பாதுகாப்பற்ற நடத்தை காரணமாக 30 போலீசார் தனிமைப்படுத்தலில் 

கொள்ளிப்பிட்டியவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் முன்னிலை சோஷலிசக்கட்சி அமைதிவழி போராட்டம் நடத்தியவேளை, அவர்களை தாக்கி, கைது செய்திருந்த பொலிஸாரில் 30 பேர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

கொரோனா கோவிட் 19 அச்சுறுத்தல் காணப்படும் நிலைமையில் பாதுகாப்பற்ற முறையில் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறியுயே கொள்ளிப்பிட்டிய போலீஸ் நிலையத்தின் ஓ.ஐ.சி உட்பட முப்பது போலீஸ் அதிகாரிகள் பொலிஸாரால் நடத்தப்படும் அத்திட்டியவில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது நடவடிக்கை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தனிநபர் இடைவெளி பேணப்படவில்லை என்றும், போராட்டக்காரர்கள் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்றும் அவர்கள் காரணம் காட்டினர்.

அதேநேரம் முன்னிலை சோஷலிஸக்கட்சியின் புபுது ஜயகொட சுகாதார சேவை பணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில், “தாம் கொரோனா சட்டத்திட்டங்களைக் கருத்திற்கொண்டு பாதுகாப்பான முறையில் போராட்டம் நடத்தியதாகவும், போலீசார் பாதுகாப்பற்ற முறையில் செயற்பட்டதாகவும், தற்போது 30 போலீஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கின்ற பொழுது அவர்கள் தான் சட்டத்தை மீறி செயற்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்த வேளையில், முகக்கவசத்தைக் கருத்திற்கொண்டு செயற்படவில்லை எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே கடற்படையில் போதிய அவதானம் இல்லாமையால் கொரோனா பரவியுள்ளதையும் நாம் அறிவோம்.

புகைப்படம் : ஷெஹான் குணசேகர (fb)

Leave A Reply

Your email address will not be published.