‘மேட்ச் பிக்சிங்’ குற்றச்சாட்டு பற்றி மஹிந்தானந்தாவை விசாரிக்க ஐ.சி.சி தாயார்!
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐ.சி.சி) அண்மையில் பேசப்பட்ட ‘மேட்ச் பிக்சிங்’ தொடர்பான அறிக்கை குறித்து முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை விசாரிக்க தயாராகி வருகிறது.
“மேட்ச் பிக்சிங் பற்றி ஆராய்வதற்கு பொருத்தமான காரணம் அவரிடம் உள்ளனவா என்று பார்க்கவே மஹிந்தானந்தவுடன் பேச எதிர்பார்க்கிறோம்” என்று ஐ.சி.சி அதிகாரி ஒருவர் நியூஸ்வேர் செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.தோனியின் தலைமையில் ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை 2011 ஐ தன்வசப்படுத்திக்கொண்டு இந்தியா பிரபல்யமடைந்தது என்று இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கடந்த வாரம் தெரிவித்ததோடு, 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வேண்டுமென்றே தாரைவார்க்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
2011 இறுதிப் போட்டியில் இலங்கை செய்த நான்கு மாற்றங்கள் மற்றும் தேர்வுகள் குறித்து பல கேள்விகள் உள்ளன என்றும் அலுத்கமகே கூறினார்.
மஹிந்தானந்தவின் கூற்றை நிரூபிக்க தவறினால், பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதன் பேரில் அவர்மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியுமென சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். விளையாட்டு தடுப்புச் சட்டத்தின் 13வது பிரிவுப்படி அவர் செய்த குற்றத்திற்காக அபராதம் மற்றும் சிறை தண்டனையை விதிக்க முடியுமென்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அந்த சட்டத்தில் மேலும், “சட்டத்தின் 16 வது பிரிவின் கீழ், குறித்த நபர் அளித்த புகார் தவறானது என்று நம்புவதற்கு காரணம் இருந்தால் அல்லது அத்தகைய குற்றச்சாட்டு உண்மையல்ல என்றறிந்தால், நிதிபதியால் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால், அவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் அபராதம் செலுத்த வேண்டும் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும். ”