எங்களை தனிப்பட்ட முறையில் பழிவாங்கவே 19 வது திருத்தம் கொண்டு வரப்பட்டது

“தனிப்பட்ட முறையில் எங்களை பழிவாங்குவதற்காக முந்தைய அரசாங்கம் கொண்டு வந்த 19 வது திருத்தம் ஒரு அபத்தமான அரசியலமைப்பாக மாறியுள்ளது. அரசியலமைப்பை திருத்துவதற்கு, தேர்தலில் மேலான வெற்றியையையும், மூன்றில் இரண்டு பலத்தையும் பெற்றுத்தருவது மக்களது கையில் உள்ளது.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (21)  மதியம் வாரியப்பொலவில் இடம்பெற்ற  தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.

எதிர்வரும் பொது தேர்தலில் குருநாகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் டி.பி.ஹேரத்தின் இல்லத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று நீங்கள் என்னை விட அரசியலை நன்கு அறிவீர்கள். எல்லோரும் மிகவும் உணர்திறன் மற்றும் புரிதலோடு இருக்கிறீர்கள்.

2015 இல் நாங்கள் தோல்வியடைந்த பின்னர் நாட்டில் என்ன நடந்தது என்பது பற்றி உங்களுக்கு நன்றாகத்  தெரியும். அந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி முற்றிலும் வீழ்ச்சியடைந்தது. நாங்கள் ஏற்படுத்திய அபிவிருத்தியும், கட்டியெழுப்பிய பொருளாதாரமும் சரிந்து போனது. தற்போது சிதைந்த கடன் நிறைந்த பொருளாதாரமே எங்களுக்கு திருப்பித் தரப்பட்டுள்ளது.

அதனால் இந்த சூழ்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். கடந்த காலத்தில் பொருளாதாரம் சரிந்ததால் வேலையின்மை அதிகரித்தது. குறைந்த பட்சம் அவர்கள் யானை பிரச்சினையை கூட தீர்க்கவில்லை. அதற்கான தீர்வினை வழங்குவதற்குரிய வலிமை அவர்களிடம்  இருக்கவில்லை. இத்தகைய நிலைமையில்தான்  நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துகிறோம்.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரும், நான்கரை வருடங்கள் முடியும்வரை நாடாளுமன்றத்தை கலைக்க முடியவில்லை. நாங்கள் அரசாங்கமொன்றை அமைத்த போதிலும் முன்னோக்கி செல்ல வழி இருக்கவில்லை. நாங்கள் ஒரு நாணய மசோதாவை நிறைவேற்ற முயற்சித்த போதெல்லாம், எதிர்க்கட்சி அதைத் தோற்கடிக்க முயன்றதால் நாங்கள் அதிலிருந்து பின்வாங்கினோம்.

முந்தைய அரசாங்கத்தின் ஜனாதிபதி ஒரு கட்சியில் இருந்தபோது பிரதமர் மற்ற கட்சியில் இருந்ததை நாம் கண்டோம். ஜனாதிபதி சொல்வதை பிரதமர் செய்வதில்லை. பிரதமர் சொல்வதை ஜனாதிபதி செய்வதில்லை. எனவே, அந்த நிலைமையை மீண்டும் உருவாக்க இனி முடியாது.

 

 

Leave A Reply

Your email address will not be published.