இராணுவ ஆட்சியின் பாதையில் பயணிக்கவா செயலணிகள் உருவாகின்றது. ஜனநாயகம் மீறப்படுமாயின் ஆட்சியை கவிழ்க்கும் போராட்டங்கள் வெடிக்கும் – சஜித்

நாட்டினை ஜனநாயகத்தின் பாதையில் கொண்டு செல்லாது செயலணிகளை உருவாக்கி நாட்டினை இராணுவ ஆட்சியின் பக்கம் கொண்டுசெல்ல ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கூறுகின்றார். ஜனநாயகத்தை மீறும் செயற்பாடுகள் தொடருமானால் எதிர்வரும்  பொதுத் தேர்தலில்  இந்த அரசாங்கத்தை கவிழ்த்து மாற்று ஆட்சியை உருவாக்க சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அரசியல் வேலைத்திட்டங்கள் மற்றும் ஜனாதிபதி நியமித்துள்ள செயலணி குறித்த கண்ணோட்டம் எவ்வாறானது என வினவிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஜனாதிபதி  தேர்தலுக்கு முன்னர் ராஜபக் ஷவினரின் வாக்குறுதிகளின் படி தமது வேலைத்திட்டங்கள் அனைத்துமே மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என கூறினார்கள். மக்களின் பொதுவான தேவைகளை பூர்த்திசெய்து வாழ்வாதாரத்தை உயர்த்துவோம் என கூறினார்கள். மூவின மக்களின் சமத்துவம், ஜனநாயக ரீதியிலான ஆட்சி என கூறினார்கள். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து  ஏழு மாதங்கள்  கடந்துள்ள நிலையில் இன்று அந்த வாக்குறுதிகள் அனைத்துமே மறக்கப்பட்டு தமது அதிகாரத்தை தக்கவைக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை மட்டுமே முன்னெடுத்து வருகின்றது இந்த அரசாங்கம். மக்களுக்கு தேவையில்லாத வேலைத்திட்டங்களை மட்டுமே இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். மக்கள் பொருளாதார ரீதியிலும் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற நிலையில் அது குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ளவே இல்லை. பொதுமக்களே அரசாங்கத்தை வெறுக்கும் நிலைமை உருவாகி வருகின்றது.

வெறுமனே தேர்தலை இலக்கு வைத்து மக்களை ஏமாற்றும் அரசியல் நடவடிக்கைகளே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ராஜபக் ஷக்களினால் முன்னெடுக்கப்பட்டது.இப்போதும் அதேபோன்று இனவாதத்தை கக்கும், இராணுவத்தை போற்றும் பிரசாரங்களையே முன்னெடுத்து வருகின்றனர். மக்களின் உண்மையான பிரச்சினைகள் எதுவென்பதை அடையாளம் கண்டு அதனை தீர்க்கும் எந்தவித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. சூழல் மீது அக்கறையில்லை, மணல் விற்பனை, வளங்களை விற்றல் என்பன கடந்த சில தினங்களாக அவதானிக்க முடிந்தது. உண்மையில் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்த வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்து வருகின்றது. மறுபுறம் அரசாங்கம் இராணுவ மயமாக்கலின் பக்கமான நகர்கின்றது. செயலணிகளை அமைத்துக்கொண்டு இராணுவ  ஆக்கிரமிப்பு நோக்கத்தில் செயற்படுகின்றனரா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏல ஆரம்பித்துள்ளது. தேசிய வளங்களை, தொல்பொருள் பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதற்கான நியமிக்கப்படும் செயலணியில் சிவில் பிரதிநிதிகள் இல்லாதமை கேள்வியை எழுப்புகின்றது.

இவ்வாறு அரசாங்கம் எல்லை மீறி ஜனநாயகத்தை நசுக்கும் நடவடிக்கை எடுக்குமாயின் அடுத்ததாக மக்கள் புரட்சி வெடிக்கும் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி நாட்டினை ஜனநாயகத்தின் பக்கம் கொண்டு செல்லாது போனால் எதிர்வரும் பொதுத் தேர்தலை இந்த அரசாங்கத்தை கவிழ்த்து மாற்று ஆட்சியை உருவாக்க சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம். மக்கள் சகலரையும் அரசாங்கத்திற்கு எதிராக திருப்பும் போரட்டங்களை நாம் முன்னெடுப்போம் . ஜனநாயகத்தின் வெற்றியை நாம் உறுதிசெய்வோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.