அமெரிக்காவில் மேலும் ஒரு கருப்பினத்தவர் போலீசாரால் சுட்டுக்கொலை – தீவிரமடையும் போராட்டம்

அமெரிக்காவில் மேலும் ஒரு  கருப்பின இளைஞர் போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அங்கு நிறவெறிக்கெதிரான  போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது .

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை, போலீஸ் அதிகாரி ஒருவர் காருக்கு வெளியே தள்ளி, அவரின் கழுத்தில் தனது கால் முட்டியை வைத்து அழுத்தினார். வலியால் துடித்த ஜார்ஜ் பிளாய்ட் என்னால் மூச்சு விட முடியவில்லை என்று கூறியவாறே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வெளியானதை தொடர்ந்து அங்கு நிற வெறிக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது

இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் ரேஷார்ட் ப்ரூக்ஸ் என்ற 27 வயது கருப்பின இளைஞர், வெண்டிஸ் உணவகம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு, அதில் படுத்து தூங்கியுள்ளார். அவரது காருக்கு பின்னால் மற்ற கார்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகத்தில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், ரேஷார்ட் ப்ரூக்ஸ்ஐ விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஆனால், போலீசாருடன் செல்ல மறுத்த ப்ரூக்ஸ், அங்கிருந்து தப்பியோட முயன்று இருக்கிறார். இதனால், போலீஸ் அதிகாரிகளுக்கும், கருப்பின இளைஞர் ப்ரூக்ஸ்க்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடலில் பட்டதும் ஷாக் அடிக்கும் துப்பாக்கியை ரேஷார்ட் ப்ரூக்ஸ்  மீது பயன்படுத்தி உள்ளனர் போலீஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பித்து அங்கிருந்து வேகமாக ஓடியுள்ளார் ப்ரூக்ஸ். அவரை பின்தொடர்ந்து துரத்திய போலீஸ் அதிகாரிகள், சில மீட்டர் தூரத்திற்குள்ளேயே ப்ரூக்ஸ் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி அட்லாண்டா நகர் முழுவதும் பரவியது. ரேஷார்ட் ப்ரூக்ஸ் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு காரணமாக அமைந்த வெண்டிஸ் உணவகத்தை இரவோடு, இரவாக தீ வைத்து கொளுத்தினர். கருப்பின இளைஞர் ரேஷார்ட் ப்ரூக்ஸ்ன் மரணத்திற்கு நீதி கேட்டு, அட்லாண்டா நகர் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தை தொடர்ந்து அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தற்போது ரேஷார்ட் ப்ரூக்ஸ்ன் மரணம் போராட்டக்காரர்களை மேலும் கொதி நிலைக்கு தள்ளி உள்ளது.  ரேஷார்ட் ப்ரூக்ஸ்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி காரெட் ரோல்ப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மற்றொரு போலீஸ் அதிகாரி, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். அதேநேரத்தில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, அட்லாண்டா காவல்துறை தலைவர் எரிக்கா ஷீல்ட்ஸ், தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதிகேட்டு அமெரிக்காவில் தொடங்கிய போராட்டம் உலகில் பல நாடுகளில் பரவி வரும் நிலையில் தற்போது ரேஷார்ட் ப்ரூக்ஸ்ன் மரணம் போராட்டக்காரர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து நிறவெறிக்கு எதிரான போராட்டம் தற்போது மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

நன்றி : தீக்கதிர் 

Leave A Reply

Your email address will not be published.