சுயநிர்ணய உரிமைக்குப் போராடிய நாங்கள் இன்று சுயத்தை இழந்தவர்களாக உள்ளோம் – ம.வி.மு யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர்

நேர்காணல்

 

கொரோனாவை வைத்து அரசியல் முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் மீது பொதுவான குற்றச்சாட்டு எதிர்கட்சிகளால் முன்வைக்கப்படுவது குறித்து என்ன கூறுகிறீர்கள்?

ஆம், அரசியல் ரீதியாக அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டை நாங்களும் முன்வைத்து வருகின்றோம் என்பது உண்மையே. அதற்கான காரணம், கொரோனா தொற்று கடந்த வருடம் 2019 நவம்பர் மாதமளவில் சீனாவின் ஹூவான் பிராந்தியத்தில் ஆரம்பிக்கிறது. பின்னர் உலகலாவிய ரீதியில் பரவுகிறது. ஜனவரி மாதம் உலகத்தில் பல நாடுகள் தமது நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றன. இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி சீன பெண் ஜனவரி 07ஆம் திகதி இனங்காணப்பட்டார். மார்ச் 11ஆம் திகதி இலங்கையர் ஒருவர் தொற்றுக்கு உள்ளாகிறார். இப்படியான நிலையில் மார்ச் 7ஆம், 11ஆம் திகதிகளில் இலங்கைக்கு 160 சீனர்கள் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக வருகின்றனர். அவர்கள் தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான சுகாதார நடவடிக்கைகளை கையாளவில்லை. மார்ச் 18ஆம் திகதி தான் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படுகிறது. அதுவும் தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அரசாங்கம் விமான நிலையத்தை மூடியது.

கொரோனா கட்டுப்பாட்டு ஜனாதிபதியின் செயலணி ஜனவரி 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து என்ன செய்தார்கள்? என்ற கேள்வி எழுகிறது. எமது நாட்டிற்கு இரண்டே இரண்டு வழிகளிலேயே வேறு ஒரு நாட்டில் உருவான தொற்றுநோய் உள்ளே வரமுடியும். அவைகள் ஒன்று துறைமுகம், இரண்டாவது விமான நிலையம் இவை இரண்டையும் காலம் தாமதிக்காது மூடப்பட்டிருக்குமானால் எமது நாட்டிற்குள் கொரோனா தொற்று வருவதற்கான வாய்ப்பே இல்லையென்பதே சுகாதார துறையினரின் கருத்து. ஆனால் அரசாங்கம் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

இவ்விடத்தில் அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. அது வேறு ஒன்றுமல்ல தேர்தலாகும். மார்ச் இரண்டாம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலே பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது. மார்ச் 19 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இறுதி நாளாகும். எப்படியாவது வேட்புமனுக்களை தாக்கல் செய்து முடிக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் குறிக்கோளாக இருந்தது.

அரசாங்கம் அவ்வாறு நடந்துகொண்டது ஏன்?

ஆம், அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பதற்கான காரணம் எப்படியாவது தேர்தலை நடத்தி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் குறிக்கோள். அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிஆரச்சி கொரோனா ஒரு பெரிய விடயமல்ல தேர்தலை நடத்த வேண்டும். அதில் எங்களுக்கு வெல்லவும் முடியும். அதனால் தேர்தல் தான் முக்கியமானது என்றார். அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தனா இப்போது ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக உடைந்திருக்கும் நேரம். அதனால் எங்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் தேர்தலை பிற்போடக் கூடாது என்றார். அதேபோன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்க் நாட்டு தலைவர்களுடனான தொழிநுட்ப உரையாடலின் போது கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக ஏப்ரல் 25ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் என்அண்ணன் மகிந்த ராஜபக்ஷாவின் தலைமையிலான அரசாங்கம் உருவாகப்ப போகிறது. என்பதை வலியுறத்தினார் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.

ஆகவே அரசாங்கம் “எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டும். அது மக்களின் பிணங்கள் மீது ஏறி சென்றாலும் பரவாயில்லை.” என்ற நிலையிலேயே இருந்தது. அப்போது தான் தேர்தல் ஆணைக்குழு தேர்தலை பிற்போடுகிறது. எது எவ்வாறானாலும் தேர்தல் ஆணையகம் எடுத்த முடிவின் காரணமாகவே இந்நாட்டு மக்களின் உயிர்கள் பலியாவது தடுக்கப்பட்டது. அதற்கு அவர்களுக்கு அதாவது, தேர்தல் ஆணையகத்திற்கு முழு நாட்டு மக்களும் நன்றி கூறியாக வேண்டும். அரசாங்கம் இவ்வாறான குறிகோளுடன் செயற்பட்டதன் காரணமாகவே தற்போதும் கூட அரசாங்கம் அதே நிலைபாட்டிலேயே இருக்கிறது. ஆகவே, மக்களின் உயிர்களை மதிக்காது தமது அதிகாரப் பேராசையின் நிமித்தமாக செயற்படும் ராஜபக்ஷ கும்பலுக்கான விமர்சனம் இவ்வாறே எழுந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கொரோனாவை வைத்து குழப்புவதாக வடக்கு அரசியல்வாதிகள் உறுதிப்படுத்துகின்றமையை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

யுத்தம் முடிந்த 11 வருடங்கள் பூர்த்தியாகும் இவ்வேளையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதில் அரசாங்கம் முனைப்புக் காட்டியது. இது ராஜபக்ஷாகக்ளின் மனநிலையாகும். அதாவது 30 வருட பயங்கரவாத யுத்தத்தை முடித்தவர்கள் நாங்கள் புலிகளை அழித்தவர்கள் நாங்கள். அது மட்டுமா? சஹாரான் எனும் இஸ்லாமிய பயங்கர வாதத்தை ஒழித்தவர்கள் நாங்கள். இனி இந்த நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்காது தடுத்தவர்கள் நாங்கள். அபப்டியான நாங்கள் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும்’ தடுத்து நிறுத்திவிட்டோம். அதுமட்டுமல்ல! உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொடிய கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாத்தவர்கள் நாங்கள்.என்று மார்தட்டிக்கொண்டு சிங்கள மக்களிடம் இனவாதத்தை சூடேற்றி அதில் குளிர்காய முனைந்துக் கொண்டிருப்போர் இந்த ராஜபக்ஷ கும்பலாகும். அதாவது, அடுத்து வரும் பொதுத் தேர்தலுக்கான சுலோகமாக இதைப் பயன்னடுத்துவதை நோக்கமாகக் கொண்டே இவர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள் என்பதே யதார்த்தமாகும்.

ராஜபக்ஷாக்களின் நடவடிக்கை அவ்வாறு இருக்கின்றபோது தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்? உண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யாருக்காக? எதற்காக? யுத்தத்தின்போது உயிரிழந்த இளைஞர், யுவதிகளை நினைவுகூறும் நாளாகும். அந்த நாளை நாம் எதற்காகப் பயன்படுத்துகின்றோம்? ராஜபக்ஷாக்கள் அங்கு சிங்கள மக்களின் இரத்தத்தை இனவாதத்தால் சூடேற்றுவது போன்றே நமது தமிழ் அரசியல்வாதிகளும் அடுத்து வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான நாளை தமது கேடுகெட்ட அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்களே தவிர, உண்மையில் இதயப்பூர்வமாக செயற்படுவதாகத் தெரியவில்லை. ஏனென்றால், யுத்ததால் பாதிக்கப்பட்ட 89 ஆயிரம் விதவைகள் இருக்கிறார்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் எடுத்த நடவடிக்கை என்ன? 28 ஆயிரத்திற்கும் அதிகமான பிள்ளைகள் பெற்றோரை இழந்து அனாதைகளாகியுள்ளனர். 8 ஆயிரத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இழந்து அவர்களின் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டிருக்கிறது. மைக்ரோ பினான்ஸ் நிறுவனங்களின் கடன் தொல்லையால் அதை திருப்பிச் செலுத்த முடியாது கூடுதலாக தற்கொலை செய்துகொண்டவர்களில் வட கிழக்கு மக்களே முதலிடம் வகிக்கிறார்கள்.

ஒரு காலத்தில் தற்கொலை போராளிகளாக முதலிடம் வகித்த நாம் இன்று வறுமைக் காரணமாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது தற்கொலை செய்துக்கொவதில் முதலிடம் வகிக்கின்றோம். வடக்கில் இன்றும் 40 சதவீதமான மக்கள் வீடுகள் இல்லாது கொட்டில்களிலேயே வாழுகின்றனர். நூற்றுக்கு 60 சதவீதமான மக்கள் ஏதோ முறைசார்ந்த முறைசாரா விதத்தில் கடனாளிகள். இதுவே இன்றைய வடபகுதியின் யதார்த்த நிலை. இந்த வறுமை, துன்பத்திற்கு கூடுதலாக இறையாகியிருப்போர் முன்னாள் போராளிகளும், அவர்களின் குடுப்பங்களுமாகும் என்பதை எவராலும் மறுதளிக்க முடியாது. வெளிநாட்டு உறவுகளின் உதவியில்லாத யாழ்ப்பாணத்தை திரும்பிப் பாருங்கள். எப்படியிருக்கும் நினைத்தும் பார்க்க முடியாது.

அதனால் இந்த நினைவேந்தல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியான நாங்கள் தமது பிள்ளைகளை நினைவுகூறுவதற்கு மக்களுக்கு உரிமையிருக்கிறது. இறந்தவர்களை நினைவுகூற மறுதளிக்கும் அரசாங்கம் ஒரு அரசாங்கமா? அவர்கள் மனிதாபிமானிகளா? காட்டுமிராண்டிகளைத் தவிர இவ்வாறான நடவடிக்கைகளை வேறு எவருக்கும் எடுக்க முடியாது. அதேபோன்று தமிழ் மக்களை நேசித்ததாக கூறுகின்ற போராளிகள் முன்னெடுத்த போராட்டம் என்ன? எமக்கு பல்வேறு விமர்சனங்கள் உள்ள போதிலும், போராட்ட நோக்கத்தின் பல குறைப்பாடுகள் இருந்தபோதிலும் அவர்களின் அற்பணிப்புக்கு, தியாகத்திற்கு தலைவணங்கியாக வேண்டும். அப்படியானால் இன்றையத் தமிழ்த் தலைவர்கள் அவர்களை உண்மையில் நேசிக்கிறார்களா?அல்லது தேர்தலுக்காகப் பகடைக்காய்களாக பயன்படுத்துகிறார்களா? என்பது மக்களுக்கே வெளிச்சம்.

ஜனாதிபதியின் யுத்த வெற்றி நிகழ்ச்சி உரையை எவ்வாறு நோக்குகிறீர்கள்?

யுத்தம் இரண்டு எதிரி நாடுகளுக்கு இடையில் இடம்பெறவில்லை. எமது இலங்கை தேசத்தின் பிள்ளைகளே இந்த யுத்தத்தில் பலியானார்கள். யுத்தம் என்பது கொடியாது. அது ஒரு இராபோஷண விருந்தல்ல. எமது பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதற்குப் பதிலாக அதாவது, இறைச்சி வாயால் பேசுவதற்குப் பதிலாக அன்று இரும்பு வாய்களை பேசிக்கொண்டன. அந்த இரும்பு வாய்களுக்கு ஈவிரக்கம் கிடையாது. அது சிறுவரா, முதியவரா, ஆணா, பெண்ணா, என்பது அந்த இரும்பு வாய்க்குத் தெரியாது. அதனால் யுத்தம் கோரமானது. அதன் முடிவும் அகோரமானது. அதுவே முள்ளிவாய்காலில் நடந்தேறியது. யுத்தம் முடிந்தப் பின்னர் அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரவணைக்க வேண்டிய அரசாங்கம் இன்னமும் அந்த மக்களை அதே வக்கிர கண்ணோட்டத்துடன் பார்க்குமானால் அது யுதத்ததைவிட கொடுரமான செயலாகும். இந்த நிலமை மாற வேண்டும்.

இதன்போதே வெற்றிப் பெற்றவனாகத் தம்மை கருதிக்கொள்ளும் ராஜபக்ஷாக்கள் இருமார்ப்புடன் செயற்படுகின்றனர். ஒவ்வொரு மே 18ஆம் திகதியும் இவ்வாறே இடம்பெற்றது. இப்போது அதன் உச்சக்கட்ட நிலைக்கு வந்துள்ளது. அதன் விளைவாகவே கடந்த 18 ஆம் திகதி உயிர்நீத்த இராணுவ வீரர்களின் நினைவு நாள். அதில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் மக்களின் இரத்தத்தைச் சூடேற்றியுளள்ளார். அதன் வெளிப்பாடே அவரது உரை.முப்பது வருட கொடிய பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டேன். அதை நிறைவேற்றிய இராணுவ வீரர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ எதிராக எவரும் அல்லது எந்த அமைப்புகளாவது நடவடிக்கைகை எடுக்குமானால் அதை தடைசெய்வதற்கும், அவர்களுடனான உறவை துண்டிப்பதற்கும் ஒரூபோதும் நான் பின் நிற்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.  இந்த இடத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன் மேதகு ஜனாதிபதி அவர்களே, 2009ஆம் ஆண்டு எமது நாட்டுக்கு எதிராக ஐ.நாவில் பிரேரணைகளை கொண்டு வந்தோர் வேறு யாருமல்ல ஐக்கிய அமெரிக்காவாகும்.

அத்தாடு நிற்காது பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் எமக்கு எதிரான நடவடிக்கைகளை தொடுத்தவர்கள் அமெரிக்காவாகும். அதனால் முதலில் நாம் அமெரிக்கவுடனான தொடர்புகளையே துண்டிகக் வேண்டும். கொடுக்கல் வாங்கலை நிறுத்த வேண்டும். அதற்கு நீங்கள் முன் வருவீர்களா? முன்ருவீர் என்றால் அமெரிக்காவுடனான எம்.சி.சீ உடன்படிக்கையை குப்பைத் தொட்டையில் போடுவீர்களா? எக்ஸா, சோபா உடன்படிக்கைகளை கிழித்தெறிவீர்களா? அதற்கெல்லாம் முதலில் நமது நாட்டுக்கு எதிராக பல்வேறு கேடுகெட்ட நடவடிக்கைகளை எடுத்துவரும் அமெரிக்க நாட்டு குடியுரிமையைப் பெற்றுள்ள உங்களின் மனைவி, உங்களின் மகன், உங்களின் தம்பி பஷில் ராஜபக்ஷா ஆகியோரின் குடியுரிமையை இரத்துச் செய்யுங்கள் ஐயா. அதைச் செய்வதற்கு முதுகெலும்பு இருக்குமானால் வரவேற்கத்தக்கது. அதனால் ஜனாதிபதி அவர்களே வெட்டிப் பேச்சுகளால் வீடுகட்ட முடியாது.

கொரோனாத தாக்கம் நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வாறான தாக்கத்தை செலுத்தவுள்ள? உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்திருக்கிறதே?

கொரோனாத் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் வாழ்க்கை பத்து வருடத்திற்கு பின்நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. இதில் மிகவுகம் முக்கியிமான விடயமாக எரிபொருள் விலையை எடுத்து கொள்ளலாம். கொரோனாவுக்கு முன்னர் உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 130 டொலராகும். அப்போது எமது நாட்டில் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 137 ரூபாய், டீசல் 104 ரூபாய். மண்ணெண்ணெய் 97 ரூபாய். தற்போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 10 – 20 டொலாராகும். அதற்கிணங்க மண்ணெண்ணெய் 28 ரூபாவிற்கும் பெற்றோல் 56 ரூபாவிற்கும் டீசல் 40 ரூபாவிற்கு கொடுக்க முடியும். ஆனால் கோட்டாபயவின் அரசாங்கம் என்ன செய்கிறது ?மக்களுக்கு அதன் நிவாரணத்தை வழங்குவதற்கு பதிலாக பனையிலிருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போன்று மிதித்து வருகின்றது. வீழ்ந்துளள் நமது நாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் தேசிய உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும்.

முலாவது 80 இலட்சத்துக்கு அதிகமான விவசாயிகளுக்கு எரிபொருள் விலையை குறிப்பாக மண்ணெண்ணெய் விலையை குறைத்தால் அதன் நன்மைகளை அவர்கள் அடையும்போது உற்பத்தியை பெருக்க முடியும். மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விலை குறைந்தால் அவர்களின் படகுகளுக்கான செலவுகள் குறையும். மீனவர்களும் நன்மையடைவது போன்று பாவனையாளாகளுக்கு மீன்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும். அதுபோன்று எரிபொருள் விலை குறையும்போது மின்சாரக் கட்டணத்தையும் குறைக்க முடியும்.

அதன் மூலமாக சிறுகைத்தொழில் செய்வோர் தமது உற்பத்திகளை பெருக்க முடியும். வீழ்ச்சியடைந்துள்ள கைத்தொழில் துறையை கட்டியெழுப்ப முடியும். அதேபோன்று ஆடைத் தொழிற்சாலை, சிறுகைத்தொழில், விஷேடமாக யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் விவசாயிகள் தங்களின் உற்பத்திக்கு பெருந்தொகை மண்ணெண்ணெயைப்  பாவிக்கின்றனர். எரிபொருள் விலை குறைகக்ப்படுமானால், உலகச் சந்தையில் குறைந்துள்ள எரிபொருளை அதன் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வருமானால் மக்கள் நன்மையடைவது போன்று நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும். 14 இலட்சம் முச்சக்கர வண்டி ஒட்டுனர்கள் உள்ளார்கள். பெற்றோல் விலை குறைந்தால் கட்டணங்கள் குறைக்கப்படும். அதன் நன்மைகள் மக்களுக்கே. அதனால் தற்போது கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை மக்களுக்கு பெற்றுக்கொடுகக் அரசாங்கம் முன்வர வேண்டும். இனியும் சாக்கு போக்ககளைக் கூறாது மக்களுக்கான எரிபொருள் மனியத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தவும்.

அதற்குப் பதிலாக அரசாங்கம் என்ன செய்கிறது? எரிபொருள் இலாபத்தில் ஒரு நிதியத்தை உருவாக்கி 20 ஆயிரம் கோடி ரூபாய் சேகரிக்க இருக்கிறது. அந்தப் பணத்திற்கு என்ன நடக்கும் என்ற யாருக்குத் தெரியும். 5000 ரூபாய் கொடுப்பனவுக்காக 12 ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் தேவைப்படுகிறது. எரிபொருள் நிதியத்தில் அதை கொடுத்தாலும் கூட மேலும் பணம் மிச்சமிருக்கும். ஆகவே மக்களுக்கான மானியத்தை வழங்குபடி நாம் கேட்டுகொள்வதோடு, இது ஒன்றே போதும் நமது நாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அடித்தளமிடுவதற்கு.

தற்போதைய நிலையில் தேர்தல் நடைபெறின் வாக்களிப்பு வீதம் எவ்வாறு அமையும்?

தற்போதைய நிலையில் தேர்தல் ஒன்று நடைபெறுமானால் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவது தவிர்க்க முடியாது. ஆனால் அரசாங்கம் எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டுமென கங்கனம் கட்டிக்கொண்டிருக்கிறது. அதற்காக சுகாதாரத் துறையினரின் ஆலோசனை அனுமதியின்றி ஊரடங்கை தளர்த்தியுள்ளது. கொரோனா முடிந்துவிட்டதாக மக்களுக்கு காட்டுவதற்கு முனைந்து வருகிறது. 23 கொரோனா தொற்றாளர்கள் இருக்கும் போது நாட்டை லொக் டவுன் செய்த அரசாங்கம் தற்போது 1000 கொரோனா தொற்றாளர்கள் இருக்கும்போது நாட்டைத் திறக்கிறது. ஏன் எதற்காக இந்த அவசரம்? கொரோனா முடிந்தப் பின்னர் நாட்டில் பல்வேறு பிரச்சிகைள் உக்கிரமடையுமென்பது அரசாங்கத்திற்குத் தெரியும். அதில் மிகவும் முக்கியமானது பொருளாதாரம். பொருளாதாரம் நெருக்கடி உக்கிரமடையும்போது மக்கள் பொருளாதாரப் பிரச்சிகைளை பற்றிய கவனத்தை செலுத்துவார்கள். அதற்கான பதில் அரசாங்கத்திடமில்லை. அதனால் மக்களின் கவனம் திசை திரும்புவதற்கு முன்னர் எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம்.

ராஜபக்ஷாக்கள் இவ்வாறு காய்களை நகர்த்துவது நல்லதற்கல்ல என்பது மக்களுக்கு புரியவேண்டும். ஜனநாயகத்தை புதைப்பதற்கான நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மீண்டும் குடும்ப ஆட்சி, இலஞ்சம், ஊழல், மோசடி, வீண்விரயம் கொள்ளைகார கும்பல் அதிகாரத்தை கையகப்படுத்த முனைந்துக்கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல! இனவாதம், மதவாத ரீதியாக மக்களை சூடேற்றுகின்ற நடவடிக்கை மக்களை பிரிக்கின்ற நடவடிக்கை “ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்பது போன்ற நடவடிக்கைகளே ராஜபக்ஷாக்களின் சூத்திரமாகும். எனவே, மக்கள் இதில் விழிப்பாக இருக்க வேண்டும். அவர்கள் விரிக்கின்ற பொறியில் சிக்கக் கூடாது. அதனால் தேர்தல் நடைபெறுமென்றால் வாக்களிப்பு வீதம் குறையும்போது அதன் நன்மைகள் ஆளும் தரப்பினருக்கே கிடைக்கும். ஆளும் தரப்பு என்போர் சர்வாதிகாரப் போக்குடையோராகும். அதனால் மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகம் என்பது எவரும் வெள்ளித்தட்டில் வைத்து வழங்கவில்லை. மக்கள் பேராடி இரத்தம் சிந்தி, உயிர் தியாகம் செய்து பெற்ற ஒன்றாகும். அது மக்களுக்கு உரியதாகும். அதனால் அதனை பாதுகாக்கும் கடைமை மக்களுக்கு உரியதாகும். இந்த வகையிலேயே நாம் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் வடபகுதி மக்களின் பிரச்சினையை ம.வி.மு எவ்வாறு நோக்குகிறது?

வடபகுதி மக்களின் பிரச்சினைகளைப் பற்றி நான் மேலே கூறியவாறு தமிழ் மக்களுக்கு பாரிய கடமைப் பொறுப்பொன்று இருக்கிறது. அது கடந்த 72 வருடங்களாக இந்த நாட்டை மாறி மாறி ஆண்டோர் முதலாளித்துவ ஆட்சியாளர்காளாகும். அவர்கள் மேட்டுக்குடி வர்க்கமாகும். இந்த நாட்டை வலவ்காரர்களே ஆண்டுள்ளனர். 1948 முதல் 56 வரை டி.எஸ் போத்தலே வலவ்காரர்கள். 56 முதல் 65 வரை பண்டாநாயக்கா, ஸ்ரீமா ஹொரகொல்ல வலவ்காரர்கள். 65-70 டட்லி மீண்டும் போத்தலே வலவ்காரர்கள். 70-77 வரை ஸ்ரீமா மீண்டும் ஹொரகொல்ல. 77 முதல் 94 வரை ஜே.ஆர். கொள்ளுபிட்டிய வலவ். 94 முதல் 2004 வரை சந்திரிக்கா மீண்டும் ஹொரகொல்ல வலவ். 2005 முதல் 2015 வரை மகிந்த மெதமுலன வலவ். 2015 முதல் 2019 வரை ரணில் மீண்டும் கொள்ளுபிட்டிய வலவ். இப்போது கோட்டாபயா மெதமுலன வலவ். ஒட்டுமொத்தமாக நமது நாட்டை கடந்த 72 வருடங்களாக நான்கு வலவ்காரர்களே ஆண்டுள்ளனர்.

அதாவது ,அந்த மேட்டுக்குடியினருக்கு மக்களின் துன்பம் என்றால் என்னவென்று தெரியாது. பசி என்றால் என்னவென்று புரியாது. அவர்களுக்கு தமழ் சிங்களம், முஸ்லிம் தெரியாது. அவர்கள் தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் வஞ்சித்துள்ளார்கள். இன்னமும் வஞ்சிக்கிறார்கள். அவர்கள் ஏழைகளில் இரத்தத்தையும் வியர்வையையும் விஸ்கி பிராண்டியென குடிப்பவர்கள். அவர்களின் சொகுசு வாழ்க்கைக்கு ஆபத்து வரும்போது சிங்களம் தமிழென்று பாராது ஒடுக்குவார்கள். அவ்வாறே இந்நாட்டில் வடக்கிலும் தெற்கிலும் ஒரு இலட்சத்துக்கு அதிகமான சிங்களத் தமிழ் இளைஞர் யுவதிகளை கொன்று குவித்தார்கள். அவர்கள் இரத்தக் காட்டேறிகள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். 72 வருடற்திற்கு பின்னர் எமது நாடு 13 இலட்சம் கோடி ரூபாய் கடன்கார நாடாகும். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 6 இலட்சம் கடன்கார்கள். அது தமிழ், சிங்கள, முஸ்லிம் எல்லோருமாகும். நாம் சேர்ந்தே கடனை செலுத்தியாக வேண்டும்.

பிறக்கும் குழந்தைகளில் 42 வீதம் போஷாக்கின்மையால் வாடுகிறது. 22 சதவீமான கர்ப்பிணிப் பெண்கள் இரத்தச் சோகையால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்கள் தொகையில் 42 சதவீதமானோர் ஒரு நாளைக்கு இரண்டு டொலருக்கு குறைவான வருமானத்தை பெறுகின்றனர். இன்று வறுமை கூடிய மாகாணம் வட மாகாணமாகும். பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்பில்லை. கடன் சுமையால் மக்கள் விழி பிதுங்கியுள்ளனர். போதைபொருளுக்கு அடிமையான இளம் சமூகம், வால்வெட்டுக் கும்பல், பாலியல் துஷ்பிரயோகம். சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறும் மாவட்டங்களில் எமது முல்லைத்தீவு மாவட்டம்  முதல் நிலையில் உள்ளது. இவ்வாறான பிரச்சினைகளால் கடந்த 72 வருடங்களாக நாம் வதைக்கப்பட்டு வருகின்றோம்.

எம்மை இவ்வாறு வதைக்கின்றபோது எமது வரிப் பணத்தில் அமைசச்ர்களுக்கு சொகுசு வாகன இறக்குமதிக்காக நிதி ஒதுகக்ப்படுகிறது. 1300 கோடி ரூபாய்க்கு அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளது. பாதை அமைப்பது அதுவே அவர்களின் கொள்ளையடிக்கும் பாதையாகும். கிரிக்கட் மைதானம் அமைப்பதற்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத இவர்கள் இப்போது புதிதாக கிரிக்கட் மைதானமென்றை அமைக்கப் போகிறார்கள். இது யாருடைய பணம்? மக்களின் வரிப்பணம் அவர்களதும் அவர்களின் பிள்ளைகளினதும் பேரப்பிள்ளைகளினதும் ஆடம்பர வாழ்க்கைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதிலிருந்து நாம் மீள் வேண்டுமென்றால் இந்த உண்மையை புரிந்துக் கொள்ள வேண்டும்.

அதற்காக எமது சாதி, இன மத, வேறுபாடுகளைக் கலைந்து ஒன்றுபட்டு எம்மை வதைக்கும் ஆட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக திரண்டெழ வேண்டும். அதற்காக உண்மையில் மக்களின் உரிமையை மதிக்கின்ற, சமத்துவத்தை நேசிக்கின்ற மக்களின் குரலாக ஒழிக்கும் கொள்கையுள்ள அதற்காக தங்களை அற்பணம் செய்துள்ள சக்தியாகத் திகழும் தேசிய மக்கள் சக்தியைப் பலப்படுத்த வேண்டும். இனியும் வேண்டாம் இனவாதம் என்று முழுங்குவோமாக. ஆம் சுயநிர்ணய உரிமைக்குப் போராடிய நாங்கள் இன்று சுயத்தை இழந்தவர்களாக உள்ளோம். ஆம்! நாம் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்றால் சுயமரியாதையின் குரலாக ஒலிக்கும் மக்கள் சக்தியோடு அணிதிரள வேண்டும். அதுவே தேசிய மக்கள் சக்தி ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.