தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றம் இடம்பெறவேண்டுமாயின் வடக்கு கிழக்கு தமிழர்களின் பூரண அனுமதியை பெற்றாக வேண்டும் – முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழர்களின் பாரம்பரிய பூமியான வடக்கு கிழக்கில்  சிங்கள மக்கள் குடிகொள்ளவும், வணிகத்தலங்களை ஏற்படுத்தவும், இராணுவத்தினரைத் தொடர்ந்து வைத்திருக்கவும் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களிடம் அனுமதிபெற வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த நாட்டின் ஜனநாயகம் சிங்களவரால், சிங்களவருக்கு, சிங்களவர் நடத்தும் அரசாங்கம் என்று பொருள் பட்டுவிடும். தாயகம் எங்களுடையது எனக் கூறி யாரும் நாட்டை மீண்டும் துண்டு போடமுடியாது. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட கருத்துகளில் இனங்களின் அடிப்படையில் நாட்டினை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது என கூறியிருந்த கருத்துக்கு பதில் தெரிவிக்கும் விதத்தில் விக்கினேஸ்வரன் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாடு சகலருக்கும் உரியது என்று தானே தமிழர்கள் நாடு பூராகவும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்? பின் எதற்காக தெற்கு சிங்களவருக்கு உரியது “தமிழனே வெளியேறு” என்று கூறி 1958ம் ஆண்டின் கலவரத்தை உண்டு பண்ணினீர்கள்? நாடு முழுவதும் எல்லோர்க்கும் சொந்தமென்றால் எல்லோர்க்கும் சம உரிமை இந்த நாட்டில் இருப்பது உண்மையானால் எதற்காக எம்மவரை பல கலவரங்கள் மூலம் வடக்கு கிழக்கு தவிர்ந்த இடங்களில் இருந்து விரட்டி அடித்தீர்கள்? எதற்காக நடந்த கலவரங்களின் சூத்திரதாரிகள் யார் என்று இதுவரையில் அறிய முற்படவில்லை? எதற்காக குறித்த வன்செயல்களுக்காக எவருமே நீதிமன்றங்களில் நிறுத்தப்படவில்லை? ஏன் தொடர் அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது வன்முறையை ஏற்படுத்திவிட்டு அவர்களை வடக்கிற்கும் கிழக்கிற்கும் கப்பல்கள் மூலம் அனுப்பி வைத்தார்கள்? வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம் என்பதாலா?

முழு நாடும் எல்லோர்க்கும் சொந்தம் என்றால் ஏன் தெற்குப்புற குடியேற்றங்களில் தமிழர்களை குடியேற்றவில்லை? ஏன் வடக்கு கிழக்கிலும் சிங்களவர், பிற இடங்களிலும் சிங்களவர் என்று குடியிருத்தப்படுகின்றார்கள்? நீங்கள் நாடு முழுவதும் எல்லோர்க்கும் சொந்தம் என்று கூறுவது சிங்களவர் நாடுபூராகவும் பரந்து வாழ இடம் அளிக்க வேண்டும் என்பதால்த்தான் என்பது எங்களுக்கு நன்கு புரிகின்றது. தமிழர்கள் பெருவாரியாக வந்து ஹம்பந்தோட்டை மதமுலானவில் காணி வாங்க நீங்கள் அனுமதிப்பீர்களா? நாடு எல்லோர்க்கும் சொந்தம் என்று கூறும் போது அதெப்படி பௌத்தம் இங்கு வந்த காலத்திற்கு முன்னிருந்தே தமிழர்கள் வடக்கு கிழக்கிலும் பிற இடங்களிலும் குடி இருந்து வந்ததை மறந்தீர்கள்? இன்றும் வடக்கு கிழக்கு, தமிழ்ப் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள் அல்லவா? அன்று தமிழர்களை வடக்கு கிழக்கிற்கு விரட்டி அடிக்கும் போது தெற்கு உங்களுடையது. இன்று விரட்டி அடித்த தமிழர்கள் தங்கள் பிரதேசத்தில் வாழும் போது வடக்கு கிழக்கு உங்களுடையது. அப்படித்தானே?

வடக்கு, கிழக்கு மக்களின் மொழி வேறு, மதங்கள் வேறு, அந்த இடங்களின்  நிலை வேறு, தாவரப் பரவல் வேறு, மண்ணியல் வேறு, நீர் நிலைகளின் தன்மை வேறு, ஏன் வாழ்க்கை முறை கூட வேறு என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா? அதெப்படி நாங்கள் எங்கள் இடங்களில் இருந்து மேற்படி தனித்துவத்துடனும் தனி இயல்புகளுடனும் வாழ அனுமதியுங்கள் என்றும் நீங்கள் தொடர்ந்து உங்கள் இடங்களில் இருந்து வாழுங்கள் என்று நாங்கள் கூறும் போது நாங்கள் நாட்டைத் துண்டாட எத்தனிக்கின்றோம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்தீர்கள்?  பெரும்பான்மையினராகிய நீங்கள் நாம் வாழும் இடங்களை சிங்களமயமாக்கலாம் என்ற உங்கள் நப்பாசையா இவ்வாறான குழந்தைத்;தனமான அபிப்பிராயங்களை வெளியிட வைத்தது?

நாங்கள் எவரும் நாட்டைத் துண்டு போடக் கேட்கவில்லை. ஏற்கனவே துண்டு துண்டாக இருக்கும் இடங்களின் தன்மைக்கேற்ப, வரலாற்றுக்கு ஏற்ப, தனித்தன்மைக்கேற்ப, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுமிடங்களில் அவர்கள் தம்மைத்தாமே ஆளவே நாங்கள் கேட்கின்றோம். அது தவறா? ஒரே நாட்டினுள் நாம் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் நாங்கள் எம்மை நாமே ஆள உரித்தில்லை என்றால் உங்கள் சிங்கள இராணுவத்தைக் கொண்டு எம்மை என்றென்றும் அடிமைகளாக வாழவைக்க வழி தேடுகின்றீர்களா?

இவ்வாறான பிழையான கருத்துக்களை சிங்கள அரசியல்வாதிகள் கூறிவந்தமையால்தான் சிங்கள மக்கள் உண்மை அறியாது தமிழர்கள் மீது வன்மமும், குரோதமும், வெறுப்பும் கொண்டார்கள். தொடர்ந்து சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற இவ்வாறான சில்லறைக் கருத்துக்களைக் கூறி நாட்டின் சகோதர இனங்களிடையே மீண்டும் கலவரங்கள் வராமல் கௌரவ பிரதமர் பார்த்துக் கொள்ள வேண்டும். பிரதமரின் சகோதரர் ஒருவரின் வீடு பிரதமர் வீட்டிற்கு அருகாமையில் பாரம்பரிய தந்தை வழிக் காணியில் இருந்தால் “இது எனது தந்தை வழிக்காணி! என் சகோதரரின் படுக்கை அறைக்குள் எந்த நேரமும் நான் போகலாம்” என்று அவர் வாதிட முடியுமா? சகோதரர் அனுமதி அளித்தால்த்தான் அவர் அங்கு செல்லலாம். அதே போல் பாரம்பரியமாக தமிழ் மக்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கினுள், சிங்களவர்கள் எந்தக் காலத்திலும் பெரும்பான்மையாக வாழாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் சிங்கள மக்கள் குடிகொள்ளவும் வணிகத்தலங்களை ஏற்படுத்தவும் இராணுவத்தினரைத் தொடர்ந்து வைத்திருக்கவும் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களிடம் அனுமதிபெற வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த நாட்டின் ஜனநாயகம் சிங்களவரால், சிங்களவருக்கு, சிங்களவர் நடத்தும் அரசாங்கம் என்று பொருள் பட்டுவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.