“19 “நீக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் பலமடைய வேண்டும் நிறைவேற்று அதிகாரம் ஒரு தரப்பிடமும் பாராளுமன்ற அதிகாரம்  இன்னொரு தரப்பிடமும் இருக்கக்கூடாது” என்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நிறைவேற்று அதிகாரத்தை  ஒரு தரப்பிற்கும் பாராளுமன்ற அதிகாரத்தை  இன்னொரு தரப்பிற்கும் வழங்குவதால் நாடே நாசமாகும். எனவே அதிகாரம் எப்போதும் ஒரு தரப்பிடம் இருக்க வேண்டும் என்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அரசியல் அமைப்பின் 19 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என இப்போது தான் உணர்வதாகவும் அவர் கூறுகின்றார்.

நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற தேவையை விடவும் 19 ஆம் திருத்தம் மீண்டும் மாற்றப்படுவது நல்லதென்றே நான் கருதுகின்றேன். 19 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டதனாலேயே  நாடு நாசமாக காரணமாக அமைந்துவிட்டது. 19 ஆம் திருத்தத்தில் ஒரு சில நல்ல விடயங்கள் இருந்ததை நான் மறுக்கவில்லை. ஆனால் நிறைவேற்று அதிகாரத்தை பலவீனப்படுத்தி, பிரதமருக்கு அதிகாரங்களை வழங்கி அத்துடன் சபாநாயகர் தனித்துவமாக சுகாதீன ஆணைக்குழுக்களுடன் செயற்பட ஆரம்பித்து இறுதியில் நாட்டில் எந்தவொரு தீர்மானத்தையும் உறுதியாக எடுக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டது.

ஆகவே  19 ஆம் திருத்தமே சகல குழப்பங்களுக்கும் காரணமாகும். நிறைவேற்று  அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நானே முன்னெடுத்தேன். நான் உணர்வுபூர்வமாக இதனை செய்தாலும் ஏனையவர்கள் அதனை முறையாக கையாளவில்லை. அவர்கள் தமக்கு ஏற்ற வகையில் செயற்பட ஆரம்பித்துவிட்டனர். ஆகவே அதன் தவறு இப்போதே வெளிப்படுகின்றது. எனவே  19 ஆம் திருத்தத்தை மீண்டும் நீக்கி நிறைவேற்று அதிகாரத்தை பலப்படுத்த வேண்டும் என்பதே இப்போதைய தேவையாகும். அதுமட்டும் அல்ல நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவது முக்கியமல்ல, அதனை கையாளும் தலைவர் யார், அவரது தகுதி என்ன என்பதே முக்கியமாகும். தற்போதைய ஜனாதிபதி சிறந்த ஆளுமை கொண்ட தலைவர் என நம்புகின்றேன்.

தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் ஆட்சியின் நேர்த்திக்கு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலில் போது அவர் கையாண்ட வேலைத்திட்டமே சிறந்த எடுத்துக்காட்டாகும். பாதுகாப்பு படைகளை பயன்படுத்தி சர்வதேசமே தடுமாறிக்கொண்டிருகின்ற விடயத்தை சரியாக கையாண்டு வெற்றி கண்டுள்ளார். சுகாதார அதிகாரிகள் இதில் மிகப்பெரிய சேவையினை செய்துள்ளனர். எனவே இதுவே நாட்டின் சரியான பயணத்திற்கு எடுத்துக்காட்டாகும். இந்த ஆட்சியில் எனது அனுபவத்தையும் பயன்படுத்தி சேவை செய்யவே நான் நினைகின்றேன். நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் புதிய வேலைத்திட்டங்கள் பலவற்றை உருவாக்கினேன். அதே வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் கொண்டுசெல்ல வேண்டும் என கருதுகின்றேன். இம்முறை பொதுத் தேர்தலில் நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன். ஆகவே  எனக்கு பொறுப்புக்களை கொடுத்தால் நிச்சயமாக அவற்றை நான் நிறைவேற்றிக் காட்டுவேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.