பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் பின்பற்றும் ஒழுக்கக்கோவை வெளியிடப்பட்டுள்ளது

விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் , சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கநெறிக் கோவைக்கான விசேட வர்த்தமானி  அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. ஜுன்  மாதம் 3ஆம் திகதியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள  இவ்வொழுக்க நெறிக்கோவை தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் , அரசியற் கட்சிகளின் தலைவர்கள் , செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து முதன்மைப் பதவி உறுப்பினர்களுக்கும் , மாகாண சபை மற்றும் உள்ளூர் அதிகார சபை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதிகளுக்கும் மற்றும் அனைத்து அரசியல்  கட்சிகளின் செயற்பாட்டாளர்களுக்கும் , வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கும் , சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் , அவற்றின் வேட்பாளர்களுக்கும் ஏற்புடையதாகுமென வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட ஆட்சி , பொது நடத்தைகள் , தேர்தல் பிரசார நடவடிக்கைகள் , வாக்கெடுப்பு தினம் , வாக்குகளை எண்ணுதல் மற்றும் பெறுபேறுகளை வெளியிடுதல் , குரோத மனப்பான்மையுடன் கூடிய வெளிப்படுத்துகைகள் அல்லது தேசிய ஐக்கியத்திற்கு எதிரான வெளிப்படுத்துகைகள் , ஏனைய முக்கிய விடயங்கள் மற்றும் வேறு விடயங்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் பின்பற்ற வேண்டிய ஒழுக்கநெறிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒழுக்க நெறிக் கோவையில் சட்ட ஆட்சி என்ற தலைப்புக்கமைய ,  இலங்கை அரசியல் அமைப்பினாலும் எனைய நியதிச் சட்டங்களினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ன பிரஜைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் விதத்தில் , தேர்தல் சட்டங்களுக்கமைய மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தல்களில் அல்லது மக்கள் தீர்ப்புக்களில் வாக்காளருக்கு சுதந்திரமாகவும் எவ்வித வலுக்கட்டாயமின்றியும் தமது வாக்கினை அளிப்பதற்கு அவகாசமளிக்க வேண்டும் என்பதுடன்  தேர்தலொன்றில் போட்டியிட முன்வருகின்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்களுக்கும் தேர்தல் செயன்முறையில் உரித்தாக்கப்பட்டுள்ள சம உரிமையை அனைத்து சட்டங்களிலும் பாதுகாத்தல் வேண்டும்.

நாட்டின் சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாக்கின்ற நியதிச் சட்டப் பொறுப்புச் சாட்டப்பட்டுளள நிறுவனங்களுக்கும் அவை பொறுப்புவிக்கப்பட்டுள்ளவர்களுக்குறிய கடமைகளை ஆற்றுகையில் தடங்கல்கள் அல்லது அழுத்தங்களை ஏற்படுத்தக் கூடாது என்பதுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடைமுறையிலுள்ள சட்ட  ஏற்பாடுகள் மீறப்படாமலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

பொது நடத்தைகள் என்ற தலைப்புக்கமைய இலங்கையர்கள் அனுஷ்டிக்கும் சமயங்கள் , பேசுகின்ற மொழிகள் , அவர்களின் இனங்கள் , பழக்க வழக்கங்கள் மற்றும் குல கோத்திரங்கள் போன்றவை தொடர்பாக இனப்பிரிவொன்று அல்லது ஆட்களுக்கிடையே பகைமையுணர்ச்சி மற்றும் பொறுமையின்மை என்பவற்றை ஏற்படுத்தவல்ல அல்லது தூண்டவல்ல விதத்திலான நடத்தைகளை தவிர்த்தல் மற்றும் அவ்வாறான உணர்வு ஏற்படுத்தும் விதத்திலான கருத்துகளை அல்லது வெளியிடக் கூடாது.

அரசியல் கட்சிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற விமர்சனங்கள் , அந்த கட்சிகளின் கொள்கை நிகழ்ச்சித் திட்டங்கள் , கடந்த கால நிகழ்வுகள் ஆகியவற்றை மட்டுப்படுத்த வேண்டும் என்பதுடன் எதிக்கட்சியினரின் அல்லது வேட்பாளர்களின் பொது நடவடிக்கைகளுடன் தொடர்புபடாத அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அந்தரங்க விடயங்களை விமர்சிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுடன் அவர்கள் மீது நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் மற்றும் நிரூபிக்க முடியாத விடயங்கள் மற்றும் திரிபுபடுத்தப்பட்ட கருத்துகள் விமர்சனங்களை மேற்கொள்ளக் கூடாது.

அத்துடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகளாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சட்ட ரீதியாகவும் அமைதியை பேணும் விதத்திலும் அமைய வேண்டும். எதிர்த்தரப்பினரின் சட்ட ரீதியான தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. அச்சிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வழங்கும் போது தேர்தல் சட்டத்திற்கு  அமைவாக நடந்துகொள்ள வேண்டும். பிரசார நடவடிக்கைகளுக்காக வீடுவீடாக செசல்லும் போது பெருந்தொகை மக்கள் கூட்டத்துடனும் மறறும் இசை முழக்கம் மற்றும் பதாதைகளுடன் செல்வதை தவிர்க்க வேண்டும். தேர்தல் பிரசார மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காக எந்தவொரு மதத் தலத்தையோ அதற்குறிய காணியையோ அல்லது ஆதனமொன்றையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தேர்தல் காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளுக்குரிய ஊர்வலங்கள் , பொதுமக்கள் ஊர்வலங்களை நடத்துதல் தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும். இதனால் அவ்வாறான ஊர்வலங்கள் , வாகன பேரணிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும். அதேபோன்று அனுமதிப் பெற்ற கூட்டங்களுக்கு மாத்திரம் ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும்.  தேர்தல் தினத்திற்கு 48 மணித்தியாலத்திற்கு முன்னர் பிரசார நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். அந்த காலப்பகுதியில் எந்தவித பிரசார செயற்பாடுகளையும் முன்னெடுக்க கூடாது.அதேபோன்று பொதுப் பரீட்சைகள் நடைபெறும் பாடசாலைகள் , அப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் இடங்களுக்கு இடையூறு இன்றி நடந்துகொள்ள வேண்டும் என்பதுடன் அந்த இடங்களை அண்மித்த இடங்களில் பிரசார செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது.

இதேவேளை அந்த ஒழுக்க நெறிக்கோவையில், குரோத மனப்பான்மையுடன் கூடிய வெளிப்படுத்துகைகள் அல்லது தேசிய ஐக்கியத்திற்கு எதிரான வெளிப்படுத்துகைகள் என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பெண்கள் மற்றும்  விசேட தேவையுடையோர் மற்றும் வித்தியாசமான பல் ரீதியிலான தோற்றத்துடன் கூடிய நபர்கள் மற்றும் பிற மதங்கள் , இனக் குழுக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடிய அல்லது அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையிலான குரோத மனப்பான்மையுடன் கூடிய வெளிப்படுத்துகைகளை வெளியிடக் கூடாது. அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற அனைவரும் இவ்வாறான மனப்பான்மையுடன் கூடிய வெளிப்படுத்துகையை மேற்கொள்வதை எப்போதும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். குரோத மனப்பான்மையுடன் கூடிய வெளிப்படுத்துகைகள் குற்றமாக இனங்காணப்பட்டுள்ளமையினால் அத்தகைய வெளிப்படுத்தல்களை வெளியிடுபவர்கள் தொடர்பாக அறிக்கையிடுதல் வேண்டும்.

அத்துடன் வேறு விடயங்களின் கீழ் ஒழுக்க நெறிக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய கீதம் , தேசியக் கொடி , சமய சின்னங்கள் , சமயக் கொடிகள் , சமயத் தலைவர்களின் வரைபடங்கள் அல்லது உருவப்படங்கள் போன்ற எவற்றையும் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழு வேட்பாளர்களின் ஊக்குவிப்புக்காக அல்லது பாதிப்புறச் செய்வதற்காக பயன்படுத்தக் கூடாது. அதேபோன்று எந்தவொரு அரச அலுவலரினதும் உருவப்படத்தையும் அல்லது வரைபடத்தையும் பயன்படுத்தக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒழுக்க நெறிக் கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தமது முகவர்கள் , கட்சிக்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பின்பற்றுகின்றார்கள் என திருப்தியடையக் கூடிய விதத்திலான பொறிமுறையொன்று வேட்பாளர்கள் மற்றும் கட்சி செயலாளர்களினால் நடைமுறைப்படுத்தப்படுமென எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினர் ஒழுக்க நெறிக் கோவை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.