கொவிட் -19 வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க   இராணுவமும் புலனாய்வுத்துறையுமே காரணம்

அரசியல் நோக்கங்களுக்காக இராணுவத்தை விமர்சிக்கின்றனர் என்கிறது அரசாங்கம்

கொவிட் -19 வைரச பரவலில் இருந்து இதுவரை காலமாக நாம் பாதுகாப்பாக இருக்கவும் தாக்கங்களை குறைத்துக்கொள்ளவும் எமது இராணுவமும், புலனாய்வுத்துறையும் முக்கிய காரணமாகும். அத்துடன்  வைத்திய அதிகாரிகளின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளும்  காரணமாகும். இராணுவத்தை விமர்சிப்பவர்கள் வெறும் அரசியல் நோக்கங்களுக்காக அதனை செய்வதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்த்தன மற்றும் அமைச்சர் ரொமேஷ் பதிரன ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர். இது குறித்து அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகையில்,

இராணுவத்தை பயன்படுத்தி கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டமை குறித்து விமர்சனங்களை முன்வைக்கும் நபர்கள் வெறும் அரசியல் நோக்கங்களுக்காக விமர்சித்து வருகின்றனர். ஆனால் இராணுவம் மற்றும் புலனாய்வு துறையினர் செயற்பட்டதன் காரணமாகவே எம்மால் நாட்டில் பாதிப்பை குறைக்க முடிந்தது. ஏனைய நாடுகளுடன் இலங்கையை ஒப்பிட்டுப்பார்த்தால் குறைந்த பாதிப்பு கொண்ட,   குறைந்த உயிர் சேதங்கள் கொண்ட நாடாக நாம் உள்ளோம். உலகில் வாழக்கூடிய நாடுகளில் முதன்மை நாடாக உள்ள டென்மார்க்கில் கூட இருநூற்றுக்கு அதிகமான இறப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் நாம் 11 இறப்புகளுடன் கட்டுபடுத்தி மக்களை பாதுகாத்துள்ளோம்.

இதன்போது ஒரு வைரஸ் தொற்றுநோயாளி கண்டறியப்பட்டால் அவர் சென்ற இடம் பழகிய நபர்கள் முதல்கொண்டு சகல விடயங்களையும் புலனாய்வு துறையினர் கண்டறிந்து வைரஸ் பரவாது தடுக்க பெரிதும் உதவியுள்ளனர். அவர்களால் மட்டுமே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். ஆகவே நாம் வைரஸ் தொற்றில் இருந்து விடுபடவும் எம்மை பாதுகாத்துக்கொள்ளவும் இராணுவமே காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார்.
இது குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரொமேஷ் பதிரன கூறுகையில், சகல தரப்பும் இணைந்து பெற்ற வெற்றியே இது, இதில் வைத்திய துறையினர், சுகாதார அதிகாரிகள் மிக முக்கிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களுக்கு எமது நன்றிகளையும், மரியாதையையும் வழங்க வேண்டியது கட்டாயமாகும். அது போன்று பாதுகாப்பு தரப்பினர் இந்த செயற்பாடுகளை இணைக்கும் மற்றும் துரிதப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர். அவர்களின் பங்களிப்பும் அத்தியாவசியமான ஒன்றாகும். அதனை மறுக்க முடியாது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.