தேர்தல்  நடத்தப்பட வேண்டும் என்பதற்காக கொவிட் -19 பரவலுக்கு இடமளிக்க முடியாது!

தேர்தலுக்கான திகதி நாளைய தினம் தீர்மானிக்கப்படுவதில் சந்தேகம் என்கிறார் ஆணைக்குழுவின் தலைவர் தேசப்பிரிய

மக்களுக்கான தேர்தல் உரிமையை வழங்க வேண்டும், அவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும் என்ற காரணிகளை நாம் முழுமையாக ஏற்றுகொள்ள வேண்டும், ஆனால்  அதற்காக கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு இடமளிக்க முடியாது. இன்னமும் அச்சுறுத்தல் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகின்றார். தேர்தல் திகதி நாளைய தினம் தீர்மானிக்கப்படுமா என என்னால் கூற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினர்.
பரிட்சாத்த தேர்தல் நடைமுறை ஒன்று இன்று  அம்பலாங்கொடையில் இடம்பெற்றது. சுமார்  200 பேர் அளவில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு சுகாதார வழிமுறைகளை முறையாக கையாள்வது குறித்தும் பரீட்சார்த்த  முறையொன்றும் கையாளப்பட்டது. இதன் பின்னர் அம்பலாங்கொடையில் செய்தியாளர் சந்திப்பொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய நடத்தியிருந்தார். அதில் அவர் கூறியதானது,
இன்று அம்பலாங்கொடையில் இடம்பெற்ற பரீட்சார்த்த தேர்தலில் சுகாதார முறைமைகளை முறையாக கையாள்வது குறித்துபரீட்சார்த்த நடவடிக்கைகளை கையாண்டோம். சமூக இடைவெளி, வாக்குச்சாவடியில் மக்களை வழிநடத்த முடியுமா, அதிகாரிகள் நோய் தொற்றுக்கள் இல்லாது செயற்பட முடியுமா என்ற காரணிகளை கண்காணித்தோம். பல சிரமங்கள் உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். எவ்வறு இருப்பினும் தேர்தலை நடத்த வேண்டுமாயின் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளை கண்டிப்பாக கையாள வேண்டும்.
அதேபோல் முகக்கவசம் அணியும் போது முழுமையாக அதனை கலட்டாது முகம் தெரியக்கூடிய விதத்தில் சற்று கீழ் இறக்கினால் போதுமானது. அதேபோல் அனைவரும் வாக்குச்சாவடிக்கு வரும் வேளையில் கருப்பு அல்லது நீல வர்ண பேனை ஒன்றினை கொண்டவர வேண்டும். அத்துடன் கையில் வர்ணம் பூசுவது குறித்து இரண்டு, மூன்று யோசனைகள்  முன்வைக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரைவில் அறிவிப்போம்.
மேலும்  வாக்களிப்பு நிலையங்கள் அமைப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும், சிறிய இடங்களில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்க முடியாது. பாடசாலைகளில் சிறிய இடங்களை தெரிவுசெய்து மக்களை வரிசையில் நிற்க  விடுவதில் சில சிக்கல்கள் உள்ளது. இவற்றை நாம் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியுள்ளது. முன்னர் இந்த பிரச்சினைகள் இருக்கவில்லை, ஆனால் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய அவற்றை இம்முறை தேர்தலில் கையாள முடியாது. அதற்காக தேர்தல் விதிமுறைகளை மீறி மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் முடியாது. அதனை நாம் கவனத்தில் கொண்டே தீர்மானம் எடுக்கின்றோம்.
அதேபோல்  தேர்தல் பிரசார செயற்பாடுகளின் போதும் பாரிய அளவில் கூட்டங்களை நடத்த வேண்டாம்,சிறிய கூட்டங்களை நடத்துவது ஆரோக்கியமானது. வீடுகளுக்கு வாக்குக் கேட்டு செல்லும் வேளைகளில் கூட்டமாக செல்லாது குறைந்தது மூன்று பேர் மாத்திரம் சென்றால் போதும். இப்போது சுகாதார அதிகாரிகள் அதிகாரத்தில் உள்ளனர். அவர்களின் பரிந்துரைகளை மீறி எதனையும் செய்ய முடியாது. தேர்தல் சட்டத்தை இம்முறை எவ்வாறு கையாள்வது என்பதில் சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அதிகாரிகள் என்ன கூறுகின்றனர் என்பதை கேற்க வேண்டியுள்ளது.
சுகாதார அதிகாரிகள் இறுதி அனுமதி வழங்கும் வரையில் நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கவில்லை. தேர்தலுக்கான அடுத்த கட்ட வேலைகளை நாம் முன்னெடுத்து வந்தோம். அதிகாரிகளை தெளிவுபடுத்தல், தபால் வாக்களிப்பு எவ்வாறான முறையில் முன்னெடுப்பது என்ற வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். பிரதான வேலைத்திட்டமான சுகாதார பணிப்புரை வரும் வரையில் நாம் வேடிக்கை பார்த்தோம் என கருத வேண்டாம்.
தேர்தல்  வாக்கெண்ணும் பணிகள் முன்னர் மாதிரி நடைபெறாது. இதில் இரண்டு தெரிவுகள் எமக்கு உள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போல் அந்தந்த நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் நடத்தப்படுமா, அல்லது நான்கு மணிக்கோ ஐந்து மணிக்கோ வாக்களிப்பு நேரத்தை முடிவுக்கு கொண்டுவந்து வாக்கெண்ணும் நிலையங்களில் எண்ணிக்கையை அதிகரித்து சிறிது சிறிதாக எண்ணுவதா என்ற இரண்டு தீர்மானங்கள் உள்ளன. ஆனால் இது எதுவும் நான் மாத்திரம் எடுக்கும் தீர்மானம் அல்ல. ஆணைக்குழுவின் மூவருமே இதில் இணக்கம் தெரிவிக்க வேண்டும்.
இவை அனைத்துமே பிரச்னைகள் தான், ஆனால் இவை அனைத்தையும் விட பிரதான பிரச்சினை ஒன்று உள்ளது. மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் , வாக்களிக்கும் ஜனநாயக உரிமை பின்பற்றப்பட வேண்டும், ஆனால் அதற்காக கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு இடமளிக்க முடியாது. இன்னமும் அச்சுறுத்தல் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மக்களை அதிக நேரம் ஒரு இடத்தில் கூட்டம் கூட இடமளிக்க வேண்டாம் என்பதே அனைவரதும் கோரிக்கையாக உள்ளது. தேர்தல் நடத்தினால் மக்கள் வருவார்கள், ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல் தேர்தல் திகதி குறித்து நாளை (இன்று) நடைபெறும்  கலந்துரையாடலில் இறுதித் திகதி ஒன்று அறிவிக்கப்படுமா என என்னால் கூற முடியாது. 8ஆம் திகதி கலந்துரையடுகின்றோம் என்றே கூறினேன், 8 ஆம் திகதி வரையில் என்னால் கூற முடியாது அதன் பின்னர் கூறலாம் என்றேன். பிறக்க முன்னர் குழந்தை ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என கூற முடியாது. ஆனால் பெரும்பாலும் திகதி குறித்து தீர்மானம் எடுக்கலாம் என நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். ஒன்றை மட்டும் என்னால் கூற முடியும். ஜூலை மாதத்தில் தேர்தல் இடம்பெறாது என்பதை உறுதியாக கோர் முடியும்.
மேலும் வாக்குச்சீட்டு அச்சிடுவது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. இப்போது வரையில் நான்கு மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆணைக்குழு தீர்மானம் எடுக்காது. இப்போது ஆணைக்குழுவின் அதிகாரங்கள் நீக்கப்பட்டுள்ள காரணத்தினால் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் அதிகாரம் எம்மிடம் இல்லை.மாறாக  அச்சகத்திற்கும் திணைக்களத்திற்குமே உள்ளது. அவர்கள் எம்மிடம் கலந்துரையாடுவார்கள். அவ்வாறு இருப்பினும் இப்போது நான்கு மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளது என்றார்.
Leave A Reply

Your email address will not be published.