மரத்திலிருந்து விழுந்தவனுக்கு மாடு குத்தியது போன்ற எமது நாட்டுப் பொருளாதாரக் கொள்கை – சமன்மலீ குணசிங்க (தெஹிவல கல்கிசை நகர சபை JVP உறுப்பினர்)

இந் நாட்டு மக்கள் கடந்த இரண்டு மாத காலமாக கொரோனா தொற்றிலிருந்து மீளுவதற்காக பெரும் போராட்டமொன்றை மேற்கொள்கின்றனர். இக் காலப் பகுதியில் மக்களின் பிரதானமான பிரச்சினையாக உணவைப் பெற்றுக்கொள்வது இருந்தது. தற்போது தமது சாதாரன வாழ்வுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அடுத்து வீட்டு மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் வரும். பிள்ளைகளின் கல்விச் செலவுகள் தலை தூக்கும். போக்குவரத்து செலவுகள், சுகாதாரம், திருமணம் மரணச் சடங்குகள் என தொடராக செலவுகள் தலையை உயர்த்தும். கொரோனாவுக்கு முன்னர் காணப்பட்ட அனைத்து செலுவகளும் மக்களை எதிர்நோக்கும். இவற்றுக்கு முகம்கொடுப்பதற்காக, உலகில் பல்வேறு நாடுகள் பலவிதமான நிவாரணப் பொதிகளை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இலங்கையில் இதுவரை அவ்வாறான ஒன்றை நாம் காணவில்லை.

இந் நாட்டில் தொழில்களில் ஈடுபட்ட மூன்று இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் தொழில்களை இழந்துள்ளனர். அன்றாட வருமானம் தேடிய பெருந்தொகையானவர்கள் வருமான வழிகளை இழந்துள்ளனர். முறைசாரா தொழில்களை செய்த இன்னும் பலருக்கு மீண்டும் தமது தொழில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர். மேன் பவர் நிறுவனங்களில் பலர் தொழிலை இழந்துள்ளனர். வர்த்தக வலயங்களில் ஆறு மாதங்களை விட குறைந்த காலம் தொழில் செய்த பலர் தொழிலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவை புள்ளிவிவரக் கணக்கெடுப்புகளில் உள்ளடங்காது. இன்னும் பலருடைய சம்பளம் முழுமையாகவோ சம்பளத்தில் பாதியோ வெட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தமது வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் போராட்டமொன்றை செய்கின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் எமது நாட்டின் பொருளாதார உபாயமாக எது அமைந்துள்ளது? அது மரத்திலிருந்து விழுந்தவனுக்கு மாடு குத்தியது போல, கஷ்டத்தில் விழுந்து கிடக்கும் மக்கள் மீது வரிச் சுமை ஏற்றப்படுகின்றது. கடந்த வாரம் சுமார் 20 பொருட்களின் விலை வரி அதிகரிக்கப்பட்டது. அரிசி கிலோ 98/= – 105/= எனக் கூறினாலும் அந்த விலைக்கு அரிசி சந்தையில் கிடைப்பதில்லை. சீனி, பருப்பு, செமன் அனைத்தின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூபா 65/= க்குத் தருவதாகக் கூறிய பருப்பு 130/= ஆகி தற்போது 180/= ஆக உள்ளது. தேங்காய் 70/= – 80/= என விலைவாசி விண்ணைத் தொடுகின்றது. மக்களுக்கு சலுகைகளும் நிவாரணங்களும் வழங்க வேண்டிய காலத்தில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் கூறும் காரணம் என்ன? விவசாயிகளை ஊக்கப்படுத்து. பருப்பு, வௌ்ளைப் பூடு, சீரகம் ஆகியவற்றின் வரியை அதிகரித்தது விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்கு அல்ல. அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைப்பதற்காக மக்கள் மீது சுமையை ஏற்றுகின்றது.

இதற்கிடையில் மக்களுக்குக் கொடுத்த ரூ. 5,000/= நிவாரணத்தை அரசாங்கம் தனது தேர்தல் செயல்திட்டமாக மாற்றிக்கொண்டது. ஆனால் கொடுத்த 5,000/= ஐயும் மாதாந்தம் அறவிடும் தந்திரத்தை கையாண்டுள்ளது. அதுதான் தண்ணீர் கட்டணம், மின் கட்டணத்தில் முறைகேடாக கட்டணங்களை அறவிடுவது. பாவிக்கப்பட்ட அலகுகளின் தொகை அதிகரிக்கும்போது கட்டணமும் அதிகரிக்கும் அறவீட்டு முறை நடைமுறையில் உள்ளது. இதனைப் பயன்படுத்தி ஒரு பில்லில் இருந்து ஆயிரம் ரூபா வ​ரை முறைகேடாக பெற்றுக் கொள்கின்றது.

மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கு ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றம் ஒன்று தேவைதான். ஆனால் இலங்கையில் இதுவரை ஆட்சி செய்த அரசாங்கங்கள், மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பேசியுள்ளதா? மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் பொருளாதார கொள்கைத் திட்டங்ளை முன்வைத்துள்ளதா? எமது நாட்டில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் அரசாங்கங்கள் உருவாகவில்லை. பொருட்களின் விலையை உயர்த்திய அரசாங்கம் அநியாயச் செலவுகளை குறைக்கவில்லை. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு வாகனங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்றை அங்கீகரித்துக்கொண்டார்கள். தனது அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் செயல்திட்டங்களை ஆரம்பிக்கின்றனர். ஜனாதிபதியோ தனக்குத் தெரியாது என்கிறார்.

இப்படியானதொரு அரசாங்கம் மக்களுக்குத் தேவை இல்லை. அநியாயச் செலவுகளை செய்துகொண்டு மக்கள் மீது சுமைகளை ஏற்றும் அரசாங்கமொன்று தேவையில்லை. ஆகவே நமது நாட்டில் மாற்று பொருளாதார கொள்கைக்காகவும் மாற்று அரசியலுக்காகவும் மக்கள் கைகோர்க்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

சமன்மலீ குணசிங்க
தெஹிவல கல்கிசை நகர சபை JVP உறுப்பினர்
செயலாளர் – உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு
(2020.06.02 – விசேட ஊடகவியலாளர் மாநாட்டில்)

தமிழில்: Hisham Hussain, Puttalam

Leave A Reply

Your email address will not be published.