மூன்றில் இரண்டு அதிகாரத்தால் ஊசலாடும் – மலையக மக்களின் குடியிருப்பதற்கான உரிமை
தோட்டப்புறங்களில் காலங்காலமாக நிலவிவரும் காணியுரிமைப் போராட்டத்தோடு நெருங்கியத் தொடர்புகொண்டது தேயிலைத் தொழிற்சாலைகளின் மூடுவிழா!
காலனி ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த இலங்கையில் வெள்ளையர்களால் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பெருந்தோட்டங்களில் பெருத்த இலாபத்தைத் திரட்ட கொத்துக் கொத்தாக உழைப்பாளர்கள் தென்னிந்தியாவில் இருந்து மலைநாட்டுக்கு இடம்பெயர்க்கப்பட்டனர். ஆனால், ஆரம்பத்தில் சீனர்களைக் கொண்டுவரவே வெள்ளையர்கள் தீர்மானித்தனர். ஆனால், அன்று எழுந்த பல நடைமுறை சிக்கலால் சீனருக்கு பதில் தென்னிந்திய மக்கள் கொண்டுவரப்பட்டனர். அவ்வாறு கொண்டுவரப்பட்டவர்களில் தமிழர், மலையாளிகள், தெலுங்கர், முஸ்லிம்கள் உள்ளடங்குவர். இதில் பெரும்பான்மையோர் தென்னிந்தியத் தமிழர்கள் ஆவர்.
வெள்ளையர்களின் ஆட்சியிலாகட்டும் அல்லது 72 வருடகால இலங்கை அரசியல் ஆட்சிக் காலத்திலாகட்டும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவே இவர்கள் இன்னமும் சீவிக்கிறார்கள். இவர்களது வாழ்வு திட்டமிட்டு பெருந்தோட்டத்தோடு பிணைக்கப்பட்டது. இவர்களது வாழ்நாளின் உழைக்கும் காலம் முதலாளிகளிக்கு உபரியாகியது. தற்போது இந்த உபரியில் வீழ்ச்சி ஏற்படுவதாகக் கூறி பல பெருந்தோட்டங்களும், தேயிலைத் தொழிற்சாலைகளும் இழுத்து மூடப்பட்டுவருகின்றன.
அவ்வாறு அண்மையில் மூடப்பட்ட தொழிற்சாலைதான் ரொக்கத்தன்னை தேயிலைத் தொழிற்சாலை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரொக்கத்தன்னை தோட்டமக்கள் அணிதிரண்டு 13.07.2020 பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்னண் செல்வராஜ் வழிநடத்தினார்.
நாம் பெருந்தோட்டத் தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கானக் காரணத்தைத் தேடமுனைகையில் வரலாறு தம்மை ஆய்வு செய்யும்படி பின்னோக்கி அழைக்கிறது. அவ்வாறு ஆய்வு செய்வதனூடாக முன்னோக்கிச் செல்வது கட்டாயமானது.
‘சிலோன் டீ‘ உலகச் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இலங்கைத் தேயிலைச் சுவையில் பலரது நா அடிமைப்பட்டிருந்தது. இது நுகர்வோருக்கும் முதலாளிகளுக்கும் இடையில் பெரும் பிணைப்பாகியது. ஆனால், உற்பத்தியாளர்களான தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பு மிதமிஞ்சி சுரண்டப்பட்டதோடு இலாப வேட்டையில் இருந்து அவர்கள் ஒதுக்கிவைக்கப்பட்டனர். இன்றுவரையும் தொழிலாளர்களை தொடர்ந்தும் தொழிலாளர்களாக வைத்துக்கொள்வதற்கான குறைந்தபட்டச நாட்சம்பளமே இவர்களுக்கு வழங்கப்படுகிறது.
1992 ஆம் ஆண்டு செழிப்புற்றிருந்த பெருந்தோட்டங்களை மக்கள் மயப்படுத்தல் என்ற போர்வையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தனியார் கம்பனிகளிடம் தாரைவார்த்தது. இதில் பெருந் தோகையைப் பெற்றுக் கொண்ட ரணசிங்க பிரேமதாச அரசாங்கம் சில நிபந்தனைகளையும் முன்வைத்திருந்தது. அதில் ஒன்றுதான் வருடமொன்றிற்கு 3 சதவீத மீள் உற்பத்தி என்பதாகும். ஆனால், காலம் நகர நகர முதலாளிகள் பெருந்தோட்ட மண்ணையும், மக்களையும், நிபந்தனையையும் மறந்துபோயினர். இலாபமே அவர்களது குறிக்கோளக இருந்தது. இதனை அரசாங்கமும் கண்டுக்கொள்ளாமல் இருந்தது. இதனால், 1998 ஆம் ஆண்டாகும் போது, பெருந்தோட்டங்களில் மீளுற்பத்தி ஒருவருடத்திற்கு 0.3 சதவீதமாகக் குறைவடைந்தது. தேயிலைக் காடுகளின் வளம் குன்றியது. நிலத்தின் அமிலத்தன்மை அதிகரித்ததோடு இரசாயன கலவை மண்ணை மலடாக்க ஆரம்பித்தது. இதன் பின்னனியில்தான் பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படுகின்றன.
தேயிலைத் தொழிற்சாலை மூடுவிழா வரலாற்றில் இதுவரையில் 168 தொழிற்சாலைகள் மூடப்பட்டள்ளன. அதில் 36 க்கு மேற்பட்டவை ஊவா மாகாணத்தில் ஆகும். இலங்கையின் மத்தியநாட்டில் (மடுல்சீமையில் இருந்து உடபுஸ்ஸல்லாவ, பலாங்கொடை) தேயிலைத் தோட்டங்களை வளப்படுத்தாமையினால் தேயிலையின் தரம் குறைவடைவதும், வருமானம் போதாமையினால் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதும் இதற்கான காரணம் ஆகும்.
மர நடுகை குறைந்துபோனமை, மண்ணரிப்பு, அளவுக்கு மீறிய இரசாயன பசளையின் பயன்பாடு, மலைநாட்டின் நீர்வளம் அழிக்கப்படுதல் போன்ற பல காரணத்தால் மத்திய நாட்டு மண்ணின் போசாக்கு குறைந்துப் போயுள்ளது. ஆனால், இன்னமும் மேல் நாட்டு, கீழ் நாட்டு தேயிலைக்கு கிராக்கி உள்ளது. இதனால் மத்திய நாட்டில் பல தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படுவதோடு, தேயிலைக் கொழுந்து மேல் நாட்டு தொழிற்சாலைகளுக்கும், மத்திய நாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிராந்திய தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்படுகிறது. இதனால், தோட்டத் தொழிலாளர்கள் பலர் மத்திய நாட்டில் தனது தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர். குறிப்பாக அப்புத்தளை, பிட்ராத்மலை, பண்டாரவளை–பூனாகலை, மாக்கந்த போன்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இதுவரை உபரிக்காக காலங்காலமாக உறிஞ்சிய மக்களை முதலாளிகள் கைவிட்டுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு மகிந்தவின் ஆட்சியில் நட்டத்தில் இயங்கும் தொழிற்றுறைகளை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன்படியே பெல்வத்த சுகர் கோர்ப்பரேசனை அரசாங்கம் பொறுப்பேற்றது. அதேபோல், பெருந்தோட்டங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்கத் தீர்மானித்தது. ஆனால், இதற்கு முன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் தேவைப்பட்டது. இதன் காரணத்தினால் மலையக அரசியற் தலைமைகளை தன் கைக்குள் போட்டுக்கொள்வதற்காக அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டது.
ஆறுமுகம் தொண்டமான் கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சுப் பதவியையும், பழனி திகாம்பரம் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சையும், வேலுசாமி இராதாகிருஷ்ணன் தாவரவியல் பூங்காக்கள் பொழுதுபோக்கு அலுவல்கள் பிரதி அமைச்சையும் பெற்றுக் கொண்டனர்.
பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றல், சுற்றுலாத் துறையைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்தது. ஆனால், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வி கண்டவுடன் இது நின்றுபோனது. ஆனால், மீண்டும் 2020 இல் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகியதால் பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு அதிகாரத்தைப் பெற மும்முரமாக செயற்படுகின்றனர். இதற்கு மலையக அரசிற் தலைமைகளும் முன்நிற்கின்றன.
தனியாரிடம் இருந்த பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்பது நல்லது தானே என்று பலர் யோசிக்கலாம். தவறில்லை. ஆனால், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொருளாதாரத் திட்டம் இல்லாத அரசாங்கம் வளங்களை விற்பதையே தனது பொருளாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இதனால் தற்போது குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெருந்தோட்டக் காணிகளை நிரந்தரமாகவே தனியாருக்கு விற்க முடியும். இதுநாள்வரை காணியுரிமை இன்றி வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இதனால் குடியிருப்பதற்கான அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
இரத்னபுரி – பலாங்கொட – கெஹெவத்த, மாத்தறை தெனியாய தோட்டம், பதுளை – பண்டாரவளை அம்பதனவத்த போன்ற பெருந்தோட்டக் காணிகள் தனியாருக்கு விற்கப்பட்டப் பின்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதியை நாம் அறிவோம். ஆகவே, ஊசலாடிக் கொண்டிருக்கும் மூன்றில் இரண்டு அதிகாரத்தில் மலையக மக்களின் குடியிருப்பதற்கான உரிமையும் ஊசலாடுகிறது. அதேநேரம், சஜித் கோஸ்டியும் முன்றில் இரண்டின் பக்கத்திற்கு பாராமாக நிற்கிறார்கள்.
ஆகவே, நவீனமடையாத தொழிற்றுறையில் சிக்குண்டிருக்கும் தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் வஞ்சிக்காது அரசாங்கத்தின் தலையீட்டில் அத்தனைதோட்டத் தொழிலாளர்களுக்கும் பெருந்தோட்டக் காணிகளை உரித்துடன் பகிர்ந்தளிக்க வேண்டும்.
சதீஸ் செல்வராஜ்