சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய தேர்தல் ஒத்திகை இன்று இடம்பெற்றது

சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை வழிக்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு எதிர்வரும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலான தேர்தல் ஒத்திகை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி இன்று முற்பகல் 7 மணி முதல் பிற்பகல் வரையில் காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விலேகொட பிரதேசத்தில் ஒரு தொகுதி வாக்காளர்களை ஈடுபடுத்தி இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலைமையில் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார பரிந்துரைகள் அடங்கிய  ஆலோசனை வழிகாட்டி கடந்த வாரத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளினால் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அந்த வழிகாட்டியில் குறிப்பிட்டுள்ளவாறு தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ளும் தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கான ஒத்திகையை நடத்துவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளது.

இந்த ஒத்திகை மூலம் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார ஒழுங்குவ்விதிகளை பின்பற்றி வாக்களர் ஒருவருக்கு வாக்களிக்க எடுக்கும் நேரம் மற்றும் சுகாதார ஒழுங்குவிதிகளுக்கமைய தேர்தலை நடத்துவதற்கு ஏற்படும் செலவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கணிக்கப்படவுள்ளன. இதன்படி இன்று அம்பலாங்கொடை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட விலேகொட பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்காளர்களை ஈடுபடுத்தி விலேகொட தம்மயுத்திகாராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் ஒத்திகை நடத்தப்பட்டது. இதன்போது பிற்பகல் 2 மணி மணி வரையில் 239 பேர் வாக்களித்துள்ளனர்.

இதேவேளை இதை போன்று இடப்பற்றாக்குறை நிலவும் இடங்களில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ள பிரதேசங்களிலும் எதிர்வரும் நாட்களில் ஒத்திகை நடவடிக்கைக்களை நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்கவுள்ளோம். இதன்பின்னர் வாக்காளர் ஒருவருக்கு வாக்களிக்க எடுக்கும் நேரம் , வாக்களிப்பு நிலையமொன்றில் ஒரு மணித்தியாலத்தில் எத்தனை பேருக்கு வாக்களிக்க முடியுமாக இருக்கும் என்பதனையும் மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கமைய வாக்களிப்பை நடத்தும் போது ஏற்படும் செலவுகள் தொடர்பாகவும் மதிப்பீடு செய்யப்பட்டு அதன்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.