‘அரசியல் இருப்புக்காக முஸ்லிம்களை பகடைகாய்களாக்க வேண்டாம்’ – பைசர் முஸ்தபாவின் அறிக்கை குறித்து அஷாத் சாலி ஆவேசம்!

தனது சுயநலத்துக்காகவும் எதிர்கால அரசியலில் இருப்பை நிலைப்படுத்துவதற்காகவும் அப்பாவி முஸ்லிம் மக்களை தவறாக, முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா வழிநடத்தப் பார்க்கிறார் என்று  தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் முஸ்லிம்கள் மொட்டுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது தார்மீகக் கடமையென கூறியிருக்கும் பைசர் முஸ்தபா, தான் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் மொட்டுக் கட்சிக்குள் பின்னி, அதற்குள் முடிச்சுபோட்டு, போலியான நியாயங்களால் தனது கருத்துக்கு வலு சேர்த்திருப்பது வெட்கக்கேடானது என்றும் அஷாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“ஜனாதிபதி தேர்தலின் பின்னர், முஸ்லிம் சமூகத்துக்கு வெளிப்படையாக இழைக்கப்படும் அநியாயங்களை கண்டும் காணாதது போன்று கருத்துக்களைக் கூறும் பைசர் முஸ்தபா, ‘பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது’ போன்ற நிலைக்கு இறங்கியுள்ளார். ஜனாஸா எரிப்பு விடயத்தில் சமூகத்துக்கு இழைக்கப்பட்டு வரும் அப்பட்டமான அநியாயங்களை பைசர் முஸ்தபா போன்றவர்கள் தெரிந்திருந்தும், அரச கூட்டங்களில் அவர் உயர்மட்டத் தலைவர்களால் அவாமானப்பட்டிருந்தும், இன்னும் இந்தக் கூட்டத்துக்காக வக்காலத்து வாங்குவதன் உள்நோக்கம் தான் என்ன?

சிறந்த பரம்பரையில் பிறந்த பைசர் முஸ்தபா, தனது நெஞ்சிலே மீண்டும் ஒருமுறை கைவைத்து, மனச்சாட்சியை தொட்டுப்பார்க்க வேண்டும். தனது எதிர்கால நன்மைக்காக இன்னும் ஒருவரின் மகுடிக்கு இவர் ஆடுவது வேதனையானது.பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கோ, தேசியப் பட்டியல் பதவிக்கோ சந்தர்ப்பம் தராத சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பெரமுன கூட்டத்துக்காக, இவர் ஏன் இவ்வாறு திடீரெனப் பரிந்து பேசுகின்றார் எனத் தெரியவில்லை.

சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவியில் அமர்த்திய முஸ்லிம்கள் உள்ளடங்கிய சிறுபான்மை சமூகத்துக்கு, பச்சைத் துரோகமிழைத்த முன்னாள் ஜனாதிபதியின் கட்சிக்காக இன்னும் ஒட்டியிருந்து, நாக்கூசாமல், பைசர் முஸ்தபா அந்தக் கட்சிக்கு துதிபாடுவது ஏன்?கிழக்கு மாகாணத்தில் பௌத்த சின்னங்களை பாதுகாப்பது என்ற பெயரில், தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வரலாற்று பூமியை கபளீகரம் செய்ய எடுக்கப்படும் முயற்சிகளையும், வடக்கு, கிழக்கு மாகாணத்தை முழுமையாக விழுங்குவதற்கு வரிந்துகட்டிக்கொண்டிருக்கும் பேரினவாதிகளின் நகர்வுகளையும் பைசர் முஸ்தபா அறிவாரா?” என அஷாத் சாலி கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.