இருபதுக்கு இருபது பொதுத் தேர்தலும் – வாக்காளர் பெருமக்களும்

இதுவரை 15 பொதுத் தேர்தல்களில் வாக்களித்துள்ள நம் நாட்டு வாக்காளர் பெருமக்களுடைய வரலாற்றில் 16 வது பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி வர்ப்போகிறது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தின் அதிகார வர்க்கத்திற்கு எதிராக இங்கிலாந்து மக்கள் மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக சகலருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. அதுவரையில் உடமைகளின் அதிபதிகளுக்கும், கல்விகற்றோருக்கும் (சாதாரண மக்களுக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது), ஆண்களுக்கான வாக்குரிமை முறையே நடைமுறையில் இருந்தது. அக்கும்பல் தமக்கான ஒருவரை தேரந்தெடுத்துக் கொண்டிருந்தனர். அதனால் சாதாரண மக்கள் கொடூரமாக அடக்குமுறை செய்யப்படுவதும், ஏமாற்றப்படுவதும், வஞ்சிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருந்தது. அதனை எதிர்த்து எழுந்த வாக்குரிமை சம்பந்தப்பட்ட போராட்டத்தினால் சர்வசன வாக்குரிமை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

ஆனாலும், தனியார் சொத்துடமையப் பாதுகாக்க இயலுகின்றமையினாலும், ஆள்கின்ற வர்க்கத்திற்கு பாரிய சவாலாக இல்லாத காரணத்தினாலும், வாக்குரிமையை மக்கள் தமக்கான ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயாரில்லாதக் காரணத்தினாலும் தேர்தல் முறை முதலாளித்துவ கட்டமைப்பில் இன்னமும் நடைமுறையில் உள்ளது.

இலங்கையிலும் அவ்வாறே! இலங்கை மக்கள்  வாக்குரிமையின் பலத்தையும், தமக்கான அரசியலைப் பற்றியும் சிந்திக்கத் தவறுகின்ற காரணத்தினால் தேர்தல் வரலாற்றில் இதுவரையிலும் அரசியலுக்கு வந்து செல்வோர் மக்களுக்கு எதிரான, சொத்துடமை கும்பலுக்கு சார்பான கொள்கையைக் கடைபிடித்து வருகின்றனர். இதனால் உழைக்கும் மக்களது வாழ்க்கை இதுவரையில் பிரகாசிக்கவில்லை. வரப்போகின்ற தேர்தலும் கூட வாக்காளர் பெருமக்களிடம் ”முடிந்தால் மக்களுக்கான ஆட்சியை நிறுவிப் பார்!” என்று சவாலே விடுகிறது. அதிகாரத்திற்காக வாக்கு வேட்டையில் பல கட்சிகளும் தீயா வேலை செய்துகொண்டிருக்கின்றன. இதில் மக்களுக்கான அரசியலையும் ஆட்சியையும் தேர்ந்தெடுப்பதன் பெரும் பொறுப்பு வாக்காளர் பெருமக்களுடையது.

வாக்குச் சுரண்டலை மேற்கொள்ளும் அதிகார வர்க்க கும்பலையும், வாக்குரிமையைக் காக்கும் மக்கள் நல கும்பலையும் வேறுபிரித்து அறிவதை வாக்காளர்களிடமே விட்டுவிட்டு, 16 வது பொதுத் தேர்தலுக்கான அரசியற் கட்சிகளினதும் தலைமைகளினதும் நிகழ்கால அரசியல் போக்குகளைப் பற்றிப் பார்ப்போம்.

பொதுஜன பெரமுனவும் அதன் தேர்தல் வியூகமும்

2009 யுத்தத்தின் பின் தொடர் வெற்றியைப் பெற்றுவந்த ராஜபக்சாக்கள்; தமது சர்வாதிகார போக்கினாலும், தோல்வி கண்ட பொருளாதாரத் திட்டங்களினாலும் 2015 ஆம் ஆண்டு மக்களால் புறக்கணிக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டனர். இதன்போது மக்களால் கொண்டுவரப்பட்ட நல்லாட்சி அரசாங்கமும் தலைமைகளும் மக்களுக்கு செல்லாக்காசாகிப் போனதாலும், ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து எழுந்த பாதுகாப்பு ஸ்திரத்தன்மையின் மீதான கேள்விகுறியினாலும், ராஜபக்சாக்களினால் தம் கூலிகள் மூலம் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட சிங்கள பேரினவாத பாசிச கருத்துக்களாலும் 2020 ஜனாதிபதித் தேர்தலின் மூலம் மறுபடியும் ராஜபக்சாக்கள் ஆட்சிக்கு வந்தனர். இந்தத் தேர்தலில் பெரும்பான்மையான சிறுபான்மை மக்கள் ராஜபக்சாக்களைப் புறக்கணித்திருந்தனர்.

பொதுஜன பெரமுனவின் அமோக வெற்றியை தொடர்ந்து ²/3 ஐ பெற்று ஆட்சியமைக்க ராஜபக்சாக்கள் காத்திருந்தனர். இதற்காக அவசர அவசரமாக பாராளுமன்றத்தைக் கலைத்ததோடு சூட்டோடு சூடாக பொதுத் தேர்தலுக்குப் போகத் தீர்மானித்தனர். ஆனால், கொவிட் – 19 வைரஸின் அச்சுறுத்தலால் பொதுத் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது எதிர்ப்பார்ப்பிலும் சிறு சலனம் ஏற்பட்டது.

இருமாதங்கள் இலங்கையை இழுத்து மூடியவுடன், அதனை சமாளிக்கக் கூட திராணியில்லாத மிகவும் பலவீனப்படுத்தப்பட்டிருக்கும் பொருளாதாரத்தினால் ராஜபக்சாக்களும் ஒரு கணம் திக்குமுக்காடினர். இக்காலப்பகுதியில் வரவிலும் பார்க்க செலவு கிட்டதட்ட மும்மடங்காகியிருந்தது. இலங்கை பூட்டப்பட்ட பின்னர் சமூர்த்தியில் கடன் பெற்ற தொகையில் மக்களுக்கு 5000 ரூபா பிரித்துக் கொடுக்கபட்டபோதும், அது சகல மக்களுக்கும் போய் சேரவில்லை. தன் அரசியலைச் சார்ந்தோருக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. இதுவா ஒரு அரசாங்கத்தின் சமூக சேவை என்ற கேள்வி அவ்விடத்தில் எழுந்தது. அதற்கடுத்த மாதம் 5000 ரூபா கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. பல சமுர்த்தி கொடுப்பனவுகள் இதனால் வெட்டப்பட்டன.

அதேநேரம், இராணுவ பலத்தின் மூலம் எதையும் சாதிக்க முடியும் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த கோட்டபாயவுக்கு, கடற்படையில் பலர் கோவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகியப் பின் சுகாதாரப் பாதுகாப்பின் உறுதித் தன்மை பற்றி மக்கள் மத்தியிலும் கேள்விகள் எழ ஆரம்பித்து விட்டன.

நாடு தழுவிய ஊரடங்குக்கு முந்திய கொரோனா அச்சுறுத்தல் நிலவிய காலத்தில் பருப்பு, செமன் டின்களின் விலை குறைக்கப்பட்டிருந்த போதிலும், சாதாரண மக்கள் அதிகமாக புழங்கும் சில்லறைக் கடைகளில் பழைய விலைக்கே பொருட்கள் விற்கப்பட்டதால் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

வரி வசூழிப்பின் மூலம் பொருளாதார நெருக்கடியை ஓரளவு சமாளித்துக் கொண்டிருந்த அரசாங்கத்திற்கு ஏற்றுமதி – இறக்குமதி தடைப்பட்டதாலும், மதுபானக் கடைகள் மூடப்பட்டதாலும், உள்நாட்டு உற்பத்தியும் வியாபாரமும் மங்கிப் போனதாலும் நிலைமை மிக மோசமாகியது. மேலும் இருமாதங்கள் நாட்டை இழுத்து மூடியிருந்தால் நாட்டின் கதி அதோகதிதான். அவ்வளவு பலவீனமான பொருளாதாரம் நம்முடையது. இது நம் நாட்டு அரசியல் வரலாற்றின் எச்சம்.

இதனால்தான், விகாரைகளை மூடிய அரசாங்கம் பார்களைத் திறந்தது. அடுத்ததாக, மக்களுக்கு மிக அத்தியாவசியத் தேவையாகவிருக்கும் உணவுப் பொருட்களின் மீது கோட்டபாயவின் அரசாங்கம் கைவைத்துள்ளது. முன்பை காட்டிலும் உணவு பொருட்களின் மீது வரியை ஏற்றியுள்ளது.

அத்தோடு, நேர்பாதை செயல்வீரன் என்ற கோட்டாபயவின் பிம்பம் கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் நிகழ்ந்த தொண்டமானின் மரண ஊர்வலத்தின் பின்னர் உடைய ஆரம்பித்துவிட்டது. ”கோட்டாவின் சட்டத்திற்கு மதிப்பில்லையா?” என்ற கேள்வி வாக்களித்த சிங்கள மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. அதேநேரம், லீசிங் கம்பனி ஜனாதிபதியின் உத்தவை மீறி செயல்பட்டதாலும், நியாயம் கேட்ட நபர் கொலை செய்யப்பட்டதாலும் கோட்டாபாய பலவீனமானவர் என்ற எண்ணத்தையும் சிங்கள மக்கள் மத்தியில் விதைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, பிணைமுறி ஊழல் மோசடி குற்றவாளிகள் வெளியில் உலாவுவதால் இது மேலும் ஊர்ஜிதமாகிறது. அதுமட்டுமல்லாது, அமைதிவழி போராட்டம் நடத்திய முன்னிலை சோசலிசக் கட்சியினர் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் நமக்கும் இதே நிலைமைதான் என்று மக்கள் சிந்திக்கத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டு சேர்ந்துள்ள போதிலும், பாரம்பரிய அக்கட்சி காணமல் போவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் காணப்படுவதால் ஆதரவாளர்கள் இவர்களின் கொள்கையின் மீது வெறுப்புக் காட்டுகின்றனர். அதுமட்டுமல்லாது, மஹிந்த – கோட்டாவுக்கு இடையில் நிலவும் முரண்பாடும் இத்தேர்தலில் செல்வாக்கு செலுத்தும்.

இவர்கள் பொதுத் தேர்தலை நடத்தி ²/3 பெரும்பான்மையைப் பெற பல முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தனர். முதலாவது, ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துமாறு கூறினர். காரணம்! ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலைக் காண்பித்து சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற திட்டம் தீட்டினர். ஆனால், அது முடியாமற் போனது. இரண்டாவதாக, மே மாதம் யுத்த நிறைவை காரணம் காட்டி வாக்குகளைக் கவர முனைந்தனர். அதுவும் முடியாமற் போனது. இனிமேல் ஓகஸ்ட் 05 குள் யுத்தத்தை தோற்கடித்தது போல அவர்களால் கோரோனாவை தோற்கடித்து விட்டதாகக் கூறமுடியாது. ஆக வெற்றிக்கான மாற்றுவழியைத் தேடுவர். இதனால், ²/3 பெரும்பான்மையை விடவும் குறைவானதொரு வெற்றியையே பொதுஜன பெருமுன பொதுத் தேர்தலில் பதிவு செய்யும்.

ரணில் – சஜித்தின் மல்யுத்தம்!

ரணசிங்க பிரேமதாச தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டப் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தது. 2015 ஆம் ஆண்டு ராஜபக்சாக்கள் மீதான மக்களின் எதிர்ப்பலையின் காரணத்தால் ரணில் – மைத்திரி அரசாங்கம் என்ற வடிவில் ஐக்கிய தேசியக் கட்சக்கு மறுபடியும் அதிகாரத்திற்கு வருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.

ஆனால், நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டதிலிருந்து மக்களது அபிலாசைகளும் தேவைகளும் முறையாக பூர்த்தி செய்யப் படாததாலும், பிணைமுறி ஊழல் போன்ற மாபெரும் பகற் கொள்ளைகளை மேற்கொண்டததாலும் இவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவர்கள் வழங்கிய பல கோரிக்கைகள், அதாவது குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கள், தேசிய ஒற்றுமையைப் பாதுகாத்தல், ஸ்தீரமான பொருளாதாரம் போன்றவைகள் நிறைவேற்றப் படாமல் போகப் போக மக்களும் இவர்களை விட்டு விலக ஆரம்பித்தனர்.

அதேநேரம், நல்லாட்சி அரசாங்கத்துக்குள்ளும் ரணில் தரப்பு, மைத்திரி தரப்புக்கு இடையில் முரண்பாடுகள் நிலவியதாலும், திகன கலவரம், ஈஸ்டர் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பாதுகாப்புத் தொடர்பான அச்சத்தால் பெரும்பான்மை மக்கள் இவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்தனர். இது விளையாட்டு பொம்மைகளின் ஆட்சி என முடிவு செய்தனர்.

அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தொடர்ந்து நிலவி வந்த கட்சித் தலைமைகளுக்கான போட்டி முற்றிப் போகவே, ரணில் தரப்பு, சஜித் தரப்பு என கட்சி உள்ளுக்குள்ளேயே பிளவுப்பட்டிருந்தது.  அதன் காரணத்தினால் ரணிலை கீழே தள்ளிவிட்டு சஜித் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கினர். ஆனால், சிங்கள மக்களில் பலரும் இத்தரப்புக்கு எதிராக இருந்தால் இவர்கள் தோல்வியைத் தழுவினர். சிறுபான்மை மக்கள் இனவாத ராஜபக்சாக்களின் மீதான எதிர்ப்பின் காரணமாக வாக்குகளை சஜித்துக்கு வாரி வழங்கியிருந்தனர். ஆனால், சஜித்தும் தேர்தலின் போது இனத்துவக் கொள்கையையே கையாண்டார்.

தேர்தலில் சஜித் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கட்சிக்குள் பூசல் நிலவவே சஜித் தரப்பு அணி ஐக்கிய மக்கள் சக்தி என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு பிரிந்து சென்றது. இதனால், பலமிழந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி மேலும் பலவீனமாகிப் போயுள்ளது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் தடுமாறிப் போயுள்ளனர். எதிர்கட்சியாக வரமுடியாது போகுமோ என்றும் சந்தேகிக்கின்றனர். எப்படியும் முன்பிலும் குறைவான ஆசனங்களையே வென்றெடுக்கும் நிலையே ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கிறது.

மறுபக்கம் சஜித் தரப்பும் பின்னடைவையே சந்தித்து வருகிறது. சஜித்திற்கு பக்கபலமாக இருந்த மங்கள சமரவீரவும் தற்போது அவரிடமிருந்து விலகிக் கொண்டுள்ளார். அதேபோல், மேலும் சில கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் விலகிக் கொண்டுள்ளனர். சஜித்திற்கு கட்சியை வழநடத்தக் கூடிய தலைமைத்துவ பண்பு கிடையாது என்றும், மேடைகளில் ஏறி பேசுவது மாத்திரம் அரசியல் என்றும் சஜித் கருதிக் கொண்டிருப்பதைப் போன்ற கதைகளும் அடிப்படுகின்றன.

அதேநேரம், ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவிற்கு எதிராக வீரவசனங்கள் பேசிய சஜித் கோஷ்டி தற்போது கோட்டாபயவிற்கு சார்பாக சஜித் பக்கம் நின்றுகொண்டு பேசுவது கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஹரின் பெர்னான்டோ கோட்டாவிற்கு ஆதரவாக பேசியதோடு, அவருக்கு பக்க பலமாக சஜித் வரவேண்டும் போன்ற கருத்தை தெரிவித்திருந்தார். இதனால், ராஜபக்சாக்கள் மீது எதிர்ப்பு கொண்டுள்ள சஜித் தரப்பினர் தடுமாறி போயுள்ளனர். எதிர்காலத்தில் கோட்டாபயவுடன் சஜித் இணைந்துக் கொள்வாரோ என்றும் அஞ்சுகின்றனர்.

இந்த நேரத்தில் சஜித் தரப்பும், ரணில் தரப்பும் ஒரு தந்திரோபாயத்தைக் கையாள தயாராய் உள்ளது. அதாவது, பொதுஜன பெரமுனவுடன் போட்டிப் போடாது, தமக்குள் ரணிலா? சஜித்தா? என்ற போட்டியை நிர்மாணித்து கட்சியின் வாக்குகளை தங்களுக்குள் பிரித்துக் கொள்ளத் தயாராகுகிறார்கள். ஆனால், இரு தரப்பும் தற்போது பலவீனமடைந்து விட்டதாலும், அதிகார ஆசையில் இவர்கள் பிரிந்து மோதிக் கொள்வதாலும் கட்சி வேட்பாளர்கள் பலர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திசைக்காட்டிக்குத் திசை கிடைக்கிறது!

கடந்த வருடம் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராகத் திரண்ட கட்சிகளும், சிவில் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். மக்கள மத்தியில் இவர்களது கருத்துக்களுக்கு வரவேற்பு இருந்த போதிலும், வாக்குகள் எண்ணிக்கையில் குறைவாகக் கிடைத்தன. காரணம்! கோட்டாபாயவை தோற்கடிக்க ஒரு பிரிவும், மறுபடி ஐக்கிய தேசியக் கட்சி வேண்டாம் என்று கருதிய இன்னொரு பிரிவும் இவர்கள் இருவரையுமே தேர்வு செய்வதில் மும்முரமாக செயற்பட்டதினால், தேசிய மக்கள் சக்திக்கு 3% வாக்குகளே கிடைத்தன. இது அவர்களுக்கு மாபெரும் பின்னடைவாக இருந்த போதிலும், அந்நேரம் அளித்திருந்த வாக்குகளில் பெரும்பாலான இரண்டாவது தெரிவாக இக்கட்சியே தெரிவு செய்யப்பட்டிருந்தது என்பதையும் அறிய கூடியதாக விருந்தது.

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து தேசிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலிலும் களமிறங்குகிறது. தேர்தல் இழுபறி காலத்தில் இவர்களது பலமும் அதிகரித்துள்ளது. ஏனைய பிரதான கட்சிகளின் மீது நம்பிக்கையில்லாத தரப்பினர் இவர்களோடு இணைந்து கொள்வதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகமாக உள்ளன. காரணம்! ஆட்சியமைக்க காத்திருக்கும் கோட்டாபய அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக்காட்டி மக்களுக்காக செயலாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் ஆகும். மற்றது, இதில் போட்டியிடுவோர் சமூகத்தில் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் அற்ற நன்மதிப்புப் பெற்றவர்களாக உள்ளதும் ஆகும். எதிர்கட்சிக்கான கேள்வி காணப்படுவதால் இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் கையும் பலமடையும் என்று நம்ப முடிகிறது. குழப்பமடைந்துள்ள மக்களின் பார்வையும் தற்போது இந்த பக்கம்தான் அதிகமாகத் திரும்புகின்றது.

சிறுபான்மை கட்சிகளும் போக்குகளும்

வடக்கு தமிழ் அரசியலைப் பொறுத்த வரையில், இதுவரையில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாத அரசியலாகவே உள்ளது. காணமலாக்கப்பட்டோர் விவகாரம், காணி பிரச்சனை, இராணுவத்தின் இட ஆக்கிரமிப்பு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பெண்கள் பிரச்சனை, அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவணை மற்றும் கலாசார சீரழிவுகள், விவசாயிகள், மீனவர்கள், வேலையற்றோர் என்று தொடரும் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.

தேர்தல் காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசுவதும், தங்களது அரசியல் இருப்புக்கு ஆபத்து வரும் நேரத்தில் மக்கள் பற்றி பேசுவதும், கோரிக்கைகளை முன்வைப்பதுமாகவே வடக்கு அரசியல் கட்சிகள் காலம் கடத்துகின்றன. வடக்கு அரசியலானது பிரதேசம் சார்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அரசியலாக இருப்பதால், தமிழ் மக்களின் கோரிக்கைகள் தெற்கில் ஒலிக்காமல் இருப்பதால் அது கண்டுக்கொள்ளப்படாமல் போகிறது. வடக்கு எல்லையோடு கதை முடிந்து விடுகிறது. ஆனால், வடக்கு அரசில்வாதிகளால் தமது பிரச்சனையை தீர்க்க முடியாது என்று அறிந்தும் பிரதேசம் சார்ந்து வடக்கு மக்கள் அவர்களுக்கே வாக்களிப்பது வழக்கமாகிவிட்டது.

கிழக்கில் வித்தியாசமான அரசியல் நிலவரமே காணப்படுகிறது. அங்கு இனவாத அரசியலின் போக்கை எம்மால் அவதானிக்க முடிகிறது. தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் தொடரும் முரண்பாட்டிலேயே கிழக்கின் தமிழ் – முஸ்லிம் கட்சிகளினதும், அரசியல்வாதிகளினதும் இருப்பு தங்கியுள்ளது. இந்த அரசியலுக்கு கிழக்கு மக்கள் காணிக்கை ஆகுகிறார்கள். தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்படுகின்ற நேரத்தில் இனவாத அரசியலுக்கு சங்கு ஊதப்பட்டுவிடும். மக்களுக்கான அரசியல் உருவாகும் விடத்து கிழக்கு மாகாணம் அதிவேக வளர்சியைக் காட்டும்.

மலையக அரசியல் அது வேறுவிதமான போக்கில் இயங்குகிறது. தோட்டத் தொழிலாளர்களையும் தொழிற்சங்கத்தையும் சார்ந்தே மலையக அரசியல் இருக்கிறது. நல்ல காசு பார்க்க் கூடிய வழியாக இருப்பதுவே அதற்கான காரணம் ஆகும். ஊதியப் பிரச்சனை, காணிப்பிரச்னை போன்ற இன்னும் பல வாழ்வாதாரப் பிரச்சனைகள் தீர்க்கப்படாதுள்ள நிலையில், தேர்தல் காலங்களில் மாத்திரம் மலையக மக்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதும், அன்பளிப்புகளை வழங்குவதும், பின் ஏமாற்றுவதும் வழக்கமாகிவிட்டது. இதனை தற்போதைய தலைமுறை உணர்ந்துள்ள போதிலும், அந்த வலைக்குள் எப்படியோ சிக்குப்பட்டு விடுகிறது.

ஆக, பிரதேசம் சார்ந்த அரசியல் மக்களுக்கானதாக உருவாக்குவதனூடாக பின் தேசிய ரீதியில் மக்களின் அரசியலை பலப்படுத்துவதன் ஊடாகவோ அல்லது அனைவரும் இணைந்து மக்களுக்கான அரசியலைத் தேர்ந்தெடுப்பதன் ஊடாகவோ மட்டுமே சகல பிரச்சனைகளுக்குமான தீர்வை அணுக முடியும். மக்கள் குறுகிய வட்டத்தில் இருந்து முதலில் வெளிவர வேண்டும்.

பிரதேச ரீதியாக, இனரீதியாக சிறுபான்மை மக்கள் தொடர்ந்தும் பிரிந்து நின்று ஏமாற்று பழைய அரசியல்வாதிகளையோ அல்லது புதிதாக முளைக்கும் ஆதிக்க சக்திக்கு பலம் சேர்க்கும் அரசியல்வாதிகளையோ பலப்படுத்துவதன் மூலமாகவோ அல்லது அவர்களை ஆதரிப்பதன் மூலமாகவோ சிறுபான்மை மக்களுக்கு எதிரான திட்டங்களை வகுத்து செயற்படும் அரசியல் தரப்பையே மேலும் பலப்படுத்துவதாக இது அமையும். இதை ஒருவார்த்தையில் சொல்லி  முடிப்பதென்றால்,  ”சிறுபாண்மை மக்கள் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்ளுதல்” என்று கூற முடியும்.

சதீஸ் செல்வராஜ்

Leave A Reply

Your email address will not be published.