பொய் குற்றம் சுமத்துபவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டாம் –  2011 உலகக் கோப்பை பற்றிய மாலிங்கவின் கருத்து 

“இலங்கை அணி மீது பெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் போட்டியைத் தாரைவார்த்தோம் என்கின்றனர். அவ்வாறு செய்ததையும், செய்த நபர்களையம் நீங்கள் அறிந்திருந்தால், அதைக் கண்டுபிடிக்க இவ்வளவு நாட்கள் சென்றிருக்காது. அது சாதாரண விடயம்! இவர்கள் தான் போட்டியைத் தாரைவார்த்தனர் என்று சொல்லி நிரூபிக்க வேண்டும் . அது முடியாவிட்டால், இது போன்ற பொய் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களை நிராகரிக்க மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். ”என்று முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்க கூறினார்.

2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை கிரிக்கட் அணி பணத்தைப் பெற்றுக்கொண்டு இலங்கைக்கு துரோகம் இழைத்துவிட்டதாக  முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்க இவ்வாறு  தெரிவித்த்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

” 2011 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் விளையாடிய வீரர் என்ற அடிப்படையில் இதைக்கூற முன்வந்தேன். அதேபோல், பந்து எறிதலில் முதலிரண்டு விக்கட்டுக்களையும் வீழ்த்திய விளையாட்டு வீரன் என்ற ரீதியில் நான் இங்கு விடயத்தை தெளிவுப்படுத்த முன்வந்துள்ளேன். இலங்கை கிரிக்கட் அணியின் மீது பெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் பணத்திற்காக போட்டியைத்  தாரைவார்த்தோம் என்று கூறுகின்றனர். அதுபற்றி எமக்கு தெரியும் என்கிறார்கள். நாடு என்ற வகையில் இச்சந்தர்ப்பத்தில் நாம் அபகீர்த்திக்கு உள்ளாகியுள்ளதாகவே நான் கருதுகிறேன். இவர்களது பொய்யை அறிந்துகொள்ள நீண்டகாலம் எடுக்காது என நான் நினைக்கிறேன். ஏனென்றால், அவ்வாறு காட்டிக்கொடுப்பைச் செய்ததையும், செய்தவர்களையும் நீங்கள் அறிந்திருந்தால் அதை வெளிப்படுத்த இவ்வளவு காலம் சென்றிருக்காது.

அதுபோல மற்றைய விடயம்தான், மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு இதுபோன்று இவர்கள் கூறுவார்களாயின், மக்களை தவறான பாதையில் வழிநடத்தாது, மக்களிடம் வெளிப்படையாகவே இவர்கள் தான் போட்டியைத் தாரைவார்த்தனர் என்று கூறி மக்களிடம் தெளிவுப்படுத்தக் கூடிய தகுதி இருக்க வேண்டும். அவ்வாறு செய்ய தகுதி இல்லையென்றால், இவர்கள் போன்ற பொய்யர்களை புறக்கணிக்க மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.” என்றார்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டிய இந்த 2011 சிறப்பு உலகக் கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியைப் பார்வையிட அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தார். அத்தோடு, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரும் பார்வையாளராக  சென்றிருந்தனர்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.