நான் ஆனையிறவில் இராணுவத்தினர் 2000, 3000 பேரை ஒரே இரவில் கொன்றேன்… மஹிந்த ராஜபக்ஷ என்னை பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலுக்கு வரச் சொன்னார்… கருணா அம்மான் கூறுகிறார்!
“நான் கொரோனாவை விட ஆபத்தானவன். ஏனென்றால் கொரோனாவில் 11பேரே உயிரிழந்துள்ளனர். ஆனால் நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தசமயம் ஆனையிறவில் இராணுவத்தினர் 2000, 3000 பேரை ஒரே இரவில் கொன்றுள்ளேன். அதேபோல், கிளிநொச்சியில் எத்தனை வருமோ?” என்று முன்னாள் துணையமைச்சரும், பொதுஜன பெரமுனவின் பிரபல்யமான நபருமான கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் (19) அம்பாறை மாவட்டத்தில் 2020 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போதே மக்கள் முன்னிலையில் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர்,
“என்னோடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கதைத்தார். அம்மான் ஏன் இவ்வாறு கஷ்ட்டப்படுகிறீர்கள். நீங்கள் இந்த முறையும் தேசிய பட்டியலில் வாருங்கள் என்றார். அவ்வாறு இல்லை! நீங்கள் இரு தடவைகள் தேசிய பட்டியலில் இடம் கொடுத்ததற்கு நன்றி என்று கூறினேன். இந்த முறை எனது மக்களால் தெரிவாகி உங்களிடம் வருகிறேன்.” என்றார்.
கருணா அம்மான் ராஜபக்ஷயாக்களின் ஆட்சிக் காலத்தில் தேசியப்பட்டியலில் ஊடாக இரு தடவைகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு, அந்நேரம் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.