தனியார் துறை ஊழியர்களுக்கு கொடுப்பனவில் 50 வீதம் அல்லது   14,500 ரூபாய்க்கு குறையாத சம்பளம் செப்டெம்பர் வரையில் நீடிக்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது

தனியார் துறை ஊழியர்களுக்கான அடிப்படை கொடுப்பனவில் ஐம்பது வீதம் அல்லது 14 ஆயிரத்து 500 ரூபாய்க்கு குறையாத சம்பளத்தை  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகளை அடுத்து தனியார் துரையின் ஊழியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இதன்போது தனியார் நிறுவன அதிகாரிகள், தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம் ஆகிய சகல தரப்புடனும் கலந்துரையாடி சில தீர்மானங்களை அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்னெடுத்துள்ளார். அதற்கமைய அதற்கமைய அடிப்படை கொடுப்பனவில் ஐம்பது வீதம் அல்லது 14 ஆயிரத்து 500 ரூபாய்க்கு குறையாத சம்பளத்தை ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்படுவது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் என நீடிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் அனைத்துமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, நாட்டில் வருமானதை பெற்றுக்கொள்ளும் துறைகள் பாரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். இலங்கையில் அவ்வாறான நிலைமையொன்று இல்லை, ஆனால் நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடன் பெற்று ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. எமது நாட்டில் அதிஷ்டம் என்னவென்றால் பணிநீக்கம் செய்யப்படாது நிறுவனங்கள் ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கி வருகின்றனர். அவ்வாறான நிலையில் அனைவருமே இதில் பாதிக்கப்பட்ட தரப்பாக உள்ள காரணத்தினால் தான் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் அடிப்படை கொடுப்பனவில் ஐம்பது வீதம் அல்லது 14 ஆயிரத்து 500 ரூபாய்க்கு குறையாத சம்பளத்தை ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.