கொரோனா வைரஸ் எங்கே, எப்படி தோன்றியது?

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக்குழு கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தன்னுடைய நாட்டின் அரசியல் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இயலாமல், எதிர்வரும் தேர்தலை மனதில் கொண்டு, கொரோனா நோய் தொற்று தொடங்கியது முதல் சித்த பிரமை பிடித்தவர் போல் பேசி வருவதை உலகமே கூர்ந்து பார்த்து வருகிறது. 

முதலில் “சீன வைரஸ்” என்றும், அமெரிக்காவை இது ஒன்றும் செய்யாது என்றும் சவடாலாக பேசினார். ஊரடங்கு, சமூக விலகல், தனிநபர் விலகல், முகக்கவசம் அணிதல் குறித்தெல்லாம் விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்த கருத்துக்களுக்கெல்லாம் முரணாக பேசி வந்தார். அமெரிக்க மாகாண ஆளுநர்களுடன் கடுமையாக மோதினார். செய்தியாளர்களை சாடினார்.

மற்ற நாடுகளுக்குச் செல்லும் மருத்துவ உபகர ணங்கள் மற்றும் மருந்துகளை வழிப்பறி செய்தார். ஹைட்ரோகுளோரோ குயின் மாத்திரையை உடன் அனுப்பாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டு மென இந்தியாவை மிரட்டினார். கிருமி நாசினியை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தலாம் என்றார். உலக சுகாதார நிறுவனத்தை கடுமையாக தாக்கி அதற்கான நிதியை நிறுத்திட முனைந்தார். அறிவியல் தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கு கடும் நெருக்கடிகளை தந்தார். ஜனவரி மூன்றாவது வாரத்திலேயே அமெரிக்காவில் முதல் நோயாளி கண்டறியப்பட்டிருந்தாலும் மார்ச் இறுதிவரை சோதனக் கருவிகளைத் தருவித்திடாமல் காலம் தாழ்த்தி பல லட்சம் உயிர்களோடு விளையாடினார். தொடர்ந்து சீனாவின் மீது குற்றம் சுமத்தி வந்த நிலையில் தற்போது உலக சுகாதார நிறுவனம் வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வினை மேற்கொள்ள பன்னாட்டு அறிவியல் அறி ஞர்கள் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது. சீன அரசு முழுமையான ஒத்துழைப்பை அளித்து வருகிறது.

விலங்குகளில் இருந்து தோன்றும் வைரஸ்களின் மூலமாக மனிதர்களுக்கு நோய்தொற்று ஏற்படக்கூடிய அபாயங்கள் இருக்கிறதா என்பது குறித்த விவாதம் புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே பேசப்பட்டு வருகிறது. அது பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்தும் உள்ளது. சார்ஸ் கோவ்-2 வைரஸ் என அழைக்கப்படும் இது சீனாவின் வுஹானில் வனவிலங்கு வர்த்தகச் சந்தையில் தோன்றியிருக்கலாம் என்று முதலில் பேசப்பட்டது. இருப்பினும் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. சார்ஸ் கோவ்-2 வைரஸுக்கு நெருக்கமான மற்றும் சமமான வைரஸ்களான சாட்ஸ் போன்றவை வௌவால்களில் காணப்படுவதால் இந்த வைரஸும் அவைகளிடம் இருந்து தோன்றியிருக்கலாம் என்கிற கருத்தும் நிலவியது. ஆனால் அதுவும் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.

பொதுவாக புதிய வைரஸ்கள் சுற்றுச்சூழலில் இருந்து எவ்வாறு தோன்றுகின்றன? அவை எப்படி மனிதர்களுக்கு தொற்றுகின்றன? என்பவை குறித்து நீண்ட காலமாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வைரஸும் அது தோன்றிய காலம் மற்றும் விதம் சார்ந்து தனித்துவமானதாக அமைந்து இருக்கின்றன. அதே சமயத்தில் இப்படித் தோன்றுகின்ற வைரஸ்களிடம் சில பொதுப் பண்புகளும் தென்படுகின்றன.

டெட் எண்ட் ஹோஸ்ட்கள்

பொதுவாக வைரஸ்கள் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு தாவுவது அரிது. ஒரு வைரஸ் ஒரு புதிய வகை ஏற்பிக்கு வெற்றிகரமாக செல்ல வேண்டுமானால் அந்த வைரஸில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாக வேண்டும். வைரஸானது, புதிதாகதாவும் உயிரினத்தின் உட்புறத்தில் சென்று தன்னை நகலெடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வைரஸ்கள் தான் ஒரு குறிப்பிட்ட வகை செல்களைத் தாக்க முடியும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை (உ.ம். நுரையீரல், சிறுநீரகம்). ஒரு வைரஸானது ஒரு குறிப்பிட்ட செல்லினைத் தாக்கும் போது அந்த செல்லின் பரப்பிலுள்ள ஏற்பி மூலக்கூருடன் இணைகிறதெனில் அது மற்ற வகை செல்களில் இணைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதோடு, வேறு ஏதேனும் சில காரணத்தால் கூட அந்தச் செல்லின் உள்ளே அது நகலெடுக்க முடியாமலும் போகலாம். எனவே ஒவ்வொரு வைரஸும் அதற்கென பிரத்தியேக ஏற்பியை கொண்டிருக்கும்.

ஒரு வைரஸ் புதிய ஏற்பியை தொற்றியவுடன், அது தன்னைத் தானே நகலெடுத்துக் கொள்வதற்கும் மற்ற  செல்களைத் தாக்குவதற்கும், பரப்புவதற்கும் போதுமான தாக இருக்கவேண்டும். அப்படி நடப்பது மிகவும் அரிதானதே. இவ்வாறு தாவும் வைரஸ்கள் செல்லின் உள்ளே நுழைந்து தனது பணிகளை செய்ய முடியாததாலும் மற்ற செல்களுக்குள்ளும் நுழைய முடியாததாலும் அங்கேயே இறந்து விடக்கூடும். அதைத்தான் நாம் “டெட்-எண்ட் ஹோஸ்ட்கள்” என்று அழைக்கின்றோம். உதாரணமாக, இன்ஃப்ளூயென்ஸா வைரஸ் எச்5என்1(H5N1), அல்லது “பறவைக் காய்ச்சல்” பறவைகளில் தோன்றி மனிதர்களை தொற்றலாம். ஆனால் மனிதர்களுக்கி டையே அவை தொற்றவோ, பரவவோ வாய்ப்பில்லை. எப்போதாவது இந்தத் தடையை சமாளித்து உருவாகும் வைரஸ் புதிய, புதிய ஏற்பிகளுக்குத் தாவி, புதிய பரவல் தொடரை உருவாக்கி புதிய பரிமாற்ற சங்கிலியை நிறுவுகிறது. இப்படி இனங்களுக்கிடையில் தாவி தொற்றினை ஏற்படுத்தும் மாற்றங்களை வைரஸ் எப்படி பெற்றிருக்கிறது என்பது குறித்து கடந்த 20 ஆண்டுகளாக  ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். இந்த வைரஸில் எட்டு மரபணு பகுதிகள் உள்ளன. இரண்டு வெவ்வேறு வைரஸ்கள் ஒரே செல்லில் நுழைகிற போது, இரண்டிலிருந்தும் மரபணு பகுதிகள் ஒன்றோடொன்று கலந்து ஒரு புதிய வைரஸ் இனத்தை உருவாக்கலாம். அப்போது அந்த புதிய வைரஸின் மேற்பரப்பில் உள்ள புரத வடிவம் தற்போது புழக்கத்தில் இருக்கும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் அமைப்பிலிருந்து மாறுபட்டதாக இருக்கலாம். அந்த புதிய வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி யாரிடமும் இருக்க வாய்ப்பில்லை. அதனால் அந்த புதிய வைரஸ் எளிதில் அனைவரையும் தொற்றி நோயை உண்டாக்கி விடுகிறது.

இன்ஃப்ளூயன்ஸா வைரஸில் இந்த மாற்றம்” ஆன்டி ஜெனி க்ஷிப்ட்” என்று அழைக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு தோன்றிய எச்1என்1 இன்ஃப்ளூயன்ஸா தொற்று நோயில் இது தான் நிகழ்ந்தது. பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் ஒரே மாதிரி இருப்பதால், பன்றிகளில் தோன்றிய வைரஸ் மாற்றத்திற்கு உள்ளாகி மனிதர்களிடம் தொற்றி பெரும் தொற்று நோயாக பரவி யது. கொரோனா வைரஸ்களிலும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதற்கான மரபணு ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. தற்போதைய சார்ஸ் – கோவ் -2 (SARS-CoV-2) தோற்றம் மற்றும் பரவல் குறித்த பல தகவல்களை நமது ஆய்வாளர்கள் வெளிக் கொணர்ந்து வருகிறார்கள்.

அதேபோல வைரஸின் மரபணுக்குள்ளும் சடுதி மாற்றம் நிகழ்ந்து மரபணுமாற்றங்கள் ஏற்பட்டு புதிய வைரஸ்கள் உருவாகலாம். இது வைரஸ்களிடம் காணப் படும் பொதுவான பண்பாகும். டி.என்.ஏ மரபணுவுக்குப் பதிலாக, அவற்றின் மரபணுத் தகவல்களை அதேபோன்ற ஆர்.என்.ஏ மூலக்கூறுகளில் சேமித்திடும் வாய்ப்பும் உள்ளது. ஏனென்றால், இந்த வைரஸ்கள் (கொரோனா வைரஸ்கள் தவிர) தன்னை நகலெடுக்கும் போது நிகழும் தவறுகளைக் களைந்திடும் நுட்பம் அவற்றிடம் இல்லை. இப்படி நகலெடுக்கும் போது உருவாகும் பிறழ்வுகள் பல வைரஸ்களுக்கு சேதத்தை விளைவிக்கும். அதே நேரத்தில் சில வைரஸ்கள் புதிய ஏற்பியை வலுவாக தாக்கவும், வேகமாகத் தொற்றவும் கூட வாய்ப்பிருக்கிறது.

புதிய கொரோனா வைரஸ்கள்

சார்ஸ் – கோவி -2 விஷயத்தில் என்ன நடந்தது? மரபணு வின் சமீபத்திய ஆய்வுகள் இந்த வைரஸ் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக இன்று போலவே இதனை ஒத்த வடிவத்தில் வலம் வருவதாகத் தெரிவிக்கின்றன. நாம்காணக் கூடிய வைரஸிற்கு நெருங்கிய மரபுப் பண்புகளை கொண்ட வைரஸ்களை வெளவால்களில் காண முடிகிறது. வெள வால்களில் இது வரை கண்டறியப்பட்டுள்ள வைரஸ்க ளுக்கும்,  சார்ஸ் – கோவி -2 வைரஸுக்கும் ஏறக்குறைய 40-70 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுவான மூதாதையர் இருந்திருக்கிறது.

இந்த வைரஸ்கள் ஒரு பொதுவான மூதாதையரைப் பெற்றிருந்தாலும், கடந்த 40 ஆண்டு கால பரிணாம வளர்ச்சியில் அவை வெகுவாகப் பிரித்துள்ளன. அதாவது  சார்ஸ் -கோவி-2 வெளவால்களில் இருந்து மனிதர்க ளிடம் தாவியிருக்கலாம் அல்லது அது மாங்கூஸ் போன்ற வேறொரு இடைநிலை உயிரினத்தின் வழியாகக் கூட வந்திருக்கலாம். சார்ஸ் – கோவி -2க்கு நெருங்கிய தொடர்பு டைய வைரஸ்கள் மாங்கூஸ்களில் இருப்பதை ஹாங்காங் ஆய்வாளர்களும், வுகான் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய ஆய்வுக்குழுவினரும் சமீபத்தில் கண்டறிந்துள்ள னர். இருப்பினும் மரபியல் மாறுபாட்டுஅடிப்படையில் இந்தசார்ஸ் – கோவி -2 வைரஸ் தோன்றிய சரியான வழிமுறைகளை கண்டறிவதில் சீன வைராலஜி நிபுணர் ஷிஷெங்லி தலைமையிலான 30 நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுச்சூழலில் மரபணு ரீதியாகவேறுபட்ட சார்ஸ் – கோவி -2 தோன்றியுள்ளதை ஆதாரப்பூர்வமாக கண்டறியும் வரை இது நமக்கு மர்மமான ஒன்றாகவே இருக்கும்.

இந்த வைரஸ் எளிதில் மனித செல்களில் தொற்றும் அளவிற்கான மாற்றம் செல்லினுள் நிகழ்ந்திட எது காரண மாக இருக்கிறது என்பதும் கண்டறியப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இருப்பினும், கடந்த 100 ஆண்டுகளில் கொரோனா வைரஸ் குடும்பத்திலிருந்து தோன்றிய 500 க்கும் மேற்பட்ட வைரஸ்களையும், கடந்த 20 ஆண்டுக ளில் தோன்றியுள்ள சார்ஸ் (SARS), மெர்ஸ் (MERS) மற்றும் கோவிட் -19 (COVID-19)போன்ற ஆறு பெரிய நோய் தோற்றுக்களையும் பார்க்கிறபோது இந்த கொரோனா வைரஸ் தொற்றானது மனிதர்களுக்கு தாவி நோய்த் தொற்றை உருவாக்கும் கடைசி ஒன்றாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

தொற்றுகள் தோன்றும்  வாய்ப்புகள் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் பல விலங்குகளிடமும் தோன்றி பரவுகிறது. வன விலங்கு வர்த்தகம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, உணவு உள்ளிட்ட பயன்பாடுகள், காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலப் பரப்பு அதிகரிக்கப்படுவது, மனிதர்களின் அதீத பய ணங்கள் முதலியவை விலங்குகளுக்கும் மனிதர்க ளுக்குமான தொடர்புகளையும் நெருக்கத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் விலங்குகளிலி ருந்து​​வைரஸ்கள் மனிதர்களிடம் எளிதில் தாவுவதற்கான வய்ப்புக்களும் அதிகமாகி உள்ளது. மனிதர்கள் புதிய புதிய பகுதிகளை கண்டறிந்து உலகம் முழுவதும் வெகு வாக பரவுகிறபோது புதிய வைரஸ்களுடன் தொடர்பு ஏற்படு வது இயல்பான ஒன்றாக உள்ளது. இயற்கையின் மீதான மனிதச் செயல்பாடுகளும், வனவிலங்குகளின் வர்த்த கத்தில் மனிதர்களின் ஈடுபாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கொரோனா போன்ற நோய் தொற்றுகள் தோன்று வதற்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றன.

மேலும், உலகம் முழுவதும் மனித சமூகத்திடம் ஏற்பட்டி ருக்கும் பரந்துபட்ட தொடர்புகள், கொரோனா போன்ற புதிய கொள்ளை நோய்கள் உலகம் முழுவதும் எளிதில், ஓரிரு நாட்களிலேயே பரவுவதற்கான வாய்ப்பாக அமைந்தி ருக்கிறது. இயற்கைச்சூழலை இடைவிடாது சீர்குலைப்ப தன் மூலம் மனிதர்களுக்கு கொடிய வைரஸ்கள் தாவும்  வாய்ப்பை தனியார்மய, தாராளமய உலகமய கொள்கை களே ஊக்குவித்து அதிகரித்து வருவதால், இத்தகைய விபரீதமான நிகழ்வுகள் ஏற்படுவதற்கு முழுப் பொறுப்புக்க ளையும் அறிவியலுக்கு சவால்விடும் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளே ஏற்க வேண்டும்.

இதன் விளைவு அமெரிக்கா மட்டுமல்லாது பொருளா தாரத்தில் வளர வேண்டிய நிலையில் உள்ள நாடுகளான இந்தியா, நைஜீரியா, பிரேசில் போன்ற நாடுகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலையில் இருப்பது நமக்கு கவலை அளிப்பதாக உள்ளது.

அமெரிக்க வைரஸ்  நிபுணர் பாராட்டு

நோயை உண்டாக்கக்கூடிய வைரஸ்கள் எவை எவை என கண்டறிந்து பட்டியலிட்டு விட்டால், பரிசோத னையாளர்களும், சுகாதார ஊழியர்களும் நோய்தொற்று ஏற்பட்டுள்ளவர்களை கண்டறிவது எளிதாகி விடும். கால்நடைகளில் இருந்து ரத்தம் மற்றும் ஸ்வாப் மாதிரிக ளையும், பண்ணை மற்றும் வர்த்தகத்திற்கு உட்படுத்தப் படும் வனவிலங்குகள், வௌவால்களின் வசிப்பிடத்திற்கு அருகில் வசித்து வரும், நோய் தொற்றுக்கு எளிதில் இலக்காகக் கூடிய மனிதர்கள், விவசாயிகள், சுரங்கப் பணியாளர்கள், கிராமப்புறத்தினர், மற்றும் வனவிலங்கு களை வேட்டையாடியும், பயன்படுத்தியும் வருபவர்கள் முதலியோரை பரிசோதித்து கொரோனா வைரஸ் தொற்றுள்ளதா என கண்டறிய வேண்டும்.

கால்நடைகள், வன விலங்குகள் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்தை ஒருங்கிணைத்து “அனைவருக்கும் ஆரோக்கியம்” என்கிற அணுகுமுறையோடு செயல்பட வேண்டும். இதன் மூலம் நோய் தொற்று பெரிய அளவில் பரவுவது தடுக்கப்படும். இந்தத் திட்டம் பெருந் தொற்று ஏற்படுத்தும் இழப்புக்களிலிருந்து நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் விரயத்தை தடுத்துக் காத்திடும்.

“வௌவால் மனுஷி” என்றழைக்கப்படும் வைரஸ் நிபுணர்ஷீ ஷெங்லி உள்ளிட்ட ஆய்வாளர்கள் ஆசியா, மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட  30க்கும் மேற்பட்ட  நாடுகளில் கொரோனா வைரஸின் தோற்றத்தை கண்டறிவ தில் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர். தற்போது தோன்றியுள்ள வைரஸ் மட்டுமல்லாது எதிர்காலத்தில் இதையும் விட கொடிய வைரஸ்கள் தோன்றினால் அவற்றையும் எதிர்கொள்ளத் தக்க வழிமுறைகளை கண்டறிவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போன்றவர்கள் இத்தகைய ஆய்வுக் கூடங்களிலிருந்து வைரஸ்கள் கசிந்திருக்கலாம் என்று கூறியிருப்பது ஆராய்ச்சியாளர்களின் முயற்சியை முடமாக்குவதாக உள்ளது. புதிதாக தோன்றியுள்ள வைரஸின் மரபணு வரிசையோடு ஒத்திருக்கக் கூடிய வைரஸ் இதுவரை கண்டறியப்பட வில்லை என்பதை அனைத்து நாடுகளின் விஞ்ஞானிகளும் உறுதிப்படுத்தி யுள்ளனர். உலகத் தரம் வாய்ந்த ஆய்வகம் என வுகான் ஆய்வகத்தை அமெரிக்காவின் நியூயார்க் சூழலியல் கூட்டமைப்பின் தலைவரும் வைராலஜி நிபுணருமான பீட்டர் டஸாக் பாரட்டியுள்ளனர்.

16.70 லட்சம் வைரஸ் வகைகள்

”கடந்த  20 ஆண்டுகளைத் திரும்பிப் பார்த்தால் சார்ஸ் வைரஸிலிருந்து எல்லா வைரஸ் அச்சுறுத்தல்களின் போதும் நம் அணுகுமுறையானது காத்திருந்து அதன்பின் எதிர்வினை ஆற்றுவது என்பதாகத்தான் இருக்கிறது. அதுதான் உலகலாவிய பேரிடருக்கான சூத்திரம். மனிதர்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் தொடர்பு ஏற்படுவது அதிகரித்துக் கொண்டே வருவது மேலும் பல வைரஸ் தொற்றுக்களுக்குக் காரணமாக அமைந்து விடும். 16.70 லட்சம் வைரஸ் வகைகள் இது வரை கண்ட றியப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட பாதியளவு வைரஸ் வகைகளால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, கொரோனாவைத் தொடர்ந்து நாம் பல வைரஸ்களின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கிறது. காடுகள் அழிக்கப்படுவதால் காட்டு விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு ஏற்படுவது அதிகரிக்கிறது. இதனால் புதுப்புது வைரஸ்கள் மனிதர்களுக்குத் தொற்றி விடுகின்றன” என்கிறார் பிரபல வைரஸ் ஆய்வாளர் டெனிஸ் கேரல்.

பல்வேறு நாடுகளின் குகைகளில் வாழக்கூடிய வௌவால்களில்  5000க்கும் மேற்பட்ட வைரஸ்கள் வகை கள் உள்ளன. அவைகளை கண்டறிவது விஞ்ஞானிகள் முன்னுள்ள அவசர கடமையாக உள்ளது. அந்த வௌவால்கள் கோவிட் 19 போல நம்மைத் தொற்றி மிகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு முன் அவைகளை நாம் அடைந்து அவற்றை கட்டுப்படுத்தி மனிதகுலத்தை பேராபத்துக்களில் இருந்து பாதுகாப்போம்.

கட்டுரையாளர்:  மாநில துணைத் தலைவர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

நன்றி : தீக்கதிர் 

Leave A Reply

Your email address will not be published.