வடக்கு கிழக்கின் வரலாற்றை மாற்றியமைக்கும் சூழ்ச்சியில் தென்னிலங்கை செயற்படுகின்றது

தமிழர் தாயகத்தை காப்பாற்றிக்கொள்ள தமிழ் மக்கள் ஓரணியாக  கைகோர்க்க வேண்டும் என்கிறார் சம்பந்தன்

தமிழரின் பூர்வீக பூமியான வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் வரலாற்றை மாற்றியமைக்கும் மறைமுகத் திட்டங்களைத் தென்னிலங்கை வகுத்து வருகின்றது. ஜனாதிபதி செயலணியின் பிரதான நோக்கமும் அதுவேயாகும். இவர்களின் செயற்பாடுகளை நாம் தடுத்த நிறுத்த வேண்டுமெனில் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக ஜனாதிபதி செயலணி உறுப்பினர்கள் மூலமாக முன்வைக்கப்பட்டு வருகின்ற காரணிகள், மற்றும் அரச தரப்பின் செயற்பாடுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும். இன்று புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை  பறிக்கவும், தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் விதத்திலும் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றது. அத்துடன் ஜனாதிபதி செயலணி தொடர்ச்சியாக தமிழர் பூர்வீக பூமியை இலக்கு வைத்து செயற்பட்டு வருகின்றது. ஆகவே தமிழ் மக்களின் ஒற்றுமை இம்முறை அவசியமாகின்றது.  தமிழரின் பூர்வீக பிரதேசமான வடக்கு, கிழக்கின் வரலாற்றை மாற்றியமைக்கும் மறைமுகத் திட்டங்களைத் தென்னிலங்கை வகுத்து வருகின்றது. இதை நாம் தடுத்த நிறுத்த வேண்டுமெனில் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும். இம்முறை பொதுத்தேர்தலில்  எமது ஒற்றுமையை நாம் நிரூபித்துக்காட்ட வேண்டியது கட்டாயமாகும்.
கடந்த காலத்தில் இருந்து  வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. பாராளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் தமிழ் மக்களின் உரிமைக்கான எமது குரல்கள் ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள், உரிமைகள், சுய அதிகாரங்களை பெற்றுக்கொள்ள நாம் சர்வதேச தரப்புடன் இணைந்து போராடி வருகின்றோம். அந்த போராட்டம் இடை நடுவே நின்றுவிடக்கூடாது. ஆகவே  இம்முறை பொதுத்தேர்தலிலும் எமது குரல்களுக்கு எமது மக்கள் மேலும் வலுச்சேர்க்க வேண்டும். கடந்த தடவையைவிட இம்முறை கூட்டமைப்பின் சார்பில் அதிக பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தமிழ் மக்கள் அனுப்பிவைக்க வேண்டும். தமிழ் மக்கள் மீது எமக்கு நம்பிக்கு உள்ளது, ஆகவே அதன் பிரகாரம் நாமும் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.