2011 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில் விசாரணை பிரிவிடம் வாக்குமூலம் வழங்கினார் மஹிந்தானந்த – எட்டு ஆவணங்களையும் விசாரணை பிரிவிடம் ஒப்படைத்துள்ளார்
கடந்த 2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ப தன்னிடமுள்ள ஆதாரங்களை விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகள் நேற்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள நாவலப்பிட்டிக்கு வந்திருந்தனர். இந்த விசாரணைகளின் போது அவர் தன்வசமுள்ள ஆவணங்கள் அனைத்தையும் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவிடம் முன்வைத்திருந்தார். இந்நிலையில் நாவலப்பிட்டியில் நேற்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களிடம் கூறுகையில்,
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டுயின் ஊழல் இடம்பெற்றதாக நான் கூறிய கருத்துக்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டுத்துறையுடன் தொடர்புபட்டவர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இது குறித்து நான் எந்த கருத்தையும் முன்வைக்க விரும்பவில்லை. மாறாக இது குறித்து என்னிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவிடம் நான் ஒப்படைத்துள்ளேன். ஆறு பக்கங்களை கொண்ட முறைப்பாடு ஒன்றினை வழங்கியுள்ளேன். அத்துடன் எட்டு ஆவணங்கள் என்னிடம் உள்ளது. இது குறித்த சகல காரணிகளையும் நான் முன்வைத்துள்ளேன்.
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி (ஐ.சி.சி ) சர்வதேச கிரிக்கெட் சபையினால் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (ஐ.சி.சி )யின் ஊழல் தடுப்பு பிரிவின் பிரதானி அலெக்ஸ் மார்ஷல் மூலமாக இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் அவர் கூறியுள்ள பிரதான குற்றச்சாட்டு என்னவென்றால் உலகில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் அதிக முறைப்பாடுகள், குற்றச்சாட்டுக்கள் உள்ள நாடு இலங்கை என்பதை கூறியுள்ளார். இது குறித்து விசாரணைகளை நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். இந்த கடிதம் எனது கரங்களுக்கு கிடைத்தது. அதனை தொடர்ந்தே நான் இது குறித்து ஆராய ஆரம்பித்தேன்.
2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை பார்வையிட சென்ற நபர்களில் நானும் ஒருவன். போட்டிகளை பார்த்துக்கொண்டு இருந்த வேளையில் ஆட்ட தன்மை குறித்து எனக்கும் சில சந்தேகங்கள் எழுந்தது. போட்டிகள் முடிந்தவுடன் நான் நாட்டுக்கு வந்ததும் என்னை சந்திக்க சில விளையாட்டு வீரர்கள், முன்னாள் வீரர்கள், ஆய்வாளர்கள் சந்தித்து குறித்த போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக என்பது குறித்து விசாரணை ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி (ஐ.சி.சி )க்கு நான் கடிதம் ஒன்றினை அனுப்பினேன். அது குறித்த பிரதியொன்றும் பொலிசாரிடம் நான் ஒப்படைத்துள்ளேன்.
என்னை பொறுத்தவரையில் 2011 உலகக்கிண்ண போட்டியில் ஆட்ட நிர்ணய சூதாட்டம் இடம்பெற்றுள்ளது. அது குறித்து 24 காரணிகளை நான் உள்ளடக்கிய முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளேன். இனிமேல் இது குறித்து நான் பேசப்போவதில்லை. விளையாட்டு வீரர்கள் இதில் சம்பந்தப்படவில்லை என தெளிவாக கூறியும் ஒரு சில வீரர்கள் இதற்கான பதில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இனியும் எவரும் வாய் திறக்க வேண்டாம் . மூன்று மாதங்களில் இது குறித்த விசாரணை ஒன்றினை நடத்தி உண்மைகளை வெளிப்படுத்த விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் கூறினார்.