புலிகளின் காலத்தில் அஞ்சாதுபேசிய பேராசிரியர் ஹூல் இன்றைய விமர்சனங்களுக்கு அஞ்சவாபோகின்றார் – ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித்.பி.பெரேரா
விடுதலைப்புலிகள் வடக்கில் பலமாக செயற்பட்ட காலத்திலேயே புலிகளுக்கு எதிராக தைரியமாக பேசிய பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் இப்போது உள்ள ஊடகங்களில் விமர்சனங்களை கண்டு அஞ்சவா போகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித்.பி.பெரேரா கூறுகின்றார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் குறித்த அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
ஊழல் குற்றவாளிகள், மக்களை ஏமாற்றும் தலைமைகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் ஒரு கருத்தினை கூறியவுடன் அந்த கருத்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு கூறியதாக நினைத்துக்கொண்டு பொதுஜன முன்னணியினர் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். கட்சி பெயர்களோ ஆள் அடையாளமோ கூறாது அவர் பொதுவாக ஒரு கருத்தினை கூறியவுடன் தாம் தான் அதற்கு பொருத்தமான நபர்கள் என பொதுஜன முன்னணியினர் நினைப்பது அவர்களின் முட்டாள்தனமாகும்.
பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றார். இப்போது மட்டுமல்ல அவர் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் வடக்கில் இருந்த காலத்திலேயே அவர்களுக்கு அஞ்சாது தைரியமாக தனது கருத்துக்களை முன்வைத்து வந்தவர். அவ்வாறான ஒருவருக்கு இப்போது உள்ள ஊடகங்களின் அச்சுறுத்தல் எல்லாம் பெரிய விடயம் அல்ல. ஊடகங்களில் பொய்யாக கருத்துக்களை கண்டு அவர் அஞ்சப்போவதுமில்லை என நாம் நினைக்கிறோம் என்றார்.