் விமலா என்னும் சிறுமி தனக்கு இரண்டு வயதாக இருக்கும்போது குண்டு வெடிப்பில் தன்னுடைய உறவினர்களை இழந்து அநாதையாகின்றாள். பின்னர் முதலாளி ஒருவரின் உதவியுடன் பாதுகாப்பாக வளர்ந்தாலும் காதல் வலையில் சிக்குண்டு, ஏமாற்றமடைந்து கையில் குழந்தையுடன் மரக்கறி விற்பனையிலும் பிச்சையெடுப்பதிலும் தன்னுடைய காலத்தைக் கடத்துகின்றாள். சிறுமியாகிய இவளது கையில் குழந்தை ஒன்று இருப்பது பற்றியும் இவளுக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்து, இரண்டு பிள்ளைகளும் இணைந்து பிச்சையெடுப்பது பற்றியும் இச்சிறுகதை ஆசிரியர் கதையின் பல பகுதிகளில் குறிப்பிட்டுச் செல்கின்றார். விமலாவின் மரணத்திற்கு பின்னரே இவ்விரு பிள்ளைகளும் பிச்சையெடுப்பதாக சிறுகதையாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் அந்த வீதியால் பஸ்ஸில் சென்றேன். சாவகச்சேரி பஸ்நிலையத்தில் பஸ் நின்றதும் காற்சட்டையில் பின்பக்கத்தில் இரண்டு ஓட்டைகளுடனும் கிழிந்த பொத்தானில்லாத வெளிறிப் போன சேட்டுடனும் ஊளை நாற்றத்துடனும் எனக்கு அருகில் வந்து ஏதோ என்னை முன்னர் அறிந்தவனைப் போல ‘தானங் கொடுங்க’ என்று எனது முகத்துக்கு முன்னே கையை நீட்டினான். அவனது இடுப்பில் இருந்த ஐந்து வயது மதிக்;கக்கூடிய சிறுமி இறங்கி வேறொரு பக்கத்தால் தனது கையை நீட்டி காசை வாங்கியது…” என விமலாவின் இரு பிள்ளைகள் குறித்தும் அவர்களது நிலைமை குறித்தும் கதையில் குறிப்பிடப்படுகின்றது. (பக்.01)
இச்சிறுகதையின் தொடக்கப் பகுதி இவ்வாறு அமைய, கதையை நகர்த்திக்கொண்டுச் செல்லும் ஆசிரியர் இடைப்பகுதியில் விமலா என்ற சிறுமியின் உருவத்தையும் அவளது அவலநிலையையும் பின்வருமாறு எடுத்துக்காட்டுகின்றார்.

“அந்த பிள்ளைக்கு கிட்டத்தட்ட பதினான்;கு வயது தான் இருக்கும். அவளோ ஒரு குழந்தை. ஆனால் அவளின் கையில் இன்னுமொரு குழந்தையை வைத்திருந்தாள்…குழந்தையைப் போத்தி வைப்பதற்கு துணியில்லைப் போல. அதனால் தான் குழந்தையைப் பிறந்த கோலத்துடன் கொண்டு வருகிறாள். அது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மாத்திரம் தெரிந்தது. உகண்டாவில் குவாஸ்சியக்கோர் மராஸ்மஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை நான் தொலைக்காட்சியில் பார்த்திருக்கின்றேன். அதைப் போலவே இந்த இரண்டு குழந்தைகளும் எனது கண்களுக்கு காட்சியளித்தனர்.” (பக்.02)

“பிள்ளையின் மடியில் இருந்தக் குழந்தைக் கத்தியது. பாதி பிஸ்கேட் துண்டை கொடுத்ததும் சத்தம் கொஞ்சம் அடங்கியது. மூட்டையில் இருந்து எடுத்த பிஸ்கேட் ஏதோ பிண்ணாக்குப் போல இருந்தது…(பக்.02)

மேற்படி சான்றுகளின் மூலமாக ஆராயும்போது எமது நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தினால் சிறுவர்கள் அநாதரவாக்கப்பட்டதுடன், முறையான பராமரிப்பு இன்றியும் அவதானிப்பின்றியும் கைவிடப்பட்டிருப்பதை இச்சிறுகதை சுட்டிக்காட்டுகின்றது. பேரூந்துகளிலும் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களிலும் சிறுவர்கள் பிச்சையெடுப்பது சிறுவர் துஷ்பிரயோகமாகவே அடையாளப்படுத்தப்படுகின்றது. இலங்கையில் 5-14 வயது வரை கட்டாயக் கல்விச் சட்டம் நடைமுறையில் இருக்கும்போது சிறுவர்கள் கல்வியைப் பெற பாடசாலைக்குச் செல்லாமல் பசியின்பொருட்டு பிச்சை எடுக்கின்றனர். சமூகத்தில் நடமாடித்திரியும் இவர்களை சிறுவர் நலன்களைப் பேணும் அமைப்புக்கள் கவனத்தில் கொள்ளவில்லை. உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் இல்லை. ஒரு பிள்ளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கும், போசணை குறைபாட்டிற்கும், பிச்சையெடுப்பதற்கும், சுகாதரமின்றி அழுக்குப்படிந்த தோற்றத்துடனும் வாழ்ந்து வருவதாகவே “பயணங்கள் முடிவதில்லை” என்னும் சிறுகதை சுட்டிக்காட்டுகின்றது.

இதற்கு முக்கிய காரணமாக அமைவது பெற்றோர்கள் இல்லாது அநாதையாக்கப்பட்டமையும், நாட்டில் ஏற்பட்ட யுத்த நிலைமையுமேயாகும். எனினும் சிறுவர் உரிமைகளைப் பேணவேண்டிய ஒரு நாட்டில் இவ்வாறான சிறுவர்களுக்கு பாரபட்சம் பார்க்கப்பட்டமையும் பாராமுகமாக இருக்கின்றமையும் சிறுவர் உரிமை மீறலாகவே வெளிப்படுகின்றது. சிறுகதையிலேயே ஆசிரியர் விமலா என்னும் சிறுமியின் நிலைமையைக் கண்டு “…இவளை சிறுவர் இல்லங்கள் ஒரு குழந்தைக்குத் தாய் என்ற காரணத்தால் உள்ளே அனுமதிக்கவில்லையா? ஏன் முதலாளி மன்னித்து வீட்டுக்குள் கூப்பிடக்கூடாதா? ஏன் இவள் சிறிய வயதில் காதலித்தாள்?…ஏன் பொலிஸ் நிலையங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இந்த சமுதாயம் தவறு செய்த இந்த சிறுமியை மன்னிக்க மறுக்கின்றது?” என விடைகாண முடியாத வினாக்களை கேட்கின்றார். அதுமட்டுமன்றி விமலா என்ற சிறுமியின் பிரச்சினைக்கு தீர்வுகளை முன்வைப்பதாகவும் அவர் தொடுக்கும் வினா இச்சிறுகதை பகுதியில் இடம்பெற்றுள்ளது. பிள்ளைகளுக்குப் பெற்றோர் இல்லாதிருப்பின் அல்லது பெற்றோருடன் பிள்ளை இருப்பது பாதுகாப்பற்றதாக இருப்பின், விசேட பாதுகாப்பும், ஆதரவும் பெற்றுக்கொள்வதற்குச் சிறுவர்களுக்கு உரிமை உண்டு. இருப்பினும் இச்சிறுகதையில் வரும் மூன்று சிறுவர் பாத்திரங்களும் சமூகத்தில் கைவிடப்பட்ட சிறுவர்களாகவே சித்திரிக்கப்பட்டுள்ளனர்.

“பாதிச் சமணர்” என்னும் சிறுகதையின் ஒரு சிறிய பகுதியில் இச்சிறுகதையாசிரியர் சிறுவர் பிரச்சினை ஒன்றினை பதிவுசெய்துள்ளார். இச்சிறுகதையில் வரும் ஒரு சிறுவன் பஸ்நிலையத்தில் கச்சான் விற்பதாக வருகின்ற பகுதி அவனது வறுமையை ஓரளவிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆசிரியத் தொழிலில் இருந்து ஓய்வுபெற்ற வேலாயுதம் என்பவர் யாழ்ப்பாணப் பேரூந்து நிலையத்தில் சந்தித்த சிறுவனுடன் உரையாடும் பகுதி,
“அங்கு கச்சான் விற்றுக் கொண்டு போன சிறுவனைப் பார்த்து ‘தம்பி நீ பள்ளிக்கூடம் போவதில்லையா ஏன் இப்படி சிறிய வயசில வியாபாரம் செய்ர…தம்பி நீ எத்தனை வரை படித்திருக்க?” என வினவியபோது அச்சிறுவன் பதிலுக்கு “அதுவா வீட்டுக் கஷ்டத்தினால் பத்தாம் வகுப்போட நிப்பாட்டிப்போட்டன்.” (பக்.07) என அச்சிறுவனின் நிலையைக் கூறுகின்றது. சிறுவர் உழைப்பாளிகள் தொடர்பாக குறிப்பிடும் ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமை பட்டயம் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட சிறுவர் உழைப்பாளிகளுக்கான குறைந்தபட்ச வயதெல்லையை நிறைவுசெய்த பிள்ளையாயினும் அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் முதலியவற்றிட்கு முட்டுக்கட்டையாக அமையக்கூடிய நடவடிக்கைகளிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை உண்டு என்று சுட்டிக்காட்டியுள்ளது. (பேரின்பநாதன், 2013, பக்.39)

இச்சிறுகதையில் வரும் சிறுவன் வெளிப்படையாகவே தனது வறுமையையும் தனது கல்வியை இடையிலேயே நிறுத்திக்கொள்வதையும் வேலாயுதம் என்ற பாத்திரத்திடம் கூறுகின்றான். வீட்டுக் கஷ்டம் என இச்சிறுவன் கூறிய காரணங்கள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. இந்தச் சிறுவனுக்கு வறுமை ஏற்பட்டுள்ளதால் அவனுக்கு சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள், சங்கங்கள் முதலியன ஆதரவு வழங்கியிருக்கமுடியும். பெற்றோர்கள் அவனுக்கு இருந்திருந்தால் கல்வி உரிமையைத் தொடர வாய்ப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். பதினான்கு வயது மதிக்கத்தக்க இச்சிறுவன் பத்தாம் தரத்துடன் கல்வியை நிறுத்திக் கொண்டதாகவே கூறுகின்றான். இலங்கையில் பதினான்கு வயது வரை கட்டாயக் கல்விச் சட்டம் அமுலில் உள்ளது. இருப்பினும் அச்சட்டத்தை மீறியே இப்பிள்ளை கல்வியை இடைநடுவில் நிறுத்திக்கொள்கிறது. இதற்கு முக்கிய காரணமாக அமைவது சமூகத்தில் சிறுவர் உரிமை குறித்த தெளிவின்மையும் அக்கறையின்மையுமாகும்.

“செழிப்பைத் தேடும் பறவைகள்” சிறுகதைத் தொகுப்பில் சிறுவர் பாத்திரங்கள்
இச்சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் ஆறு சிறுகதைகளில் சிறுவர் பாத்திரங்கள் வார்க்கப்பட்டுள்ளன. “பழஞ்சோறு” என்னும் சிறுகதை போர்க்காலச் சூழலில் செழிப்பான வாழ்வை இழந்து வாழும் ஒரு குடும்பத்தை சித்திரிக்கின்றது. இச்சிறுகதையில் வரும் முத்து என்ற சிறுவன் பாடசாலைக்குச் சென்று தனது கல்வி உரிமையைப் பெற்றுக் கொண்டாலும் ஆரோக்கியமான உணவு இன்றியே வாழநேரிடுகின்றது. சிறுவர்கள் தமது கல்வியை ஊக்கத்துடன் கற்றுக்கொள்ள போசணையான உணவும் ஆரோக்கியமும் மிக அவசியமாகின்றது. எனினும் பழஞ்சோறு என்னும் இக்கதை உண்மையில் பழைய உணவை மட்டுமே உட்கொண்டு பாடசாலை செல்வதும் மீண்டும் பாடசாலை விட்டு வந்து அதே பழஞ்சோற்றை மீண்டும் சாப்பிடுவதும் அச்சிறுவனின் உணவுப் பிரச்சினையாக இச்சிறுகதையில் சித்திரித்துக்காட்டப்பட்டுள்ளது.

“அக்கா உவன் பொடியன் முத்து பள்ளிக்கூடம் விட்டுவருவான். காலையிலும் பழஞ்சோத்துடன் போனவன்…” (பக்.1)

“ ‘அம்மா…அம்மா’ என அழைத்தவாறு களைத்த முகத்துடன் இன்றைக்காவது பழஞ்சோறு இல்லாமல் சுடுசோறு இருக்குமா? என்று நினைத்துகொண்டு புத்தகப்பையை விறாந்தையில் வைத்துவிட்டு உடைகளை மாற்றிக்கொண்டு அடுப்படியை நோக்கி ஓடுகின்றான். இருந்தும் அவனுக்குத் தெரியும் நான்கு நாளைக்கி ஒருக்காத்தான் புதியசோறு இருக்குமென்று ஏதோ மனத்திருப்திக்காக நினைத்துக்கொண்டான். ‘அம்மா ரொம்ப பசிக்குதம்மா இண்டைக்கு நீ ஊட்டிவிடேன்.’ என்றவாறு அம்மாவின் மடியில் இருக்க முற்பட்டபோது மாமா அதற்கிடையில் ‘இந்த அடுப்பை ஊதிப்புட்டு நா இன்னும் விடிய சாப்பிடல்ல. அந்த சட்டியில் பழஞ்சோறு கிடக்குது. எடுத்துச் சாப்பிடு’ என்றார். முத்து ‘பழஞ்சோறு…பழஞ்சோறு’ என வாய்க்குள் முணுமுணுத்தவாறு அடுப்படிக்குள் போனான்.” (பக்.06)

முத்து என்ற சிறுவன் பரிதாபத்திற்குரிய பாத்திரமாகவே எமது கண்முன் தோன்றி மறைகின்றான். வறுமையினால் வாடித்தவிக்கும் இச்சிறுவனது அம்மாவும், மாமாவும் ஒரு வேளையாவது நல்ல உணவை வழங்கமுடியாது தவிப்பதையும் தமது பட்டினியைப் பொருட்படுத்தாமல் பழஞ்சோற்றை வழங்குவதும் பெரும் துன்பத்தை ஏற்படுத்துவதோடு, யுத்த காலத்தில் போசணையற்ற உணவை பெற்றுக்கொள்வது சாதாரண ஒரு விடயமாகவே வடபகுதிவாழ் மக்களுக்கு இருந்திருக்கக்கூடும். எனினும் சிறுவர் உரிமை என நோக்கும்போது அவர்களுக்குரிய போசணையான உணவை வழங்கமுடியாமை சிறுவர் பிரச்சினையாகவே இச்சிறுகதையில் வரும் ஒரு சில சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைக்கான சமவாயத்தில் காணப்படும் 54 உறுப்புரைகளில் குறிப்பிட்ட சில உறுப்புரைகள் சிறுவர்களின் சுகாதார நலன் குறித்தும், யுத்தத்தால் இடம்பெயர்ந்து வாழும் அவர்களின் நலன் குறித்தும் சில சட்டங்களை இயற்றியுள்ளது. அதில் சிறுவர்கள் போசணை, சுகாதாரப் பேணுகை மற்றும் அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதற்கும் உரிமை உண்டு என்கிறது. மேலும் அரசாங்கத்தால் ஒரு பிள்ளை இடம்பெயர்த்தப்படுமாயின், குறித்த இடம் தொடர்பில் எல்லா வேளைகளிலும் கரிசனையுடன் செயலாற்றுவது அரசாங்கத்தின் ஒரு கடப்பாடாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. (சிறுவர் உரிமைகள், சரோஜா சிவசந்திரன், பக்.38)

“பழஞ்சோறு” என்னும் சிறுகதையில் வரும் முத்து என்ற சிறுவன் போசணை இன்றி தனது கல்வியைத் தொடர்வதையும், இடம்பெயர்ந்து மடு ஆலயத்தில் தனது குடும்பத்துடன் வாழ்வதும் கதையில் சித்திரிக்கப்படும் அதேவேளை இடம்பெயர்ந்து வாழும் காட்டுப்பகுதியில் உணவுத்தட்டுப்பாடுகள் நிலவுவதையும் வெளிப்படுத்துகின்றது. சிறுவர்கள் இவ்வாறான காட்டுப்பகுதிகளில் தொழில் வாய்ப்பற்ற பெற்றோர்களுடன் வாழும்போது அவர்களுக்குரிய ஆரோக்கியமான உணவை பெற்றுக்கொள்வது பெரும் சவாலாக இருப்பதை இச்சிறுகதையில் வரும் முத்து என்ற சிறுவனினூடாக இனங்காணமுடிகின்றது.

இச்சிறுகதைத் தொகுப்பில் வரும் “செழிப்பைத் தேடும் பறவைகள்” என்னும் சிறுகதை போர்க் காலச்சூழலில் தமது வாழ்வை செழிப்பான வாழ்வாக மாற்றமுடியாமல் தவிக்கும் இராசலட்சுமி என்னும் விதவைப் பெண்ணினதும் அவளது மூன்று பிள்ளைகளினதும் பிரச்சினைகளை பரிதாபகராக சித்திரிக்கின்றது. இச்சிறுகதையில் வரும் ராம், அலெக்ஸ், நிரோஜா ஆகிய மூன்று சிறுவர்களும் முறையே உயர்தரத்திலும், ஒன்பதாம் தரத்திலும், சாதாரணத் தரத்திலும் கல்வி கற்கின்றனர். இராசலட்சுமி கூலித்தொழில் செய்து இவர்களை படிக்கவைத்தபோதும் அடிக்கடி ஏற்பட்ட யுத்த இடப்பெயர்வுகளால் இப்பிள்ளைகளின் கல்வி மட்டுமன்றி எதிர்காலமும் பெரும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. இந்த மூன்று பிள்ளைகளும் தனது தாயுடன் வவுனியா பூந்தோட்டத்திலுள்ள அகதி முகாமில் தஞ்சம் புகுந்த இப்பிள்ளைகளின் கல்வி விபரம் பற்றி எவ்வித தகவல்களையும் இச்சிறுகதை ஆசிரியர் சுட்டிக்காட்டவில்லை. இருப்பினும் பதினெட்டு வயதை பூர்த்தி செய்யாத ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்ற அலெக்ஸ், சாதாரணத் தரத்தில் கல்வி கற்ற நிரோஜா ஆகியோர் இச்சிறுகதையில் சிறுவர் பாத்திரங்களாக இனங்காணப்படும் அதே தருணம் சிறுவர் உரிமைகளை இழந்து அமைதியான கல்விச் சூழலையும் இழந்து முகாம்களில் வாழ்வது பிரச்சினைக்குரிய ஒன்றாகும். இங்கு ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் நலன்புரி நிலையங்களும் அதன் சூழலும் எவ்வாறான தாக்கங்களை சிறுவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதையும் சூழல் ஒரு சிறுவனின் வளர்ச்சிப்பாதைக்கு எவ்வளவு பங்களிப்பு செலுத்தவேண்டும் என்பதையும் கதையின் சான்று பகுதிகளினூடாக காணலாம்.

“மண்டபமோ சாட்டுக்காக நிலத்துக்கு மட்டும் ‘சிமெண்ட்’ பூசியிருந்தது. ஆனால் ஏனையவை எல்லாம் துப்புரவு இல்லாத மாட்டுப்பட்டி போல இருந்தது… குழாய் கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்ற வித்தியாசமில்லாமல் வரிசை வரிசையாக நிற்கின்றனர்… இதே நிலைதான் மலசலக்கூடத்திலும்…” (பக். 15)

“இன்னுமொரு பக்கம் செத்தவீடு, வேறு ஒரு பக்கம் கலியாண வீடு, இன்னுமொரு பக்கம் பிறந்தநாள் வீடு, பிறிதொரு பக்கம் சாமத்திய வீடு, இன்னுமொரு பக்கம் ஒரு நாள் கொப்பிப்பாசுக்கு சனக்கூட்டம், இன்னுமொரு பக்கம் எதிர்காலம் பற்றிய எந்தவிதமான சிந்தனையும் இல்லாத இளைஞர்களின் ஆட்டமும், பாட்டமும். இன்னுமொரு பக்கம் குடும்பப் பிரச்சினை, காதல் பிரச்சினை, வேறொரு பக்கம் காதால் கேட்க முடியாத ஊத்த பேச்சுக்கள்.

முறையற்ற திருமணங்கள், பாலியல் தொடர்புகள்…இவற்றையெல்லாம் பார்த்ததும் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு திரும்பவும் மாங்குளத்துக்கே ஓடிவிட்டால் என்னவென்று அவள் மனம் நினைத்தது.” (பக். 15-16) என வரும் சிறுகதைப் பகுதி செழிப்பைத்தேடும் பறவைகள் என்ற சிறுகதையில் முகாம்களின் கட்டமைப்பும் அங்கு வாழ்வு நடத்தும் மக்களின் சமூக கட்டமைப்பும் மிகவும் பிற்போக்காக இருப்பதுடன் நாளைய சமூகத்தை வெற்றிகொண்டு சாதனை படைக்க விழையும் சிறுவர்களுக்கு அது பெரும் சவாலாக இருப்பதை தெளிவுறுத்துகின்றது. இந்த கதையின் சிறுவர் கதாப்பாத்திரங்களாக வலம் வரும் அலெக்ஸ், நிரோஜா ஆகிய இருவரும் கல்வி கற்பதற்கும் அமைதியான சுகாதாரமான இடம் இல்லாமல் தவிப்பதற்கும் அகதிமுகாம் பெரும் சவாலாக அமைகின்றது. உண்மையில் இச்சிறுகதை யுத்த சூழலில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அவலங்களை பதிவுசெய்திருப்பினும் சிறுவர்கள் பற்றியும் அவர்தம் உரிமை பற்றியும் எதிர்கால வாழ்வு குறித்தும் சிந்திக்கும்போது பிரச்சினைக்குரிய ஒரு விடயமாகவே இருக்கின்றது. அகதி முகாம்களில் ஆட்டு மந்தைகளைப் போல வாழும் மக்கள் தமது சிந்தனைகளுக்கு ஏற்ப வாழ்கின்றனர். தகாத வார்த்தைப் பிரயோகங்கள், பாலியல் தொடர்புகள் என ஆசிரியரால் சுட்டிக்காட்டப்படும் சமூக பிறழ்வுகள் அனைத்தும் சிறுவர்களை உளவியல் ரீதியாக பாதிப்படையச்செய்வதோடு அவர்களையும் அவ்வாறான பிறழ்வுகளுக்கு உட்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. இன்றைய உளவியல் ஆய்வுகளும் பிள்ளையொன்று வாழும் சூழல் அமைதியானதாகவும் பயங்கரவாதமற்றதாகவும் ஆரோக்கியமனதாகவும் விளங்கும்போதே அப்பிள்ளையின் எண்ணங்களும் செயற்பாடுகளும் சிறந்ததாக இருக்கும் என்று கூறுகின்றது. அவர்கள் சமூகத்தில் ஆளுமை உள்ளவர்களாகவும் மிளிர்வர். எனினும் இச்சிறுகதையின் சிறுவர் பாத்திரங்களின் எதிர்காலம் ஒளிமயமற்றதாக இருக்கின்றமைக்கு அதன் சூழல் தாக்கம் முக்கிய பங்கு வகித்துள்ளது.

“தொலைந்து போன உறவுகள்” என்னும் சிறுகதையும் அகதிமுகாம் வாழ்வில் சிக்குண்டு வாழ்வின் எதிர்காலங்களைத் தொலைத்து உறவுகளையும் தொலைத்து சமூகத்தில் கைவிடப்பட்ட பவானி, டயானா, தயாலி ஆகியச் சிறுமிகளின் சோகக் கதையைக் கூறுகின்றது. இச்சிறுமிகளது தாய் மஞ்சுவும் தந்தை பாலாவும் அகதி முகாமில் வாழ்க்கை நடத்துகின்றனர். பாலா இன்னுமொரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபடுவதுடன் அதனை தட்டிக்கேட்டத் தன் மனைவி மஞ்சுவை அடிக்கின்றான். ஆத்திரம், கவலைத் தாங்கமுடியாத அந்தப் பெண் தீ குளித்து இறந்து போகின்றாள். பின்னர் இம்மூன்று குழந்தைகளும் தனது பாட்டியின் அரவணைப்பில் வாழ்கின்றனர். மனைவியின் இறப்பையும் பொருட்படுத்தாது இப்பிள்ளைகளின் தந்தை பாலா இன்னுமொரு பெண்ணை நாடிச்செல்கின்றான். இச்சிறுகதையில் வரும் பவானி என்னும் சிறுமி ஐந்து வயதை உடையவள் என்றும் அவளுக்கு கீழ் தாய்ப்பாலுக்கு ஏங்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்றும் சிறுகதையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளமை அவர்கள் சிறுவர்கள் என்பதை அடையாளம் காட்டியுள்ளதுடன், இச்சிறுவர் பாத்திரங்கள் மூன்றும் பெற்றோரின் அரவணைப்பின்றி வாழ்கின்றமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்டிப்பதும் தண்டிப்பதும் சாதாரணவொரு விடயமாகும். இருப்பினும் பிள்ளைகளை காரணமின்றி தாக்குவது மற்றும் பக்குவப்படாத பிள்ளைகளைத் தாக்குவது சிறுவர் மீது இழைக்கப்படும் துஷ்பிரயோகவே கருதவேண்டியுள்ளது. கடந்த காலங்களில் பெற்றோரினால் பிள்ளைகள் தாக்கப்பட்டு மரணத்தை தழுவியமையையும் ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. இச்சிறுகதையில் வரும் பாலா தனது மனைவி மஞ்சுவுடன் ஏற்பட்ட பூசலில் அவனது பிள்ளைகளைத் தாக்குகின்றான். இதனை, “பலீர் பலீர் என்ற சப்தத்துடன் பாலாவின் கைகள் மஞ்சுவின் கன்னத்தைப் பதம் பார்த்தது…நித்திரையில் இருந்த மூன்று குழந்தைகளும் ‘அம்மா அம்மா’ என அலறிக் கொண்டே எழுந்தனர். பாலா மஞ்சு மீது இருந்த கோபத்தை மூன்று பிள்ளைகள் மீதும் காட்டினான்.” (பக். 26) என்னும் சிறுகதை பகுதி சான்றுபடுத்துகின்றது. பெற்றோர்களின் தகாத செயல்களும், அரவணைப்பற்ற தாக்குதல்களும் ஒரு பிள்ளையை உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. இப்பிள்கைள் உளரீதியாக பாதிக்கப்பட்டமை குறித்த தகவல்கள் சிறுகதையின் எப்பகுதியிலும் பதிவாகவில்லையெனினும் இன்றைய உளவியல் ஆய்வுகள் பிள்ளைகள் தொடர்ந்து பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதால் பாதிக்கப்படுகின்றனர் என்றே கூறுகின்றது. மேலும் சிறுமியாக இருக்கும் போதே பவானி என்பவள் தீராத நோயினால் பீடிக்கப்பட்டு வைத்திய செலவுக்குப் பணம் இன்றி இறந்து போகின்றாள். இவர்களது பாட்டி மீனாம்பிகையும் தீராத மனச்சுமைகளுடன் இறந்து போக பவானியின் இரண்டு தங்கைகளும் கைவிடப்பட்ட நிலையில் பக்கத்து வீட்டு முனியம்மாவால் அநாதை இல்லத்தில் சேர்க்கப்படுகின்றனர். இந்த பரிதாபகரமான சம்பவத்தை சிறுகதையின் இறுதி பகுதி பின்வருமாறு சித்திரிக்கின்றது.

“முனியம்;மாவும், மீனாம்பிகையினதும் பவானியினதும் வருகையைப் பார்த்துப் பார்த்து இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. ஏற்கனவே மிதிவெடியில் ஒரு காலை இழந்து பொய்க்காலுடன் இருக்கும் முனியம்மா இரண்டு குழந்தைகளையும் தன்னால் வளர்க்கமுடியாமல் அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டாள். அநாதை இல்லத்தில் இருந்து முனியம்மா வீடு திரும்பும்போது, இரண்டு குழந்தைகளினதும் கண்களின் மேல் இமையும் கீழ் இமையும் அவள் சென்று மறையும் வரை இணைய மறுத்தன.” (பக்.35) இச்சிறுகதையில் சமூகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள், போர், புரிந்துணர்வற்ற வாழ்வு, இலட்சியமில்லாத வாழ்க்கை என்பனவே இச்சிறுவர்களின் வாழ்வியலை கேள்விக்குறியாக்கியுள்ளது. பாலா-மஞ்சு ஆகியோருக்கிடையிலான முரண்பாடு, எதிர்காலத்தை தொலைத்து சீரற்ற முகாம் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில்; மனதை அலையவிட்டு பெண்மோகத்தினால் தனது குடும்பத்தை இழந்த பாலா, சிறுவர்களை பற்றி கவனத்தில் கொள்ளாத சிறுவர் உரிமைகளைப் பேணும் அமைப்புக்கள் என சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரதும் அசமந்த போக்குகளே இச்சிறுகதையில் பாதிக்கப்பட்ட பவானி, டயானா, தயாலி ஆகிய சிறுவர் பாத்திரங்கள் ஊடாக சித்திரித்துக் காட்டப்படுகின்றது.

“கனவு வாழ்வு” என்னும் கதையானது தொடர்கதையாக தலைமுறைத் தலைமுறையாக சிறுவர் அனுபவிக்கும் இன்னல்களை எடுத்துக்காட்டப்பட்டியுள்ளது. இச்சிறுகதையில் மங்கம்மா, கண்மணி, சுதா, மங்கமாவின் இரண்டு தம்பிமார்களான குமார், ரஞ்சன் ஆகியோர் சிறுவர் பாத்திரங்களாக கதையை நகர்த்திக்கொண்டுச் செல்கின்றனர். 1971 இல் ஏற்பட்ட இனக்கலவரத்தால் தனது மனைவியை பரிகொடுத்த முனியாண்டி வவுனியா காத்தான் குளத்தில் புதியவாழ்வை ஆரம்பிக்கின்றான். சிறுவர் உரிமைகளை நன்கு உணர்ந்த முனியாண்டி அதனை தமது பிள்ளைகளுக்கு வழங்கவேண்டும் என்பதற்காக பாடுபட்டு கல்வி கற்கும் உரிமைக்கு வாய்ப்பளிக்கின்றான். கதையின் ஆரம்பப்பகுதியில் சிறுவர்களாக சித்திரிக்கப்படும் மங்கம்மா, குமார், ரஞ்சன் கல்வியை தனது தந்தையின் அரவணைப்பினூடாக பெற்றுக்கொள்கின்றனர். இதனை பின்வரும் சான்றினூடாக கண்டுகொள்ளலாம்.

“அமைதியான சூழலில் முனியாண்டியின் வீடு இருந்தது… இவன் நான்கு மணிக்கு அதிகாலை நித்திரை விட்டெழுந்து பிள்ளைகளுக்குச் சமைத்து வைத்துவிட்டு அவர்களில் மங்கம்மாவை பாடசாலையிலும் குமாரையும் ரஞ்சனையும் அருகில் உள்ள பாலர் பாடசாலையிலும் கொண்டுபோய் விட்டுவிட்டு வியாபாரத்திற்கு புறப்பட்டு விடுவான்.” (பக்.47)

இம்மூன்று பிள்ளைகளினதும் தந்தை முனியாண்டி யுத்த சூழலில் சீ.ஐ.டியிடம் பிடிபட்டதால் குடும்பப் பொறுப்பும் சுமையும் சிறுமியான மங்கம்மாவின் தலையில் சுமத்தப்படுகின்றது. இச்சிறுகதையின் இறுதி பகுதிவரை மங்கம்மா தனது சிறுவர் உரிமைகளை இழந்து, வீடு வீடாக வேலை செய்து, தனது இரு தம்பிமார்களுக்கும் கல்வியை வழங்குவதுடன் வாழ்வில் எவ்வித இன்பங்களையும் அனுபவிக்காது கந்தசாமி என்பவனை திருமணம் செய்து அந்த குடிகாரானால் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றாள்.

“கெட்டிக்காரப் பெண்ணாகவே இருந்த மங்கம்மாவிற்கு பாடசாலைக்குச் சென்று பத்து வரையுமே படிக்கமுடிந்தது…” (பக்.49)

“வேலைக்குப் போய்ப் பழக்கமில்லாத இவள் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 100 ரூபா தேடுவாள். எந்த வேலையாக இருந்தாலும் செய்வாள்… அப்போது அவளுக்கு வயது பதினாறுதான் இருக்கும். அப்போது சிறுவர்களின் நலன்களைப் பேணும் நிறுவனங்கள் எங்கே?…” (பக்.50) என சிறுகதையில் வரும் மங்கம்மா என்னும் சிறுமி தனது உரிமைகளை இழந்து கைவிடப்பட்ட துன்பகரமான ஒரு பாத்திரமாக சித்திரிக்கப்பட்டுள்ளது. தனது தந்தையின் அரவணைப்பில் இல்லாமையும் யுத்த சூழலில் பலரின் சிந்தனைகள் சிறுவர்கள் குறித்து பார்க்கப்படாமையும் இச்சிறுமியின் நிலைமைக்கு காரணமாக விளங்குகின்றது.

இந்தச் சிறுகதையில் வரும் மங்கம்மா – கந்தசாமி ஆகியோரின் பிள்ளையான கண்மணி தமது பெற்றோரின் பாதுகாப்பில் இருந்தும் கல்வி, விளையாட்டு, அன்பு, அரவணைப்பின்றி வீடு வீடாக வேலை செய்வதுடன், குடிகாரத் தந்தையின் கொடுமைகளால் கொழும்பில் உள்ள ஒரு செல்வந்தர் வீட்டில் வேலைக்கமர்த்தப்படுகின்றாள்; பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படுகின்றாள்.

“ இஞ்சவாடா கந்தசாமி கொழும்பில வீட்டு வேலைக்கு ஒரு புள்ள தேவடா. பிடிச்சுத்தாரியாடா” என கந்தசாமியிடம் அவனது நண்பன் கேட்டதற்கு பதிலுக்கு கந்தசாமி “ இத முதலிலேயே சொல்லியிருக்கலாமேடா என்ர மகள் சும்மா வீடு வீடா வேலை செய்துக்கிட்டுத்தாண்டா இருக்கா அவளைக் கூட்டிக்கிட்டுத்தான் போவேன்…” (பக்.55) என்னும் உரையாடல் பகுதி பெற்றோர்களே பிள்ளைகளுக்கு எதிராக துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதை நன்கு அவதானிக்கமுடிகின்றது. மேலும் கண்மணி என்னும் இச்சிறுமி கொழும்பில் உள்ள வீட்டில் வேலைக்காரியாக நடத்தப்பட்டு கொடுமைகளுக்கு உட்பட்டுள்ளாள் என்பதை கீழ்வரும் உதாரணங்களினூடாக காணமுடிகின்றது.

“பிச்சக்காரக் குடும்பத்தில் பிறந்த உனக்குப் பாலின்ர அருமை தெரிந்திருந்தால் இப்படி கீழே போட்டிருப்பியாடி மூதேவி” (பக்.59)

“கண்மணி அங்கு மாடாய் வேலை செய்தாள். பதினைந்து வயது கண்மணி ஏதோ இருபத்தைந்து வயதைப்போல காட்சியளித்தாள். நித்திரைக்கு வழமையாகப் பன்னிரண்டு மணிக்கே போய் காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்திடுவாள். பகலில் நித்திரை என்றால் அங்கு சென்றதும் என்னவென்றே தெரியாது.” (பக்.59) என்றவாறு கூறுகின்றார். அதுமட்டுமன்றி இச்சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு மீண்டும் தனது பெற்றோரிடம் சென்றடைகின்றாள். சிறுமியாக இருக்கும்போதே சுதா என்னும் பெண் குழந்தைக்கும் தாயாகின்றாள். செ. கதிர்காமநாதனின் “வெறுஞ் சோற்றுக்கே வந்தது” என்னும் சிறுகதையில் வரும் வள்ளி என்ற சிறுமியைப் போலவே புயலின் “கனவு வாழ்வு” என்னும் சிறுகதையில் வரும் கண்மணி என்னும் சிறுமியும் கொழும்பில் வேலைக்கமர்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதை காணமுடிகின்றது. “கனவு வாழ்வு” சிறுகதையில் சிறுவர் உரிமைகளுக்கு எதிராக படைக்கப்பட்டுள்ள சிறுவர் பாத்திரங்களாக மங்கம்மா, கண்மணி ஆகியோர் விளங்கும் அதேவேளை, குமார் – ரஞ்சன் ஆகிய இருவரும் கல்வி உரிமையைப் பெற்று தமது எதிர்காலத்தை வளம் நிறைந்ததாக மாற்றியும் கொள்கின்றனர். இதனை மங்கம்மாவிற்கு அவர்கள் எழுதிய கடிதத்தின் மூலம் அறியமுடிகின்றது.

“அன்புள்ள அக்காவிற்கு நாம் எழுதிக்கொள்வது. நாங்கள் இங்கு படித்து யுஃடு பரீட்சையில் சித்தி அடைந்துவிட்டோம். அக்கா நீங்கள் எங்கள் அப்பா இறந்து போன பின்னர் இப்படி போடிங்ள விட்டதால நாம் படிச்சோம்…” (பக். 59) உண்மையில் மங்கம்மா தனது தம்பிமார்களுக்கு கல்வி உரிமையை பெற்றுக்கொடுத்து வெற்றியடையச் செய்தாள். ஆனால் தனது மகள் கண்மணிக்கு அந்த உரிமைகளை எவ்வளவு போராடியும் பெற்றுக்கொடுக்கமுடியாமல் போகின்றது. எவ்வளவுதான் வறுமை ஏற்பட்டாலும் அதனை வெற்றிக்கொண்டு சிறுவர்களுக்கான உரிமையை ஒவ்வொரு குடும்பமும் சமூகமும் வழங்கமுடியும். ஆனால் குடிகாரத் தந்தையின் கொடுமைகள், அக்கால யுத்த சூழ்நிலைகள் சிலரை வீட்டுக்குள் கைதிகளாக்குகின்றமையால் உரிமைகள் அனைத்தும் தோல்வியை பெற்று உரியவர்களிடம் செல்ல மறுக்கின்றன. இந்த நிலைமையே மங்கம்மாவிற்கும் கண்மணிக்கும் கந்தசாமி என்னும் குடிகாரனால் ஏற்படுகின்றது.

“ஏமாற்றம்” என்னும் சிறுகதை போர்காலச் சூழலில் தனது வாழ்வை வெற்றிக்கொள்ளமுடியாமல் உயிரைத் தியாகம் செய்யும் சரத் என்ற இராணுவ வீரனையும் அவனது குடும்பம் அனுபவிக்கும் இன்னல்களையும் சித்திரித்துக்காட்டுகின்றது. இச்சிறுகதையில் சரத்தின் கடைசி மகன் குணசேனன் என்னும் சிறுவன் வறுமையினால் சக மாணவர்களால் புறக்கணிக்கப்படல், விரும்பிய உணவை உண்ணமுடியாமல் கவலைப்படுதல் முதலிய பிரச்சினைகளை கொண்ட பாத்திரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளமையை காணமுடிகின்றது.

“சரத் இராணுவத்தில் சேரும் முன் சரத்தின் மனைவியோ பிள்ளைகளோ ஒரு நேரமேனும் வயிறு நிறைய சாப்பிட்டது கிடையாது. பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லும்போது ஒரு வெள்ளைச் சட்டைக்கு மாற்றுச் சட்டை அணிந்ததை கனவில்கூடக் கண்டறியார்…”

“ஒரு பொழுது சரத்தின் கடைசி மகனான குணசேனனுக்கு பாடசாலையில் நடந்த சம்பவம். பாடசாலை இடைவேளைக்கு பிள்ளைகள் அனைவரும் தேநீர் கடைக்குச் சென்று விதவிதமான தின்பண்டங்களை வாங்கி வாங்கி சாப்பிடுவார்கள். குணசேனனுக்கு இதனைப் பார்க்கும்போது வாய் ஊறும். ஆனால் என்ன செய்வது வாங்க முடியவில்லை. இவனை எவரும் நண்பனாகக்கூட ஏற்றுக்கொள்வதில்லை…” (பக்.83) என சிறுகதையில் வரும் குணசேனன் என்னும் சிறுவன் வறுமையால் புறக்கணிக்கப்படவதையும் நல்ல உணவுக்காக ஏங்குவதையும் அறியமுடிகின்றது. ஒரு பிள்ளை சமூகத்தில் புறக்கணிக்கப்படுவது என்பது அந்த பிள்ளையை உளரீதியாக தாக்கும் விடயமாகும். இது ஆரோக்கியமான சிறுவர் சமூகத்தை உருவாக்காது இப்பிள்ளையின் அனைத்து செயற்பாடுகளை முடக்கும் ஒன்றாகவும் மேற்கிளம்புகின்றது.

குணசேனன் தனது நண்பர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டதை குறிப்பிடும் சிறுகதையாசிரியர் அவன் உளரீதியாக பாதிப்படைவதை குறிப்பிடவில்லை. கதையின் இடைபகுதியில் இச்சிறுவனுக்கு வறுமை நீக்கப்பட்டு போதிய உணவு, செழிப்பான வாழ்க்கை கடைக்கப்பெற்றுள்ளது என சிறுகதை சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் சிறுவர்களை புறக்கணிக்ககூடாது என்றும் அவர்களுக்கு எல்லா சிறுவர்களைப் போலவும் உரிமைகள் கிடைக்கவேண்டும் என்றும் சிறுவர் உரிமைக்கான சமவாயம் குறிப்பிட்டுள்ளது.
“பனிக்கால மேகங்கள்” என்னும் சிறுகதையில் தர்மலிங்கத்திற்கும் மீனாட்சிக்கும் பிறந்த இரட்டை பெண்குழந்தைகளான பைரவியும், பைங்கிளியும் தமது பெற்றோர் மர்மமான முறையில் காணாமல் போன பின்னர் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திக் கொள்கின்றனர். இதனை சிறுகதை ஆசிரியர்,

“… இவர்களின் மர்மத்;துக்கு பின் பள்ளிக்கூட வாசலையே மிதித்த வரலாறு கிடையாது? அந்தளவுக்கு வறுமை அவர்களின் வீட்டில் தாண்டவமாடியது.” (பக்.92)

“பாட்டியால் சரிவர எந்த தொழிலும் செய்ய முடியாது. இரண்டு குழந்தைகளையும் பாடசாலைக்கு அனுப்பாது சந்தைக்கு மரக்கறி பொறுக்க அனுப்பினாள்…” (பக்.93) என்றவாறு குறிப்பிட்டுள்ளார்.

இச்சிறுகதையில் வரும் பைரவி என்னும் சிறுமி தரம் ஒன்பது வரை மட்டுமே கல்வியைத் தொடரமுடிந்தது என குறிப்பிடுவது கல்வி உரிமையைப் பெறமுடியாமையை சுட்டிக்காட்டுவதோடு பெற்றோரின் பாதுகாப்பின்மையும், வயது முதிர்ந்த பாட்டியுடன் வாழ்வதாலும் இவ்விரு சிறுமிகளும் கல்வியைத் தொடரமுடியாமல் இருக்கின்றது. தமது பசியைப் போக்கிக்கொள்வதற்காக மரக்கறிகளைப் பொறுக்குவதற்காகவும், விசேட நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் உணவைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தஞ்சம் புகுகின்றனர் எனவும் சிறுகதையில் கூறப்பட்டுள்ளது. சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில்கூட இச்சிறுவர்கள் பாதுகாப்பை பெறாது கைவிடப்படும் அளவிற்கு சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இருந்துள்ளனர் என்பதே பைரவி – பைங்கிளி ஆகிய சிறுமியினரது பிரச்சினைக்கு காரணமாகும்.

ஆகாயத்தாமரைகள் சிறுகதைத் தொகுப்பில் சிறுவர் பாத்திரங்கள்

இச்சிறுகதைத் தொகுப்பில் படைக்கப்பட்டுள்ள “நாளைய தேசம் உனது கைகளில்”, “படராத முல்லை”, “ஆகாயத்தாமரைகள்” ஆகிய மூன்று சிறுகதைகளிலும் சிறுவர் பாத்திரங்களும் அவர்தம் உரிமை, பிரச்சினை பற்றிய பதிவுகளும் இடம்பெறுகின்றன. நாளைய தேசம் என்னும் சிறுகதையில் வரும் பதினான்கு வயதை உடைய குமார் என்னும் சிறுவன் இரு தளங்களில் படைக்கப்பட்டுள்ளன. முதலாவது இச்சிறுவன் தனது தந்தையின் பொறுப்பற்ற நடத்தையினால் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேலைக்குச் செல்கின்றான். முதலாளிகளின் கொடுமைக்கும் உட்படுகின்றான். இரண்டாவது தளம் அப்புக்குட்டி ஐயா என்னும் முதியவரின் தன்னலமற்ற உதவியால் சிறுவர் உரிமைகளைப் பெற்று கல்வியைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் வரை செல்லும் பாத்திரமாகவும் படைக்கப்பட்டுள்ளான். சிறுவர்களுக்கான உரிமை என்னவென்பதை குமார் என்ற பாத்திரமே முன்வைப்பதாகவும் இச்சிறுகதை படைக்கப்பட்டுள்ளது. இச்சிறுவன் கதையின் ஆரம்பப் பகுதியில் எவ்வாறான சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளான் என்பதை சிறுகதையின் பின்வரும் பகுதி தெளிவுறுத்துகின்றது.

“தம்பி இஞ்ச வேலை செய்யிறதுனா இப்படிப் புத்தகமெல்லாம் படிக்கக்கூடாது. நீயே ஒரு நாள் சோற்றுக்கு வழியில்லாத, அப்பா ஓடிப்போன குடும்பத்தைச் சேர்ந்தவன். உனக்கென்னடா படிப்பு? ஒழுங்கா வேலையைப் பாரு. இல்லாட்டி சம்பளமும் சாப்பாடும் தராம அடிச்சுக் கலைச்சுப் போடுவன். என்ரை பிள்ளை படிக்குது. அதுக்கு காசு இருக்கு; உனக்கு என்னடா இருக்கு. ஒரு நேர சாப்பாட்டுக்கே லாட்டியடிக்கிற…” (பக்.40)

குமார் ஒரு சிறுவன் என்பதையும் அவனுக்கும் தனது பிள்ளையைப் போல இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் பெற தகுதி உண்டு என்பதையும் மறந்து முதலாளி தனது இலாபத்தை எண்ணி அந்தச் சிறுவனை வார்த்தைகளால் தாக்குகின்றார். முதலாளி – தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு இடையில் வேறுபாடுகாட்டப்படுவதையும் அச்சிறுவனை உளவியல் ரீதியாகத் தாக்குவதையும் நோக்கும்போது குமார் கவலைக்குரிய சிறுவர் பாத்திரமாக வார்க்கப்பட்டுள்ளான். அதுமட்டுமன்றி சிறுவர் உரிமைக்காக ஒரு சிறுவனே குரல் எழுப்புவதாகவும் தனது உரிமைகள் பெற விழைவதாகவும் குமார் சித்திரிக்கப்பட்டுள்ளான்.
“சிறுவர்களுக்குப் பாடசாலைக்குச் செல்ல உரிமையுண்டு. சுதந்திரமாக விளையாட உரிமையுண்டு. வேலைக்கு அமர்த்தக்கூடாது. பாலியல் துஷ்பிரயோகம் புரிதல் கூடாது. சுதந்திரமாக தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்த உரிமையுண்டு. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தக்கூடாது – இப்படியெல்லாம் இந்த புத்தகத்தில எழுதியிருக்கு ஆனா இஞ்ச அப்படியெதுவும் நடக்கிறதில்லையே… இங்க நான்தானே மொதலாளிக்குச் ‘சாராயம்’ வாங்கக் கடைக்குப் போறன்.” (பக்.41) என தான் வாசித்த சிறுவர் உரிமைப் பற்றிய புத்தகத்தில் உள்ளவற்றை அப்புக்குட்டி ஐயாவிடம் குமார் கூறுகின்றான்; உரிமைகளைப் பெற்றும் கொள்கின்றான்.

“படராத முல்லை” என்னும் சிறுகதையில் வரும் வனஜா என்னும் சிறுமி போதிய உணவு, கல்வி உரிமை, பெற்றோரின் அரவணைப்பு, பாதுகாப்பின்றி வாழும் துன்பகரமான சிறுவர் பாத்திரமாக படைக்கப்பட்டுள்ளாள்.

“பல நாட்களாக ஆகாரம் உண்ணாத, சிறுமியாக பாடசாலை மாணவர்களிடையே வலம் வந்து கொண்டிருந்தாள், வனஜா.”

“ஆறாந்தர மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் மாணவர்களின் சுகாதாரத்தைப் பார்க்கத்தொடங்கினார். முப்பது மாணவர்களைக்கொண்ட ஆறாந்தர வகுப்பு மாணவர்கள் அனைவரும் வெள்ளைநிற ஆடைகளுடனும், வெள்ளைநிற சப்பாத்துக்களும் அணிந்து அவனியில் வலம் வந்துக்கொண்டிருந்தார்கள். வனஜா மட்டும் மஞ்சள் காவிபடர்ந்த ஆடையுடனும் கால்களில் சப்பாத்துக்கள் இன்றியும் சோபையிழந்த முகத்துடன், சூம்பிப்போன கால்கள், கைகளுடனும் பிச்சையெடுக்கும் சிறுமியைப் போல, பயந்து பயந்து ஆசிரியரின் அருகில் வருகின்றாள்.” (பக்.16)

இச்சிறுகதையில் வனஜா என்னும் சிறுமி மட்டும் பாதிப்படைந்திருக்க ஏனைய பிள்ளைகள் தமது உரிமையைப் பெற்று வாழ்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக அமைவது இச்சிறுமி தாயை இழந்து தனது குடிகாரத் தந்தையுடன் போதைப்பொருள் கடத்தல், மதுபாவனைகளுக்கு மத்தியில் தனது வாழ்வை நடத்துவதாகும். புண்ணியமூர்த்தி இச்சிறுமியின் தந்தை ஆவார். ஐம்பது வயதை உடைய இவர் குடிபோதையில் பெண்களைக் கற்பழித்தல், வனஜாவை அடித்தல் என பல இன்னல்களை செய்கின்றார். இதனை “டீயேய், உனக்கு படிப்பும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம். வீட்டில கிடந்து வீட்டு வேலையைச் செய்…வனஜாவை இடது காலால் உதைக்கின்றார்.” என்னும் பகுதி பெற்றோரின் பொறுப்பற்ற செயல் ஒரு சிறுமியை பாதிப்படையச் செய்வதை அறியமுடிகின்றது. இதனால் உரிய கவனிப்பற்று வனஜா இறுதியில் தன்னுடைய ஆசிரியர் ஒருவரின் அரவணைப்பில் கல்வியையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்கின்றாள். இவ்வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் 800 இற்கும் அதிகமாக பதிவாகியிருப்பதுடன் அவற்றில் பெற்றோராலும் ஆசிரியராலும் தாக்கப்பட்ட முறைப்பாடுகளே அதிகம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

(www. newsfirst.lk, 09.02.2020) “படராத முல்லை”யில் படைக்கப்பட்டுள்ள சிறுமியும் தன்னுடைய தந்தையால் இவ்வாறனதொரு தாக்குதலுக்குட்படுகின்றமை கவனத்திற்குரியதாகும். இச்சிறுமிக்கு பிறவியிலேயே இதய நோய் இருப்பதுடன், தனது ஆசிரியரின் வேண்டுகோளுக்கினங்க தனது ஒரு சிறுநீரகத்தை தட்சணையாக கொடுக்கின்றாள். பின்னர் மரணத்தருவாயில் இன்னுமொரு சிறுநீரகத்தையும் தானமாக கொடுத்துவிட்டு மரணம் அடைகின்றாள். இச்சிறுகதையிலும் வனஜா என்னும் சிறுமி சிறுவர் உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுக்கும் பாத்திரமாக படைக்கப்பட்டுள்ளது.
“… எங்கட தேசத்தில சிறுவர்கள் முன்னேற வேண்டுமென்று நீங்க கஷ்டப்படுறீங்க. என்னைப் போல இந்த நாட்டில எத்தனை பேரு தங்களுக்கு நடக்கிற கொடுமையை வெளியில சொல்ல முடியாமல் தவிக்கிறாங்க. ரீச்சர் நீங்க கூட படிப்பிக்கேக்க, அடிக்கடி சொல்லுவிங்க, ‘தேசத்தின் மரபுரிமை சிறுவர்களுக்கானது’ என்று ஆனா அப்படி ஏதும் எங்களுக்குக் கிடைக்கிறதில்லை. சிறுவர்களாகிய எங்களுக்கு வீட்டிலையே விடுதலையில்லை என்றால், எப்படி ரீச்சர் நாட்டில கிடைக்கப் போகுது?…” (பக்.18)

“சிறுவர் உரிமை பற்றி பேசும் மனிதர்களுக்கு, என் அவலம் கண்ணில் படவில்லையா? சிறுவர் நலனைப் பேணும் ஆயிரத்தெட்டு நிறுவனங்கள் இருந்தும் என்ன பயன்? வசதிபடைத்த சிறுவர்களுக்கு சிறுவர் உரிமைகளும் சிறுவர் இல்லங்களும் உள்ளன. ஏன் எனக்கில்லையா? என்னை மாதிரி எத்தனை சிறுவர்கள் வீதிகளில் திரியிராங்கள் அவர்களும் ஏழைக்குடும்பத்தில் பிறந்த அநாதையானவர்களே…” (பக்.20) இவ்வாறாக வனஜா என்னும் பாத்திரம் ஏழ்மையிலும் குடிகாரத் தகப்பனின் கொடுமைகளாலும் பரிதாபத்திற்குரிய பாத்திரமாக வார்க்கப்பட்டுள்ள அதே தருணம் ஒட்டுமொத்த சிறுவர்களுக்கான உரிமைக் குரலாகவும் படைக்கப்பட்டுள்ளது.

“ஆகாயத்தாமரைகள்” என்னும் சிறுகதையில் வரும் வாசுகி – பண்டா ஆகியோரின் மகள் சுசி என்னும் சிறுமி வறுமையில் தனது தாய் வாசுகியுடன் இணைந்து பிச்சை எடுக்கின்றது. பாடசாலைக்குச் செல்ல முடியாமலும் போதிய உணவு இன்மையாலும் வாடித்தவிக்கும் இச்சிறுமி தன்னுடைய தாயின் அரவணைப்பில் முகாமில் அல்லல்படுகின்றாள்.

“…வாசுகியின் வீட்டில் மட்டும் அதே முதல் நாள் போராட்டம் முடிவடைந்து, தாயும் மகளும் ஐந்தே முக்கால் மணியளவில் தேநீர் கூட அருந்தாமல்… அம்மன் ஆலயம், சிவன் ஆலயம், பிள்ளையார் ஆலயம், ஆஞ்சநேயர் ஆலயம், வைரவர் ஆலயம் என பல ஆலயங்களுக்கு இருவரும் கையில் ஒவ்வொரு பாத்திரத்துடன் பக்தர்கள் முன் நீட்டி நீட்டி சென்றார்கள். சுசி அளவிலான பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதைப் பார்த்து வாசுகிக்கு மனத்தில் ஆத்திரம் பொங்கியெழுந்தது. என்ன செய்வது, அவளால் ஆத்திரமடைவதைவிட வேறு என்ன செய்யமுடியும்?” (பக்.34)

இச்சிறுகதையில் பண்டா – வாசுகி ஆகிய இருவரும் இனபேதமின்றி திருமணம் செய்து கொள்கின்றனர். இனப்பிரச்சினை காலப்பகுதியில் இவர்கள் இருவரும் சூழ்நிலையாலும் ஊர் மக்களின் தூற்றுதலாலும் பிரிய நேரிடுகின்றது. வாசுகி பண்டாவை பிரிந்து முகாமில் வாழ்க்கை நடத்துவதால் சுசி என்னும் சிறுமி தந்தையின் பாதுகாப்பின்றி, தாயின் அரவணைப்பில் வளமற்ற பொருளாதாரமின்றி தனக்குரிய சிறுவர் உரிமைகளை இழந்து பிச்சை எடுக்கின்றாள். சிறுவர்களை பிச்சை எடுக்க வைப்பது சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஒன்றாகும். இலங்கையில் குறிப்பாக கொழும்பை போன்ற நகர் பகுதிகளில் ஏழ்மையை வெற்றிக்கொள்ளமுடியாமல் சிறுவர்களை அவர்களின் பெற்றோர் காவிக்கொண்டு பிச்சை எடுக்க வருவதையும், ஊது பத்திகளை விற்பனை செய்து பணம் பெறுவதையும், அங்கவீனர்களாக கைவிடப்பட்ட நிலையில் பிச்சை எடுக்க வருவதையும் இன்றும் நடைமுறையில் காணமுடிகின்றது.

புயல் அவர்கள் யாழ். நாவற்குழி மகா வித்தியாலயத்தில் வெளியிடப்பட்ட 150 ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலரில் வெளியிட்டுள்ள “ஆசிரியத்துவம்” என்னும் சிறுகதை இரண்டு சிறுவர் பாத்திரங்களை வார்த்துள்ளது. இச்சிறுகதையில் வரும் முகுந்தன் என்னும் சிறுவன் தரம் பத்தில் கல்வி கற்கின்றான். இவனது வகுப்பாசிரியர் ரஞ்சிதா ஆசிரியையின் உதவியால் கல்வி கற்று வறுமையை பொருட்படுத்தாது வெற்றி பெற்றுள்ள சிறுவனாக அடையாளப்படுத்தப்படுகின்றான். இதனை பின்வரும் சிறுகதைச் சான்றுகளினூடாக அறியமுடிகின்றது.

“இண்டைக்கு, நான் தமிழ்த்தினப் போட்டியில் சிறுகதைக்கு அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பெற்றதால், பரிசு வாங்க கொழும்புக்குப் போறன். என்னை வழி நடத்தி வளர்த்த ஆசிரியருக்கிட்ட ஆசிர்வாதம் பெற வேண்டும்…” (பக்….)

“பத்தாம் வகுப்பாசிரியராக கடமையாற்றும் ரஞ்சிதா ஆசிரியரின் மாணவர்களில் முதன்மை மாணவன்தான், முகுந்தன். இவன் படிப்பிலும் புறச் செயற்பாடுகளிலும் மாதா, பிதா, குரு பக்தியிலும் தலை சிறந்தவன். இவனின் தந்தை விறகு வியாபாரியாக துவிச்சக்கர வண்டியில் வீடு வீடாக கடை கடையாக வலம் வருவார். பள்ளிக்கூட வாசலே அறியாத தாய் இவனுக்கு அடுத்து பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுடன் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியும் போராடினாள். தந்தையின் உழைப்பில் முகுந்தனை அந்த குடும்பத்தினால், படிப்பிக்க முடியவில்லை. ரஞ்சிதா ஆசிரியர், அவனது படிப்புச் செலவை முழுமையாக பொறுப்பேற்றிருந்தாள்…” (பக்….)

இச்சிறுகதையில் வரும் தனிஷ் என்ற பாத்திரம் முகுந்தனுக்கு எதிர்மறையான வாழ்வியலையும் பண்பையும் கொண்ட ஒரு சிறுவனாக சித்திரிக்கப்பட்டுள்ளான். ஒரே தரத்தில் கல்வி கற்கும் இவ்விரு சிறுவர்களில் தனிஷ் போதைப்பொருளுக்கு அடிமையாகி பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு அப்பாவியான தனது வகுப்பாசிரியரை சட்டத்தின் முன் தண்டனைப் பெற வைக்கின்றான். இச்சிறுவன் ஓரளவு வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்தவன் என்பதோடு பாடசாலையில் முறையான கற்றலில் ஈடுபடாது, பாடசாலை முடிவடைந்தவுடன் கஞ்சா குடிப்பதிலும் ஈடுபடுகின்றான். ஒரு முறை கஞ்சா குடிப்பதில் தனிஷ்க்கும் அவனது நண்பனுக்கும் ஏற்பட்ட கைகலப்பில் தனிஷின் தலையில் இரத்த காயம் ஏற்படுகின்றது. இதனை தனது பெற்றோரிடமிருந்து மறைப்பதற்காக தனது வகுப்பாசிரியர் ரஞ்சிதா அடித்ததாக குற்றம் சாட்டி அந்த ஏழை ஆசிரியரை குற்றவாளிக்குகின்றான். சிறுகதையில் ஆசிரியர்,

“சிறுவன் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு தான் பெற்றோரிடமிருந்து தப்பிக்கொள்ள எதுவும் அறியாத அப்பாவி ஆசிரியரை சிக்கலில் சிக்கவைத்தான் தனிஷ்…” (பக்…) என்று கூறுவது, சிறுவர் உரிமைகள் சிறுவர்களை மேலும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதற்கு வழிகாட்டும் சட்டமாகவும் குற்றவாளிச் சிறுவர்கள் தம்மை தப்பிக்க வைக்க சாதகமாகவும் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இலங்கையில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளனர் என்று ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொஸிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

(www.bbc.com) தனிஷ் என்ற சிறுவனும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளதாக சிறுகதையில் குறிப்பிடப்படுகின்றமை மேற்படி போதைப்பொருள் பற்றிய தகவலுடன் தொடர்புடையதாக அமைகின்றமை மனங்கொள்ளத்தக்கது. மேலும் தனிஷின் தீயப் பண்புகளை சுட்டிக்காட்டும் சிறுகதை ஆசிரியர் அதனை குறிப்பிடும்போது,
“ தனிஷ், பாடசாலை நிறைவு பெற்றதும் நிதமும் பாடசாலைக்கு அண்மையில் உள்ள ஐந்து சந்தியில் ஓர் ஆட்டோவில் குந்தியிருப்பதையும் அந்த ஆட்டோக்காரனிடம் சேர்ந்து பல சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தான். பாடசாலையில் சகபாடிகளுடன் சரியான உறவையும் பேணவில்லை. ஆசிரியர் அதிபருடன் அவ்வளவாக உரையாடுபவனும் அல்லன். அதிபர் இவனின் பெற்றோருக்குப் பல தடவை தெரிவித்த போதும் அவர்கள் அவனின் சுபாவம் அப்படித்தான் என்று அதிபருடன் முரண்பாட்டை வளர்த்தனர்…” (பக்…)

தனிஷ் என்னும் சிறுவன் தவறான வழிக்குச் சென்றமைக்கு முதல் காரணம் அவனது பெற்றோர் அவனது தவறுகளுக்கு உடன்போவது போல் எதனையும் பொருட்படுத்தாமல் விட்டமையாகும். அன்பு, பணம், அரவணைப்பு ஆகிய சிறுவர் உரிமைகள் மிகையாக தனிஷிற்கு கிடைக்கப்பெற்றமையானது அவனே துஷ்பிரயோக செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வழிசமைக்கின்றது. முகுந்தன் என்னும் சிறுவன் தனது வறுமையை நன்கு உணர்ந்து ஆசிரியருக்கும் கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் தகுந்த மரியாதையை வழங்கியமையால் அவனால் ஒழுக்கமுள்ள சிறுவனாகவும் சாதனையாளனாகவும் வரமுடிந்தது.

முடிவுரை

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் புயல், பெ. ஸ்ரீகந்தநேசன் அவர்களின் சிறுகதைகள் சிறுவர் பாத்திரங்களுக்கு தனியொரு முக்கியத்துவத்தை வழங்கியுள்ளமையை மேற்படி சிறுகதை ஆதாரங்கள் தெளிவுறுத்தியுள்ளன. இன்று போர் முடிவுற்று பதினொறு வருடங்களை கடந்துள்ளபோதும் வடக்கு – கிழக்கு என்ற பாகுபாடின்றி அனைத்து பகுதிகளிலும் சிறுவர் பிரச்சினைகளும் அவர்தம் உரிமைகளும் மீறப்பட்டு வருகின்றன. இப்படைப்பாளியின் சிறுகதைகளில் கணிசமானவை போர்ச்சூழலை மையப்படுத்தி படைக்கப்பட்டிருப்பினும் இன்றைய காலகட்டத்தில் அநேகமான சிறுவர்கள் பெற்றோராலும், சமூகத்தாலும் கைவிடப்பட்டவர்களாக இருப்பதனால் யுத்தகால சமூகத்தின் படைப்பிலக்கியங்களில் சிறுவர்கள் அனுபவித்த இன்னல்கள் என எண்ணமுடியாதுள்ளது; இன்றும் சிறுவர்கள் அனுபவிக்கும் இன்னல்களாகவே இவற்றை சிந்திக்கவைத்துள்ளது. ஏனெனில் இலங்கையில் வாழும் அனைத்து சிறுவர்களுக்கும் சிறந்த கல்வி, போஷணை, பாதுகாப்பு, அரவணைப்பு, அன்பு, தன்னம்பிக்கை, அமைதியான சூழல் முதலிய உரிமைகள் கிடைக்கப்பெறுவதில்லை.

இலங்கையில் முப்பத்திற்கும் அதிகமான சிறுவர் காப்பகங்கள் இயங்கிவருவதுடன் சமூகத்தால் கைவிடப்பட்ட சிறுவர்களாகவே அவர்கள் உள்ளனர். புயல் அவர்களின் சிறுகதைகளில் ஆரோக்கியமான உணவுக்காகவும், சிறந்த கல்விக்காகவும், பெற்றோரின் அன்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும், சுகாதாரமான வாழ்வு மற்றும் சூழலுக்காகவும் ஏங்கித்தவிக்கும் சிறுவர் பாத்திரங்களை சித்திரித்துள்ளமை இன்றைய சமூகத்தில் கவிப்பாரற்று வாழும் சிறார்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல சிறுகதைகளில் சிறுவர்களே தமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளனர். எனவே சிறுவர்கள் நாளைய தேசத்தை வளம் மிக்கதாக கொண்டுச் செல்வதற்கும் ஒரு நாட்டை தன்னிறைவுடையதாக மாற்றுவதற்கும் அவர்தம் பாதுகாப்பு மற்றும் உரிமை பற்றியத் தெளிவு எமது அனைவருக்கும் தேவைப்படுகின்றது. இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சிறுகதையில் வரும் சிறுவர் பாத்திரங்களை போர்க்காலச் சிறுவர் பாத்திரங்கள் என அலட்சியமாக எண்ணாது கடந்த காலங்களில் சிறுவர் அனுபவித்த, தற்பொழுது அனுபவிக்கின்ற பிரச்சினைகளாக கருத்தில்கொண்டு எதிர்காலத்தில் துஷ்பிரயோகமற்ற சிறுவர் சமூகத்தை உருவாக்குவது எமது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

துணைநூல்கள்
1. புயல், செழிப்பைத் தேடும் பறவைகள், லலிதா கிராபிக்ஸ் வெளியீடு, இணுவில், 2005.
2. மேலது, காகங்களும் மைனாக்களும், தமிழ்ச் செய்தித் தகவல் மையத்தின் வெளியீடு, யாழ்ப்பாணம், 2006.
3. மேலது, ஆகாயத்தாமரைகள், தாய்மொழி வளர்ச்சி மன்றம், வடமாகாணம், 2014.
4. பேரின்பநாதன், ஆ., சிறுவர் துஷ்பிரயோகங்கள், கரிகணன் பிறிண்டர்ஸ், யாழ்ப்பாணம், 2013.
5. சரோஜா சிவசந்திரன், சிறுவர் உரிமைகள், மகளிர் அபிவிருத்தி நிலையம், யாழ்ப்பாணம்.
6. staff writer, “சிறுவர் வன்முறைச் சம்பவ முறைப்பாடுகள் அதிகரிப்பு”, 09.02.2020,www. newsfirst.lk.
7. அருணா.து., “இலங்கையில் சிறுவர் உரிமையும், சிறுவர்களின் பாடசாலை இடைவிலகலும்”, 09.06.2011, www.pothikai.wordpress.com.
8. “இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை – ஜனாதிபதி நடவடிக்கை”, 11.07.2019,www.bbc.com.

Leave A Reply

Your email address will not be published.