19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – செப்டெம்பரில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரவும் தீர்மானம் 

19 ஆம் திருத்தத்தை இல்லாதொழித்து 20 ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவரும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இறுதிக்குள் 20 ஆம் திருத்த சட்டத்தை நிறைவேற்றவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய செப்டெம்பர், இரண்டாம் பாராளுமன்ற அமர்வு வாரத்தில்  20 ஆம் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில்  சமர்பிக்கப்படும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலவீனப்படுத்தியுள்ள 19 ஆம் திருத்த சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என அரசாங்கம் கூறிவருகின்ற நிலையில் கடந்த வாரங்களில் கூடிய அமைச்சரவை கூட்டங்களிலும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதி அமைச்சர் அலி சப்ரி இது குறித்த சட்டமூலம் ஒன்றினை இந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளார். அதனைவிடவும்  19 ஆம் திருட்ட சட்டத்தில் உள்ள நல்ல சரத்துக்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவும் தமது பரிந்துரைகளை இந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்க தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில கூறுகையில், 19 ஆம் திருத்த சட்டம் நீக்கப்படுவது உறுதியான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் 19 ஆம் திருத்த சட்டத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது. இந்த வாரமும் நாம் இது குறித்து ஆராய்ந்து அமைச்சரவையில் ஒரு வரைபினை முன்வைப்போம். இதில் பரிந்துரைகள், நீக்கப்பட வேண்டிய காரணிகள், அவசியமான முன் நகர்வுகள் என்பன உள்வாங்கப்படும் என்றார்.
இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் அரசாங்கம் கொண்டுவரவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் 19 ஆம் திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி நிறைவேற்று ஜனாதிபதியின் கீழ் புதிய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை கொண்டவர அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக கூறியுள்ளது. அஸ்கிரிய, மல்வத்து மற்றும் ராமாஞ்ச பிரிவினரின் பெளத்த தேரர்களை சந்தித்த  நீதி அமைச்சர் அலி  சப்ரி இது குறித்து தேரர்கள்  முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் கூறியிருந்ததானது, 19 ஆம் திருத்த சட்டம் அவசியமற்ற ஒன்றாகவே கருதப்படுகின்றது. நாடு பலவீனமடையவும் இந்த திருத்தமே காரணமாக உள்ளது. ஆகவே எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் 19 ஆம் திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இறுதிக்குள் 19 ஆம் திருத்த சட்டத்தை நீக்கி 20 ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ள நிலையில் செப்டெம்பர் மாதம் இரண்டாம் அமர்வுகள் கூடும் நிலையில் 19 ஆம் திருத்த சட்டத்தை நீக்கி 20 ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவரும் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
Leave A Reply

Your email address will not be published.