அங்குலான போலீசார் மீது கல் வீசிய 10 பேர் கைது! 8 போலீஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர்!!
அங்குலான பொலிஸாரினால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலைமையில் சிரேஷ்ட போலீஸ் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மக்கள் அமைதி அடைந்தனர்.
ஆனாலும், தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையெனக்கூறி அங்குலான போலீஸ் நிலையத்திற்கு முன் நேற்றைய தினம் (16) போராட்டம் நடத்தியவர்கள் போலீஸ் நிலையத்தின் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது 8 போலீஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்டவர்களில் 07 பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குலான மீனவர்களிடம் போலீசார் அடாவடித்தனமாக உங்களிடம் உள்ள போதைப்பொருட்களைத் தாருங்கள் என்று கேட்டு விசாரணை நடத்தியுள்ளனர். தங்களிடம் அப்படியெதுவும் இல்லையென மீனவர்கள் கூற, தர்க்கம் வளரவே போலீஸ் அதிகாரியால் மீனவ இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்தே அங்குலான மக்கள் போலீஸ் நிலையத்திற்கும் போலீசாருக்கும் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.