மகேந்திரனும் அவரது விசுவாசிகளுமே நல்லாட்சியை பிளவுபடுத்த காரணம்
நல்லாட்சியை உருவாக்க தமிழர்கள் வழங்கிய பங்களிப்பு அதிகம் என்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
மத்திய வங்கி பிணைமுறி ஊழலை விசாரிக்கவும் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யவும் நான் எடுத்த முயற்சியே நல்லாட்சி அரசாங்கம் பிளவுபட காரணமாக அமைந்தது. அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய நான் எடுத்த முயற்சி அதிகாரத்தில் இருந்த சிலருக்கு பிடிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எனது ஆட்சியை உருவாக்க தமிழ் மக்கள் வழங்கிய பங்களிப்பே அதிகம் எனவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்கால அரசியல் செயற்பாடுகள், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுத்த செயற்பாடுகள் குறித்து கேசரிக்கு தெரிவிக்கும் போதே அவர் இவற்றை பகிர்ந்துகொண்டார். அவர் இதன்போது கூறுகையில்,
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நாட்டின் கட்டாய தேவையாக இருந்தது, அதுவரை நாட்டில் நிலவிய மிக மோசமான செயற்பாடுகள், அதிகார அடக்குமுறைகள் என்பவற்றை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக நான் தலைமையேற்ற தீர்மானித்தேன். கடந்த 2015 ஆம் ஆண்டில் மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த பின்னர் நாட்டில் ஜனநாயகத்தை முழுமையாக செயற்படுத்த என்னாலான சகல நடவடிக்கைகளையும் நான் முன்னெடுத்துள்ளேன் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதுமட்டும் அல்லாது நிறைவேற்று அதிகாரத்தை அதிகமாகவே கையாண்ட தலைவரும் நானேயாவேன்.
இந்த நாட்டில் எந்தவொரு அரச தலைவரும் முன்னெடுக்காத தைரியமான வேலைத்திட்டங்களை நான் எனது ஆட்சிக்காலத்தில் முன்னெடுத்தேன். நான் செயற்பட்டதை போல வேறு எந்த தலைவரும் செயற்பட்டிருக்க மாட்டார்கள். இலங்கையின் எந்த ஜனாதிபதி தனது அரசாங்கத்தில் இருந்த பிரதமரை நீக்கிவிட்டு தேர்தலில் போட்டியிட்டு தோற்ற ஒருவரை மீண்டும் பிரதமராக்கியுள்ளார் ? அப்போது பிரதமாராக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கினேன். இவ்வாறான தீர்மானங்களை வேறு எந்தவொரு ஜனாதிபதியாவது முன்னெடுத்துள்ளனரா. ஆகவே நான் ஏனைய ஜனாதிபதிகள் போல் அல்லாது தைரியமாக செயற்பட்ட நபர்.
கேள்வி:- எனினும் உங்கள் மீது அளவுக்கு அதிகமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றதே?
பதில் :- இந்த நாட்டில் எனது நல்லாட்சி அரசாங்கத்தில் போன்று சுதந்திரம் வேறு எந்த ஆட்சியாளர்களும் வழங்கியிருக்க முடியாது. நான் வழங்கிய சுதந்திரத்தை கொண்டே ஊடகங்கள் என்னை தாக்கினர். இன்றும் விமர்சித்தே வருகின்றனர். ஆனால் நான் அதனைக் கண்டு கவலைப்படவில்லை. ஊடக சுதந்திரமும் ஜனநாயகமும் என்னால் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நான் வழங்கிய சுதந்தரத்தை நானே விமர்சிக்க விரும்பவில்லை. என்னை விமர்சிக்கும் அனைவருக்கும் நான் கூறுவது ஒன்றுதான். நீங்கள் அனைவரும் இன்று என்னை விமர்சித்து கேலி செய்யும் சுதந்திரம் என்னால் வழங்கப்பட்டது என்பதை மறந்துவிட வேண்டாம்.
கேள்வி :- நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் முன்னெடுத்த திட்டங்களை இந்த ஆட்சியாளர்கள் விமர்சிக்கின்றனரே?
பதில் :- நான் ஜனாதிபதியான காலத்தில் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டு உலகை வெற்றிகொண்டேன். யார் என்ன கூறினாலும் நான் சர்வதேச நாடுகளை இலங்கைக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டேன். மின்சாரக் கதிரைகள், சர்வதேச விசாரணை என இலங்கைக்கு எதிராக எழுந்த சவால்கள் அனைத்தையும் எனது ஆட்சியில் நான் நிறுத்தேன். சர்வதேச பலமிகு நாடுகளுடன் எம்மால் முரண்படவோ, போட்டிபோடவோ அல்லது சவால் விடுத்தது செயற்படவோ முடியாது என்பதை நான் நன்றாக அறிந்துகொண்டேன். ஆகவே சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொண்டு இலங்கையை பாதுகாப்பாக கொண்டு நகர்த்தும் நடவடிக்கையை நான் முன்னெடுத்தேன். அந்த நகரவே இன்றிவரை நாட்டினை பாதுகாக்கிறது. இன்று ஆட்சிக்கு வர்ந்தவர்கள் எதனைக் கூறினாலும் என்னை சர்வதேச தலைவர்கள் ஆதரித்த விதம் முற்றுலும் வேறுபட்டதாக அமைந்தது. பல்வேறு உதவிகளை சர்வதேச நாடுகளின் மூலமாக நான் நாட்டுக்கு பெற்றுக் கொடுத்தேன்.
கேள்வி :- நல்லாட்சியை நீங்கள் கைவிட பிரதான காரணம் என்ன ?
பதில் :- மத்திய வங்கி பிணைமுறி ஊழல். இதுவே நல்லாட்சி அரசாங்கத்திற்குள் குழப்பம் ஏற்பட பிரதான காரணியாக அமைந்தது. இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழலாக மத்திய வங்கி ஊழல் பதிவாகியது. மத்திய வங்கியில் பிணைமுறி மூலமாக இவ்வளவு பெறுமதியான தொகை களவாடப்பட்டது என்ற சரியான எண்ணிக்கை இன்னமும் கூறப்படவில்லை. ஒரு கணிப்பில் கூறும் தொகையே 11 பில்லியனாகும். எனினும் இது குறித்து கண்டறிய ஆணைகுழு ஒன்றினை நான் நியமித்தேன். மத்திய வங்கி பிணைமுறி குறித்து ஆராயும் ஆணைக்குழுவை நியமித்தமையே நல்லாட்சி அரசாங்கத்தில் முரண்பாடுகள் ஏற்பட பிரதான காரணியாகும். அதாவது அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய நான் எடுத்த முயற்சி அதிகாரத்தில் இருந்த சிலருக்கு பிடிக்கவில்லை.
அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய நான் சகல நடவடிக்கையும் எடுத்து சிங்கபூர் சென்று சிங்கபூர் பிரதமரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்களும் அர்ஜுன மகேந்திரனை எமக்கு வழங்க இணக்கம் தெரிவித்தனர். அதேபோல் சர்வதேச பொலிசாருக்கு நான் அறிவித்தல் விடுத்தேன். நிதி மோசடியில் குறித்த நபரை தேடுவதாக சுட்டிக்காட்டி நான் அறிவிப்பொன்றை விடுத்தேன், ஆனால் எனது அரசாங்கத்தில் பிறிதொரு குழு சர்வதேச பொலிசாருக்கு வேறு கடிதம் ஒன்றினை அனுப்பினர். இந்த விவகாரத்தில் தேடப்படும் நபர் நிதி மோசடியுடன் தொடர்புபட்டவர் அல்ல, அரசாங்கத்தின் உள்ளக முரண்பாடுகளில் பழிதீர்க்க எடுக்கும் நடவடிக்கை இந்த செயற்பாடுகள். ஆகவே இதில் சர்வதேச பொலிசார் தலையிட வேண்டாம் என்ற பிரிதொரு கடிதத்தை அனுப்பியுள்ளனர். அதற்கமைய சர்வதேச பொலிசார் தலையிட மாட்டோம் என என்னிடம் கூறினார்கள்.
அதன் பின்னர் சட்டமா அதிபர் மற்றும் சட்ட வல்லுனர்கள் அனைவருடனும் பேசி மீண்டும் சர்வதேச பொலிசாருக்கு கடிதம் அனுப்பினோம். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு சிவப்பு எச்சரிக்கை விடுத்தனர். எனினும் அவர் பின்னர் பெயரை மாற்றிக்கொண்டார் என்றெல்லாம் கூறுகின்றனர். பெயரை மாற்றினாலும் நபர் ஒருவர் தானே. அவர் யார் என்பதை சிங்கபூர் அரசாங்கம் அறியாமலிருக்க வாய்ப்பில்லையேல். ஆனால் அர்ஜுன மகேந்திரனை காப்பாற்றுவது எனது ஆட்சியில் அதிகாரத்தில் இருந்த தரப்பினர் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்றும் அவர்கள் அர்ஜுன மகேந்திரனுடன் நேரடியான தொடர்பில் உள்ளனர்.
கேள்வி:- நல்லாட்சி அரசாங்கத்தை ஆதரித்த தமிழ் பேசும் மக்களின் இன்றைய நிலை மீண்டும் தனித்துவிடப்பட்டதாக அமைந்துவிட்டது. இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- என்மீது நம்பிக்கை வைத்தே ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தனர். எனது வெற்றியில் தமிழ் மக்களின் பங்களிப்பு அதிகமாகும். அதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அதேபோல் எனது ஆட்சியில் வடக்கு கிழக்கில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணிகள் விடுவிப்பு அதில் மிக முக்கியமான விடயமாகும். இந்த ஆட்சியில் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என நான் நம்பவில்லை. ஆனால் நான் வழங்கிய சலுகைகள் இவர்களால் வழங்க முடியுமா என்பது குறித்து என்னால் தெளிவாக கூற முடியாது. எவ்வாறு இருப்பினும் இந்த நாட்டில் தமிழ் மக்களும் சம உரிமைகள், அதிகாரத்துடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உள்ளேன் என்றார்.