போர் குற்றச்சாட்டில் கருணா அம்மானை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் – சரத் பொன்சேகா கூறுகின்றார்
இராணு வீரர்களை கொன்றேன் என தானே ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ள காரணத்தினால் கருணா அம்மானை யுத்த குற்றச்சாட்டில் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகின்றார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் யுத்த காலகட்டத்தில் ஆயிரக் கணக்கான இராணுவ வீரர்களை தான் கொன்றதாக கடந்த வாரம் வெளிப்படுத்திய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது. இந் நிலையில் அப்போதைய இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இது குறித்த காரணிகளை வினவிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் இரண்டாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் இராணுவ வீரர்களை கருணா அம்மான் கொன்றதாக கூறுகின்றார். அவ்வாறு அவர் கூறும் அளவில் இராணுவத்தினரை அவர் கொள்ளவில்லை. ஆனால் பலவீனமான முகாம்களில் இருந்த இராணுவத்தை அவர் கொன்றது உண்மையே. அவை ஆயிரக் கணக்கான இராணுவமாக இருக்க வாய்ப்பில்லை. இப்போது அவர் பொய்யான காரணிகளை கூறி தன்னை ஒரு வீரராக்கப் பார்க்கின்றார். அவர் கூறிய கருத்து மிகவும் பாரதூரமான விடயம் என்பதை அரசாங்கம் இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் கருணா அம்மானை நியாயப்படுத்திய காரணிகளையே முன்வைத்து வருகின்றனர். ஜனாதிபதி மற்றும் பிரதமர் இந்த விடயம் குறித்து இதுவரை எந்த கருத்துக்களையும் கூறவில்லை என்பது வேடிக்கையான விடயமாகும். போர் வெற்றியை தமது தனிப்பட்ட வெற்றியாக கூறிக்கொள்ளும் ஜனாதிபதியும், பிரதமரும் இப்போது என்ன செய்யப்போகின்றனர் என்பதை நாமும் வேடிக்கை பார்த்துக்கொண்டே உள்ளோம்.
விடுதலைப்புலிகளில் ஆயுதம் ஏந்தி செயற்பட்ட மிகக் கொடூரமான நபர்கள் இன்று அரசாங்கத்துடன் இருந்து செயற்பட்டு வருகின்றனர். சர்வதேச அளவில் புலிகளை பலப்படுத்தி சர்வதேச விடுதலைப்புலிகள் அமைப்பினை உருவாக்கிய கே.பி அரசாங்கத்துடன் உள்ளார். விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாடுகளும் இன்றுவரை இயங்கி வருகின்றது. அவ்வாறு இருக்கையில் பயங்கரவாதிகள் அனைவரையும் தம்முடன் வைத்துக்கொண்டு எம்மை பிரிவினைவாதிகள் என இந்த அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகின்றது.
அதுமட்டும் அல்லாது, கருணா அம்மான் தற்போது கூறியுள்ள விடயம் மிகவும் பாரதூரமான விடயமாகும். இராணுவத்தினரை நான் கொண்டேன் என்ற வாக்குமூலத்தை அவரே தன் வார்த்தைகளினால் ஒப்புக்கொண்டு விட்டார். ஆகவே இது போர்க்குற்றமாகும், ஆகவே போர் குற்றச்சாட்டில் அவரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் என்பதையும் மறந்துவிடக்கூடாது என்றார்.