திருமலை எண்ணெய்க்குதங்களில் 25 குதங்களை பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தையில் இலங்கை

இந்தியா வசமிருக்கும் திருகோணமலை எண்ணெய்க்குதங்களில் 25 குதங்களை தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் இந்தியாவுடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றது. ஜனாதிபதியும் தனிப்பட்ட முறையில் இந்திய பிரதமரிடம் பேசவுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சாய் எண்ணெய் பீப்பாய்களில் விலை குறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் எண்ணெய் சேகரிப்பை மேலதிகமாக சேமிக்க பல நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவின் வசமிருக்கும் திருகோணமலை எண்ணெய் குதங்களை தற்காலிகமாக பெற்றுக்கொண்டு அதில் எரிபொருள் சேமிப்பை செய்வது குறித்து கடந்த ஒரு மாதகாலத்திற்கு  முன்னரே இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த அமைச்சரவை கூட்டத்திலும் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. நீண்டகால குத்தகைக்கு இந்தியா இந்த எண்ணெய் குதங்களை பெற்றுக்கொண்டுள்ள போதிலும் இலங்கைக்கு தற்போது இவை தேவைப்படுவதாகவும் ஆகவே இந்திய அரசாங்கத்துடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவம், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கையில், இலங்கையில் எண்ணெய் சேமிப்பு குறித்து பல நெருக்கடிகள் உள்ளன. கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு குதங்கள் இருந்தாலும் கூட மேலதிகமாக சில எண்ணெய் குதங்கள் எமக்கு தேவைப்படுகின்றது. எனவே திருகோணமலை எண்ணெய் குதங்களை எம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியுமென்றால் அது எமக்கு வாய்ப்பாக அமையும். எனவே இராஜதந்திர மட்டத்தில் இது குறித்து இந்தியாவுடன் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்த ஆரம்பித்துள்ளோம். குறைந்தது 25 எண்ணெய் குதங்களை எமக்கு பெற்றுக்கொண்டு எமக்கான எரிபொருளை சேமித்துக்கொள்ள முடியுமானால் எதிர்காலத்தில் நெருக்கடிகள் ஏற்படாத வகையில் கையாள முடியும்.

அமைச்சரவையில் இது குறித்து ஜனாதிபதியிடம் காரணிகளை எடுத்துக் கூறியுள்ளேன். வெளிவிவகார அமைச்சினூடாக இராஜதந்திர பேச்சுக்களை முன்னெடுக்கவும் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.