கருணா அம்மான் சட்டத்தின்முன் பதில் கூறியாக வேண்டும்… தான் செய்த தவறுகளை இரசித்து பெருமைகொள்ளும் கருணா அம்மான் எமக்கு தேவையில்லை என்கிறார் அமைச்சர் விமல் வீரவன்ச

கருணா அம்மான் எந்தக் கட்சியில் இருக்கின்றார் என்பது முக்கியமில்லை, நாட்டிற்கு ஏற்பற்ற விடயங்களை கூறினால் அவர் சட்டத்தின் முன் பதில் கூறியாக வேண்டும். கருணா அம்மான் முன்வைத்துள்ள காரணிகள் மிகவும் கீழ்த்தரமானதென அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகின்றார். விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்ட காலங்களில் தான் செய்த தவறுகளை இரசித்து பெருமைகொள்ளும் கருணா அம்மான் எமக்கு தேவையில்லை எனவும் அவர் கூறுகின்றார்.

கருணா அம்மான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்வைத்த கருத்துக்களை குறித்து பல்வேறு விமர்சங்கள் அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் எழுந்துள்ள நிலையில் அமைச்சர் விமல் வீரவன்ச இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவற்றை கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதானது,

கருணா அம்மான் அல்லது வேறு எந்தவொரு பயங்கரவாத நபருக்கும் தமது பயங்கரவாத அமைப்பில் இருந்து விடுபட்டு தமது கொள்கையில் இருந்து மாறிக்கொள்ள உரிமையும் வாய்ப்புகளும் உள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ரில்வின் சில்வா கைதுசெய்யப்பட்டபோது அப்போது அவர் தோளில் ஆயுதம் இருந்தது, அதன் காரணமாக  அவர் இராணுவத்தில் கைதுசெய்யப்பட்டார். அதற்காக அவர் இப்போது அரசியலில் ஈடுபட முடியாது  என அர்த்தப்படாது. எனினும் அவர்கள் ஆயுத குழுக்களில் இருந்த காலங்களில் செய்ய தவறுகளை இப்போதும் இரசித்து அவற்றை வெளிப்படுத்த முயற்சித்தால் அந்த தவறை கருணா அம்மான் மட்டுமல்ல யார் செய்தாலும் அது தவறே. கருணா அம்மான் இப்போது செய்துள்ள செயற்பாடானது மிகவும் கீழ்மட்ட செயற்பாடாகும். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளை  பெற்றுக்கொள்ள  தான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில்  இராணுவத்தை  கொன்ற  எண்ணிக்கைகளை கூறி அதன் மூலமாக வாக்குகளை பெற்றுக்கொள்ள நினைப்பார் என்றால் அவ்வாறான கருணா அம்மானை இந்த நாட்டு மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். அவ்வாறான கருணா அம்மான் எமக்கு தேவையும் இல்லை.

விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பில் இருந்த காலத்தில் தான் செய்த கொலைகளை  எண்ணி கவலைப்படும் கருணா அம்மானே இன்று தேவைப்படுகின்றார். தமிழ் சிறுவர்களை கடத்தி சென்று அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றியது குறித்து கவலைப்படும் கருணா அம்மானே  இன்று நாட்டிற்கு தேவைப்படுகின்றார். சிங்கள மக்களை கொல்ல  அப்பாவி தமிழர்களை பயங்கரவாதியாக மாற்றியமை தவறென கூறும் கருணா அம்மானே தேவை. அதை தவர்ந்து தான் கொன்ற இராணுவ  வீரர்களை கூறி அதில் பெருமைகொள்ளும் நபர்களை நிராகரிக்க வேண்டும். இப்போது கருணா அம்மான் குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரிக்கப்பட்டு வருவதாக எமக்கு அறிந்துகொள்ள முடிகின்றது. எந்த அரசியல் அணியில் இருக்கின்றோம்  என்பது முக்கியமல்ல கருணா அம்மானாக இருந்தாலும் விமல் வீரவன்சவாக இருந்தாலும் நாட்டுக்கு ஒவ்வாத காரணிகளை கூறினால்  அவர்கள் சட்டத்தால் கையாளப்பட வேண்டும். சட்டத்தின் முன்  பதில் கூறியாக வேண்டும். கடந்த காலத்தில் எவ்வாறு சட்டம் கையாளப்பட்டது என்பது எமக்கு நன்றாக தெரியும். அலரிமாளிகையில் அதிகாரிகளை வரவழைத்து தீர்மானம் எடுத்த காலம் இன்று இல்லை. இன்று சட்டம் முறையாக கையாளப்படுகின்றது. இன்று அரசியல் கட்சி முக்கியமில்லை சட்டத்தை மீறிய அனைவருக்கும் முறையாக சட்டத்தில் தண்டனை வழங்கப்படும் என்றார்.

புகைப்படங்கள் – dailymirror
Leave A Reply

Your email address will not be published.