இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும் – பேராயர் மெல்கம் ரஞ்சித் வலியுறுத்தல் 

இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் தடைசெய்யவேண்டும். இவர்களால் நாடு பிளவடைய போவதை விடுத்து வேறு எந்த நன்மையையும் ஏற்படப்போவதில்லை என பேராயர் மெல்கம் ரஞ்சித் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

தேவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“அன்று பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், துன்பங்களுக்கு உள்ளான எம்மக்களை அதிலிருந்து மீட்க, அனைத்து மக்களும் இனம் கடந்து, மொழி கடந்து ஒன்றிணைந்து போராடினார்கள்.

ஆனால், இன்று நாம் எந்த நிலைமையில் உள்ளோம்? யாருடைய மொழி உலகிலேயே பழைய மொழி என விவாதித்துக்கொண்டு, காலத்தையும் நேரத்தையும் வீணாக்கிக்கொண்டு வருகிறோம்.

நான் அரசாங்கத்திடம் ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்.

இவர்களால், நாடு பிளவடைவதைவிடுத்து வேறு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. நாம் இன்னும் கண்ணைத் திறந்து, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இதுவரை ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்ற உண்மை தெரியவில்லை. இன்று ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இன்று நடக்கும் விசாரணைகளின் ஊடாக தமது கடமையை நிறைவேற்றத் தவறிய அரசியல்வாதி மற்றும் அதிகாரி யார் என்பதை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இருந்தாலும் இந்த குண்டுத் தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள், இதற்கு பணம் வழங்கியவர்கள், கட்டளையிட்டவர்கள் யார் என்பதை இன்னமும் இவர்கள் கண்டறியவில்லை.

ஜனாதிபதி ஆணைக்குழு இவர்கள் தொடர்பாக விரைவில் கண்டறிய வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். அரசாங்கம், எமக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.