தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பில் ஆராயும் செயலணியில் தமிழர்கள் உள்வாங்கப்பட வேண்டும் – கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

“14.06.2020  அன்று கிழக்கிலங்கை உயர் கல்வி மாணவர்கள் ஒன்றியத்தினால் கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் உள்ளீடுகள்.”

ஊடக அறிக்கை 14.06.2020 கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கும் அதனை முகாமைத்துவம் செய்வதற்குமாக மேன்மைதங்கிய ஜனாதிபதியாகிய தங்களால் ஒரு செயலணி உருவாக்கப்பட்டுள்ளமையை நாம் வரவேற்கின்றோம். கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல் பாதுகாத்தல் மற்றும் மீள் நிர்மாணம் செய்து அவற்றை முகாமைத்துவம் செய்தல் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த நிலங்களை அளவீடு செய்து அவற்றை சட்ட ரீதியிலான இடங்களாக மாற்றுதல் உள்ளிட்ட விடயங்களை இந்த செயலணி மேற்கொள்ளவுள்ளது.

ஆனால் தமிழர்கள் அல்லாத உறுப்பினர்கள் மட்டுமே இச்செயலணியில் இணைக்கப் பட்டுள்ளமையானது இலங்கையின் பல்லினதன்மையை அங்கீகரிப்பதில் உள்ள போதாமையை வெளிக்காட்டியுள்ளதுஎன்பதை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றோம். இலங்கை தேசத்தின் ஓருமைப்பாட்டையும் இறைமையையும் மதிக்கின்ற கிழக்குவாழ் தமிழ் மக்களின் உணர்வுகளையிட்டு தாங்கள் அக்கறைகொள்ளுவீர்கள் என்று நாம் பலமாக நம்புகின்றோம்.

இலங்கையானது யுனஸ்கோ அமைப்புடன் தொட்டுணரா பண்பாட்டு மரபுகள் மற்றும் பன்மைத்துவ கலாசாரத்தைப் பேணும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கமைய கிழக்கிலங்கையில் உள்ள ஆதிப்பிரஜை மற்றும் பூர்வ குடிகள் சார்ந்த விடயங்களையும், அவர்கள் சார் அனுபவ நிபுணர்களையும் இக்குழுவில் இணைப்பது இன்றியமையாததாகும்.

அத்தோடு தொன்று தொட்டு கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துவரும் தமிழர்களின் பிரதிநிதிகள் இப்பணியில் இணைத்துக்கொள்ளப்படவேண்டிய பொருத்தப்பாட்டின் அவசியத்தையும் தாங்கள் சாதகமான முறையில் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என தயவுடன் கோருகின்றோம். நமது இலங்கை தேசத்தின் தொன்ம வரலாற்றினையும் தனித்துவத்தினையும் தேசிய ரீதியாகவும் சர்வதேசிய ரீதியாகவும் உறுதிப்படுத்தவும் அதனை பிரபல்யப்படுத்தவும் குறித்த செயலணியின் செயற்பாடுகள் பூரண வெற்றிபெற எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம்

ஒளிப்பதிவு – DAN Tv

Leave A Reply

Your email address will not be published.